சென்னை, ஜன. 9 - எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு சைபர் பாதுகாப்பு உதவிப் பிரிவும், கோவையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துக்காக தகவல் தொழில்நுட்ப வெளியும் ஏற்படுத்தப் படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரி வித்துள்ளார். தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பவியல் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மின்னணு நிறு வனம் (எல்காட்) சார்பில் ‘உமாஜின் தமிழ்நாடு 2025’ என்ற தகவல் தொழில்நுட்ப உச்சிமாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வியாழனன்று (ஜன.9) தொடங்கியது. சென்னையில் 3-வது முறையாக நடைபெறும் இந்த மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசுகையில் “இந்த மாநாடு தமி ழகத்தின் நீடித்த மற்றும் நிலையான எதிர்காலத்துக்கு வழிவகுப்பதுடன், உலகளாவிய அளவில் தொழில்துறை சார்ந்த கல்வியாளர்கள், தொடக்க நிறுவனங்கள், முதலீட்டாளர்களை ஒரே கூரையின் கீழ் ஒன்றி ணைத்திருக்கிறது. ஏஐ தொழில்நுட்பம் தான் இன்றைக்கு அதிகளவில் பேசப்படும் அடுத்தகட்ட தொழில்நுட்பம். இதனால் வேலைவாய்ப்புகள் குறையாது, மேலும் பெருகத்தான் செய்யும். அந்த வகையில் ஏஐ, இணைய கருவிகள், மின்வாகன உற்பத்தி என வளரும் தொழில்நுட்பங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும் அனைத்து முன்னெடுப்பு களை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஐசிடி அகாடமி மூலம் கடந்த ஓராண்டில் 10,435 ஆசிரி யர்கள் மற்றும் 34,227 மாணவர்களுக்கு தொழில் சார்ந்த நிறுவனங்களுக்கான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஐடியில் எந்தெந்த துறைகளில் மேம்பட வாய்ப்புகள் உள்ளது என்பதை கவனித்து அந்த துறைகளில் மாணவர்களின் திறன்களை மேம்படுத்த பல்வேறு தொழில் பிரிவுகளோடு ரூ. 78 கோடியில் 13 ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. 2021-ல் 14,927 ஆக இருந்த இ-சேவை மையங்கள், 2024-ல் 33,554 ஆக இருமடங்கு உயர்ந்திருக்கிறது. நகரங்களில் மட்டும் வளர்ச்சி குவியக்கூடாது இந்த வளர்ச்சி நகரங்களில் மட்டும் குவியக்கூடாது என்பதற்காக சென்னை, கோவை மட்டுமின்றி சேலம், திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி என இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட நகரங்களில் கூட எல்காட் தொழில்நுட்ப பூங்காக்கள், சிறு தொழில்நுட்ப பூங்காக்களை நிறுவி யிருக்கிறோம். தொடர்ந்து கோவையில் ஏஐ தொழில்நுட்பத்துக்காக 2 மில்லியன் சதுர அடியில் ‘தகவல் தொழில்நுட்ப வெளி’யையும் நிறுவவுள்ளோம். புத்தொழில் நிறுவனங்களுக்கும், தொழில்முனைவோருக்கும் வழிகாட்டும் வகையில் புதிய தொழில்நுட்ப கொள்கையும் விரைவில் வெளியிடப்படும். இது டிஜிட்டல் யுகம். இனி, மக்களுடைய அனைத்து பயன்பாடுமே டிஜிட்டல் வழியாகதான் இருக்கும். இதனால் அனைத்து சிறு, குறு, நடுத்தர தொழில்நிறுவனங்களின் (எம்எஸ்எம்இ) சைபர் பாது காப்புக்காக தொழில்நுட்ப உதவி பிரிவும் ஏற்படுத்தப்படவுள்ளது”. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.