ஆன்லைன் பட்டாக்களை வழங்கக் கோரி ஜன.5-இல் மனு கொடுக்கும் இயக்கம் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பங்கேற்கிறார்
திருத்துறைப்பூண்டி, ஜன.1 - திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி நகரத்தில் குடியிருக்கும் ஆயி ரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்பு மனை கள், வீடுகளுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு அனுபவ பட்டா வழங்கப்பட்டு உள்ளது. இப்படி வழங்கப்பட்ட பட்டா மனை மற்றும் வீடுகளில் குடியிருக்கும் பயனா ளிகள் பெயரில் இது நாள் வரை ஆன்லைன் பட்டா வழங்கப்படவில்லை. மாறாக சர்க்கார் மனையாகவே தற்போது வரை உள்ளது. இதை முறைப்படுத்தி ஆன்லைனில் அப்டேட் செய்து குடி யிருப்பு உரிமையாளர்கள் பெயரில் பட்டா வழங்கப்படாததால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் எவ்வித அரசு திட்டத்தையும், தங்களுக்கான வாரிசுகளுக்கு பெயர் மாற்றம் செய்ய முடி யாமல் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் அனுபவ பட்டா வழங்கப் பட்ட உரிமையாளர்கள் பலர் தற்போது உயிருடன் இல்லை. எனவே வருவாய்த் துறை உடனே நடவடிக்கை எடுக்க கோரி யும், இரண்டு தலைமுறைகளுக்கும் மேலாக குடியிருந்து வரும் பண்ணையிட பயனாளிகள் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நகரில் வசித்து வருகின்ற னர். அவர்களுக்கு பெயர் மாற்றம் செய்து வழங்கிட வேண்டும். பண்ணை இடத்தில் பெரும்பாலும் பட்டியலின மக்கள் வசிப்ப தால் ஆதிதிராவிட நலத்துறை மூலம் நிதி வழங்கி பட்டா வழங்குவதற்கான நடவடிக் கையை அரசு மேற்கொள்ள வேண்டும். பல பத்தாண்டுகளாக கோவில் நிலத் தில் குடியிருந்து வரும் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அரசு வழி காட்டி மதிப்பு அடிப்படையில் கிரயம் செய்து கொடுத்து பட்டா வழங்க வேண்டும். சொந்த வீடு இல்லாமல் நீண்ட காலமாக வாடகை வீட்டில் வசித்து வரும் பயனாளி களுக்கு அரசின் நத்தம் புறம்போக்கு இடங் களை கண்டறிந்து அரசின் இலவச பட்டா வழங்கி வீடு கட்டித் தர வேண்டும். ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக நத்தம் புறம் போக்கில் வசித்து வருபவர்களுக்கு உட னடியாக பட்டா வழங்கிட வேண்டும். ஆட்சேபணைக்குரிய புறம்போக்கு நிலங்களில் மட்டும் நகரில் சுமார் 400- க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரு கின்றன. அவர்களுக்கு வகை மாற்றம் செய்து பட்டா வழங்கிட அரசாணை வெளி யிட வேண்டும் என பட்டா தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஜனவரி 5 ஆம் தேதி திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் வழியாக முதல்வருக்கு மனு கொடுக்கும் இயக்கம் நடைபெறுகிறது. கட்சியின் சார்பில் நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டு, நகரில் உள்ள 24 வார்டு களுக்கும் சென்று இதுவரை 3000 பய னாளிகளுக்கு மனுக்கள் வழங்கப்பட்டு உள்ளன. நகரச் செயலாளர் கோபு தலை மையில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரகுராமன் முன்னிலையில் நடைபெறும் இவ்வியக்கத்தில் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பங்கேற்கிறார். மாநிலக் குழு உறுப்பினர் நாகராஜன், மாவட்டச் செயலாளர் முருகையன், மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஜோதிபாசு, மாவட்டக் குழு உறுப்பினர் சாமிநாதன், நகர் மன்ற துணைத் தலைவர் ஜெயபிரகாஷ், நகரக் குழு உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர். அம்பேத்கர் சிலையிலிருந்து ஊர்வல மாக புறப்பட்டு, வட்டாட்சியர் அலுவல கத்தில் ஆயிரக்கணக்கான மனுக்கள் கொடுக்கப்பட உள்ளன. எனவே தமிழக அரசு தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருத்துறைப்பூண்டி நகரக் குழு சார்பில் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது.
