மதுரையில் கூடுகிறது சிபிஎம் மாநாடு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24-ஆவது மாநாட்டு அழைப்பிதழை, கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் புதனன்று வெளியிட்டார். மதுரை வடக்குவெளி வீதியிலுள்ள ஹோட்டல் டியூக்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அழைப்பிதழை வெளியிட்ட அவர், மாநாட்டு நிகழ்வுகள் குறித்து கூறிய தாவது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அகில இந்திய 24-ஆவது மாநாடு ஏப்ரல் 2 துவங்கி 6-ஆம் தேதி வரை நடை பெற உள்ளது. தமிழ்நாட்டில், அதுவும் மூதூர் என்று போற்றப்படக்கூடிய மது ரையில் இம்மாநாடு நடைபெறுவது மிக வும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாடுகள் பல கண்ட, புகழ்பெற்ற தமுக்கம் மைதானத்தில்- தோழர் சீத்தாராம் யெச்சூரி நினைவாக அமைக்கப்பட்ட நகரில் சிபிஎம் அகில இந்திய மாநாடு நடைபெறும் நிலையில், இந்த மாநா ட்டில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து தேர்ந்தெ டுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பிரதி நிதிகள் கலந்து கொள்கின்றனர்.
அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள்- கேரளா முதல் வர் பினராயி விஜயன், பிருந்தா காரத், திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் உள்ளிட்ட அகில இந்திய தலை வர்கள் கலந்து கொள்ள உள்ளனர். துவக்க நிகழ்ச்சி முதல் நாள் (ஏப்ரல் 2) காலை 8 மணிக்கு, தோழர் புத்ததேவ் பட்டாச் சார்யா நுழைவு வாயில் அருகில், பாப்பம்பாடி ஜமாவின் பெரிய மேளம், ஷேக் மஸ்தான் ஒருங்கிணைப்பில் நாதஸ்வர - தவில் கலைஞர்களின் மல் லாரி இசையுடன் மாநாட்டு நிகழ்ச்சி கள் துவங்குகின்றன. மாநாட்டில் ஏற்றப்படவுள்ள வெண் மணித் தியாகிகள் நினைவுச் செங் கொடியை, மத்தியக்குழு உறுப்பினர் உ. வாசுகியிடமிருந்து, கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் ஏ.கே. பத்மநாபன் பெற்றுக்கொள்ள, தியாகி களின் - உழைக்கும் மக்களின் உதி ரத்தில் உதித்த செங்கொடியை மூத்த தலைவர் பிமன் பாசு ஏற்றி வைக்கி றார். தொடர்ந்து, தியாகிகளுக்கு அஞ் சலி செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெறு கிறது.
பொது மாநாடு
தோழர் கோடியேரி பால கிருஷ்ணன் நினைவரங்கில் காலை 10.30 மணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்- திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக்சர்க்கார் தலைமையில் நடைபெறும் பொது மாநாட்டை அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் துவக்கிவைக்க, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் து. ராஜா. சிபிஐ (எம்எல்) விடுதலை பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் மனோஜ் பட்டாச்சார்யா, அகில இந்திய பார்வர்டு பிளாக் பொதுச்செயலாளர் ஜி. தேவராஜன் ஆகியோர் பங்கேற்று வாழ்த்திப் பேச உள்ளனர். கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவருமான கே. பாலகிருஷ்ணன் வரவேற்புரையாற்ற, வரவேற்பு குழு செயலாளர் சு. வெங்கடேசன் எம்.பி. மற்றும் மாநிலத் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
பிரதிநிதிகள் மாநாடு
பொது மாநாட்டைத் தொடர்ந்து, ஏப்ரல் 2 பிற்பகலில் பிரதிநிதிகள் மாநாடு துவங்குகிறது. தொடர்ந்து ஏப்ரல் 6 நண்பகல் வரை 5 நாட்களுக்கு பிரதிநிதிகள் மாநாடு நடைபெறுகிறது. இதில், இந்தியா முழுவதுமிருந்து சுமார் ஆயிரம் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். பெருமுதலாளிகளுக்கு ஆதரவான கொள்கைகளை செயல்படுத்துவதுடன், மக்களை மத அடிப்படையில் பிளவுபடுத்தி, ஒன்றிய பாஜக அரசானது, நாட்டை எதேச்சதிகாரப் பாதையில் கொண்டு சென்று கொண்டிருக்கும் சூழலில், ஜனநாயகம், மக்கள் உரிமைகள் பாதுகாப்பு, மாநில அரசுகளின் உரிமைப் பறிப்பு, எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு காட்டப்படும் நிதி பாரபட்சம் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. ஒன்றிய பாஜக அரசின் மதவெறி அரசியலை எவ்வாறு முறியடிப்பது; கார்ப்பரேட் கொள்ளையை எவ்வாறு முறியடிப்பது; நாடு முழுவதும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் உரிமைகளை எவ்வாறு பாதுகாப்பது; தொழிற்சங்க உரிமைகள் மற்றும் மாநில உரிமைகளை எவ்வாறு பாதுகாப்பது என்ற விவாதங்களின் அடிப்படையில், வரும் காலத்தில் முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிராக உழைக்கும் மக்களைத் திரட்டவும், பாஜகவை முறியடிப்பதற்குமான செயல் திட்டங்கள் மாநாட்டில் வகுக்கப்பட உள்ளன.
