சென்னை, டிச. 26 - அண்ணல் அம்பேத்கரை அவமதித்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலகக் கோரி, இடதுசாரிக் கட்சிகள் சார்பில் டிசம்பர் 30 அன்று தமிழகத்தில் 10 மாநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறு கிறது. இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், சிபிஐ(எம்எல்) லிபரேசன் மாநிலச் செயலாளர் பழ. ஆசைத்தம்பி ஆகியோர் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:
இடதுசாரிகள் கூட்டறிக்கை
சிபிஎம், சிபிஐ மற்றும் சிபிஐ(எம்எல்) லிபரேசன் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளின் கூட்டுக் கூட்டம் தில்லியில் நடைபெற்றது. அதில், ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிரான போராட்டங் களை ஒருங்கிணைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் மாநிலங் களவையில், அரசியல் சாசன சட்டத்தின் 75-ஆம் ஆண்டு விழா கொண்டாட்டம் மீதான விவாதத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அண்ணல் அம்பேத்கர் அவர்களை அவமதிக்கும் வகையிலும், இழிவு செய்யும் வகையிலும் பேசியதற்கு எதிராக எல்லாத் தரப்பினரும் தன்னெழுச்சியுடன் போராடி வருகின்றனர். இடதுசாரிக் கட்சிகளும் பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளன. அமித் ஷா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என இடதுசாரிக் கட்சிகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.
பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டும்
ஏற்கெனவே, தமிழ்நாட்டில் மாநகரம் - நகரங்களிலும் பல கட்ட ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ள சூழ்நிலையில் அகில இந்திய அறை கூவல் என்கிற அடிப்படையில் 1. மதுரை, 2. திண்டுக்கல், 3. திருச்சிராப்பள்ளி, 4. தஞ்சாவூர், 5. நாகப்பட்டினம், 6. திருநெல்வேலி, 7. கோயம்புத்தூர், 8. சேலம், 9. தூத்துக்குடி, 10. ஈரோடு ஆகிய 10 மாநகரங்களில் இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் வரும் டிசம்பர் 30 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஜனநாயக சக்திகளும், பொதுமக்களுக்கும் பேராதரவு அளிக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.