திருக்கடையூரில் ரேக்ளா பந்தயம்: ஆலோசனைக் கூட்டம் மயிலாடுதுறை, ஜன.1 - காணும் பொங்கல் பண்டிகையையொட்டி மயிலாடு துறை மாவட்டம், திருக்கடையூரில் ரேக்ளா பந்தயம் நடத்து வது குறித்த ஆலோசனைக் கூட்டம் சன்னதி வீதியில் 8 கிராம பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் கிராம மக்கள் சார்பில் நடை பெற்றது. கூட்டத்தில் அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். திருக்கடையூரில் மாடு, குதிரை ரேக்ளா பந்தயம் ஆண்டு தோறும் காலை தொடங்கி மாலை வரை சின்னமாடு, நடுமாடு, பெரிய மாடு, கரிச்சான் குதிரை, நடுக்குதிரை, பெரிய குதிரை என அனுமதிக்கப்பட்டு பின்னர் மாடுகள், குதிரைகள் ஆறு வகைகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு காணும் பொங்கலன்று ரேக்ளா பந்தயம் நடத்துவதற்கான முதல் கட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ரேக்ளா பந்தைய நிர்வாகி பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். கூட்டத்தில் இந்த ஆண்டு எல்கை பந்தயத்தை நடத்து வது, நிர்வாகிகள் மற்றும் திருக்கடையூர், டி.மணல்மேடு, பிள்ளை பெருமாள்நல்லூர், மாணிக்கப்பங்கு, காழியப்ப நல்லூர், கிள்ளியூர், தில்லையாடி ஆகிய 7 ஊராட்சிகள் மற்றும் தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர்கள் இணைந்து சிறப்பாக நடத்துவது, 500-க்கும் மேற்பட்ட ரேக்ளா மாடு, குதிரைகளை பங்கேற்கச் செய்வது, விழாவிற்கு அமைச்சர், காவல்துறை, வருவாய்த்துறை, எம்.பி, எம்.எல்.ஏ. மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ-க்களுக்கு அழைப்பு விடுப்பது, கூடுதல் காவல்துறை பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து பேசினர். முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள், அனைத்து கட்சி முக்கிய பிரமுகர்கள் விழா குழுவினர் கலந்து கொண்ட னர்.
புதிய வாகனங்கள் வழங்க கோரிக்கை தஞ்சாவூர், ஜன.1 - அரசுத் துறைகளில் கழிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு பதில் புதிய வாகனங்கள் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தஞ்சாவூரில், அச்சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோ சனை கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் எஸ்.ஹென்றி டயாஸ் தலைமை வகித் தார். மாவட்டச் செயலாளர் ஆர்.முருகேசன், மாவட்ட பொரு ளாளர் என்.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் வி.மனோகரன், துணைச் செயலாளர் ஜி.கார்த்திகேயன், மாவட்ட தணிக்கையாளர் டி.சிட்டிபாபு, மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.செந்தில்குமார், மாவட்ட அமைப்புச் செயலாளர் மார்ட்டின் ஆரோக்கியராஜ், சிறப்பு அமைப்பாளர் ஆர்.சரவணன், கொள்கை பரப்பு செயலாளர் பி.முரளிதரன், கவுரவ ஆலோசகர் கே.