இறுதிகட்டத்தை நெருங்கியது சிலாம்பாக்கம் அணைக்கட்டு பணி
காஞ்சிபுரம், மே 23- உத்திரமேரூர் அருகே நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.35 கோடியே 21 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சிலாம்பாக்கம் அணைக்கட்டு பணிகள் இறுதிகட்டத்தை அடைந்துள்ளன. செய்யாற்றின் குறுக்கே சிலாம்பாக்கம்-புதுப்பாளையம் கிராமங்களுக்கு இடையே கட்டப்படும் இந்த அணைக்கட்டு 480 மீட்டர் நீளமும், 1.8 மீட்டர் உயரமும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாயும் பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் அமைக்க வேண்டும் என விவசாய சங்கங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நீண்டகாலமாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்தக் கோரிக்கையின் அடிப்படையில் ஏற்கெனவே பழையசீவரம், வாயலூர், ஈசூர் வள்ளிபுரம் ஆகிய பகுதிகளில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. மாகரல் கிராமப் பகுதியில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் சிறிய தடுப்பணையும் அமைக்கப்பட்டுள்ளது. நீர்ப்பாசன பலன்கள் இந்த புதிய அணைக்கட்டின் மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிலாம்பாக்கம், வெங்காரம், ஒழுகரை, மாகரல் ஆகிய கிராமங்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில்: புதுப்பாளையம்,அரசாணை பாளையம், வயலாத்தூர் உள்ளிட்ட 10 கிராமங்கள் மொத்தம் 1,516 ஏக்கர் விவசாய நிலங்களுக்கும், வயலாத்தூர் வாய்க்காலின் மூலம் கூடுதலாக 106 ஏக்கருக்கும் நீர்ப்பாசன வசதி கிடைக்கும். இதன்மூலம் மொத்தம் 1,623 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்.மேலும் 132 விவசாய கிணறுகளுக்கு நீர் ஆதாரம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. விவசாயிகள் மகிழ்ச்சி கடந்த இரண்டு ஆண்டுகளாக வடகிழக்கு பருவமழை மற்றும் புயல் காலங்களில் ஏற்கெனவே அமைக்கப்பட்ட தடுப்பணைகளில் நீர் தேங்கி குடிநீர் ஆதாரம் மற்றும் விவசாயத்திற்கு பெரிதும் உதவியதாக பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.இரு மாவட்ட விவசாயிகளும் பயன்பெறும் வகையில் இந்த அணைக்கட்டு அமைவதால், அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் இந்த அணைக்கட்டு விரைவில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.