tamilnadu

img

குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் அடுத்த மாதம் இறுதியில் திறப்பு!

குத்தம்பாக்கம் பேருந்து நிலையம்  அடுத்த மாதம் இறுதியில் திறப்பு!

சென்னை, மே 23-
ரூ.414 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் ஜூன் மாத இறுதியில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளால் ஏற்படும் நெரிசலுக்கு தீர்வாக, வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு, கடந்தாண்டு பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து தென் மாவட்டங்களுக்கு 90 விழுக்காடு அரசு பேருந்துகள் மற்றும் மாதவரம் பேருந்து முனையத்தில் இருந்து 10 விழுக்காடு அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தே ஆம்னி பேருந்துகள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து சிஎம்டிஏ அதிகாரிகள் கூறியதாவது: குத்தம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 200க்கும் மேற்பட்ட பேருந்துகள் நிறுத்த முடியும். மாநகர பேருந்துகள், அரசு போக்குவரத்து கழக பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் சென்று வர தனித்தனி வழி உள்ளது. மேலும் இந்த பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்து நிறுத்தம், 41 கடைகள், 8 டிக்கெட் கவுண்டர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான தனி கழிவறைகள் மற்றும் 1,800 இருசக்கர வாகனங்கள் மற்றும் 250 கார்கள் நிறுத்தும் வசதியுடன், மாநிலத்தின் முதல் குளிரூட்டப்பட்ட காத்திருப்பு அறை வசதி இருக்கும். இதுவரை 90 விழுக்காடு கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.
இதர பணிகளான மின்சார இணைப்பு உள்ளிட்ட 10 சதவீத பணிகள் இம்மாதம் இறுதிக்குள்ள முடிவடையும். மேலும் முதற்கட்டமாக பெங்களூரு, தர்மபுரி மற்றும் தமிழ்நாட்டின் மற்ற வடக்கு பகுதிகளுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் குத்தம்பாக்கத்திற்கு மாற்றப்படும். இவ்வாறு அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். எனவே, இங்கு வரும் பயணிகள் வசதிக்காக, பூந்தமல்லியில் இருந்து திருமழிசை வரை மெட்ரோ திட்டத்தை நீட்டிக்க வேண்டும் என இருங்காட்டுக்கோட்டை, திருமழிசை பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.