ஜோதி கார்த்திக், பொறுப்பாளர் வி. முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். ஒன்றிய அரசின் போக்குவரத்து மசோதாவின்படி 15 ஆண்டுகளைக் கடந்த வாகனங்கள் அரசுத் துறையில் இயக்கப் படாமல் கழிவு செய்யப்பட்டுள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்தில் சுமார் 300 வாகனங்களும், மாநி லம் முழுவதும் சுமார் 4 ஆயிரம் வாகனங்கள் கழிவு செய்யப்பட்ட நிலையில், புதிய வாகனங்கள் வழங்கப்படாமல் இருப்பதால், ஓட்டுநர்கள் பணியின்றி மாற்றுப் பணிக்கு பயன்படுத்தப்படும் நிலையை தவிர்க்க, உடனடியாக தமிழக அரசு புதிய வாகனங் களை வழங்க வேண்டும். அரசுத் துறைகளுக்கு பயன்படுத்த ஓட்டுநர்களை வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமே தேர்வு செய்ய வேண்டும். அவுட்சோர்சிங் முறையில் நியமிப்பதை தடுக்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் தற்காலிக ஓட்டுநர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கடந்தாண்டு திருட்டு வழக்குகளில் 78 சதவீதம் கண்டுபிடிப்பு மாவட்ட காவல்துறை தகவல்
தஞ்சாவூர், ஜன.1 - தஞ்சாவூர் மாவட்டத்தில், கடந்த 2025 ஆம் ஆண்டில் நிகழ்ந்த கொள்ளை, திருட்டு வழக்குகளில் 78 சதவீதம் கண்டு பிடிக்கப்பட்டு, 76 சதவீதம் பொருள்கள் மீட்கப்பட்டன. இதுகுறித்து மாவட்டக் காவல் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் மேற்பார்வையில் காவல் அலுவலர்கள், ஆளிநர்கள் சிறப்பாக பணியாற்றியதால், குற்றச் சம்பவங்கள் வெகுவாக தடுக்கப்பட்டு, அதன் மூலம் குற்றங் களின் எண்ணிக்கை பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. இரவு ரோந்துகள் மூலம் முந்தைய ஆண்டை விட 2025 ஆம் ஆண்டில் குற்ற விகிதம் குறைந்துள்ளது. கடந்த 2025 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட கொள்ளை, களவு வழக்குகளில் 78 சதவீதம் கண்டுபிடிக்கப்பட்டு, அதில் களவு போன பொருள்கள் 76 சதவீதம் மீட்கப்பட்டன. முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது, 2025 ஆம் ஆண்டில் வழப்பறி வழக்குகள் 86 சதவீதமும், கன்னக்களவு (பூட்டு, கதவை உடைத்து திருட்டு) வழக்குகள் 33 சத வீதமும், திருட்டு வழக்குகள் 42 சதவீதமும் குறைந்துள்ளன. இதேபோல, கொலை வழக்குகள் 30 சதவீதமும், சந்தேக மரண வழக்குகள் 59 சதவீதமும், கொலை முயற்சி வழக்குகள் 66 சத வீதமும், கொடுங்காய வழக்குகள் 82 சதவீதமும் குறைக்கப் பட்டன. போக்சோ வழக்குகள்: கடந்த 2025 ஆம் ஆண்டில் 272 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பொதுமக்கள், மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதால், புகார் கொடுக்க முன் வந்ததன் அடிப்படையில், முந்தைய ஆண்டு களைவிட 2025 ஆம் ஆண்டில் போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இக்குற்றவாளிகளில் 14 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழும், 20 பேருக்கு அதிகபட்ச தண்டனையும் பெற்று சிறையில் அடைக்கப்பட்டனர். சைபர் குற்றங்களில் 47 வழக்குகள் பதியப்பட்டு, 18 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், ரூ. 1.09 கோடி முடக்கப்பட்டு, ரூ. 96.90 லட்சம் மீட்கப்பட்டு, புகார்தாரர்களிடம் ஒப்படைக்கப் பட்டது. இதில், 3 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெறப்பட்டது. மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டில் 12 கொலை வழக்கு கள், 6 கொலை முயற்சி வழக்குகள், 221 வழிப்பறி, கன்னக்களவு, திருட்டு வழக்குகள் உள்பட மொத்தம் 7,873 வழக்குகளில் தண்டனை பெறப்பட்டது. குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் 63 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.