கேஸ் விலை உயர்வை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திருவாரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மாவூர் கடைத்தெரு பகுதியில் திருவாரூர் ஒன்றிய குழு சார்பாக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும், கட்சியின் ஒன்றிய செயலாளர் ஆர்.எஸ்.சுந்தரய்யா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மக்கள் மீது கடுமையாக வரியை விதித்து வாட்டி வரும் ஒன்றிய மோடி அரசு தற்போது, சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்தியதால் மக்கள் கடும் வேதனையில் இருப்பதாகக் கூறி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.சுந்தரமூர்த்தி, பி.கோமதி, ஒன்றியக் குழு நிர்வாகிகள் உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை புதுக்கோட்டையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.பாண்டிச்செல்வி தலைமை வகித்தார் மாவட்டச் செயலாளர் பி.சுசிலா, பொருளாளர் ஜெ.வைகைராணி, விதொச மாவட்டச் செயலாளர் டி.சலோமி, மாதர் சங்க நகரச் செயலாளர் முத்துமாரி, தலைவர் நிரஞ்சனாதேவி, ஒன்றியச் செயலாளர்கள் கலைச்செல்வி, அடைக்கலமேரி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.