கலைநிகழ்ச்சிகள் - கருத்தரங்குகள்
மாநாடு நடைபெறும் 5 நாட்களும் மாலை நேரங்களில் தோழர் கே.பி.ஜானகியம்மாள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி மேடையில் கலைநிகழ்ச்சிகள் - கருத்தரங்குகள் நடைபெறுகின்றன. இதில், 3 மாநிலங்களின் முதல்வர்கள் - அமைச்சர்கள், அறிஞர்கள் - எழுத்தாளர்கள், கலைஞர்கள், திரைப்பட இயக்குநர்கள் உள்ளிட்ட ஆளுமைகள் பங்கேற்கின்றனர்.
சாலமன் பாப்பையா, ராஜூ முருகன், சசிகுமார்
இதன்படி ஏப்ரல் 2 மாலை 5 மணிக்கு பாப்பம்பாடி ஜமா பெரிய மேளம், திண்டுக்கல் சக்தி போர்ப்பறை குழுவினரின் கலைநிகழ்ச்சிகளும், தமிழறிஞர் சாலமன் பாப்பையா, திரைப்பட இயக்குநர்கள் ராஜூ முருகன், சசிகுமார் ஆகியோரின் உரை வீச்சும் அரங்கேறுகின்றன.
விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, வெற்றிமாறன்
ஏப்ரல் 4 அன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் கலைநிகழ்ச்சியில் கேரள மாப்ளா முஸ்லிம் பெண்கள் குழுவின் ஆடல், பாடல், சென்னைக் கலைக்குழுவின் நாடகம், கானா விமலாவின் பாடல்கள் ஆகியவை இடம்பெறுகின்றன. திரைக்கலைஞர் விஜய் சேதுபதி, திரைப்பட இயக்குநர்கள் சமுத்திரக்கனி, வெற்றிமாறன் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.
பிரகாஷ் ராஜ், ரோகிணி, மாரி செல்வராஜ், த.செ. ஞானவேல்
ஏப்ரல் 5 அன்று மாலை கர்நாடக மாநிலம் டொல்லு குனிதா பெண்கள் குழுவின் போர்முரசு நடனம், சித்தன் ஜெயமூர்த்தியின் மக்களிசைப் பாடல்கள், திரைக்கலைஞர் ரோகிணி வழங்கும் ‘ஒராள்’ நாடகம் ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. திரைக்கலைஞர் பிரகாஷ் ராஜ், திரைப்பட இயக்குநர்கள் மாரி செல்வராஜ், த.செ. ஞானவேல் ஆகியோர் உரை நிகழ்த்துகின்றனர்.
நாள்தோறும் மக்களிசைப் பாடல்கள்
இவை தவிர, மாநாடு நடைபெறும் 5 நாட்களும் கரிசல் குயில் கிருஷ்ணசாமி, பாண்டிச்சேரி உமா, மேட்டூர் சதி, புதுக்கோட்டை சுகந்தி, பாண்டிச்சேரி அன்புமணி, செல்வம், சேகர், உடுமலை துரையரசன், புதுவை விநாயகம், அமரநாதன் ஆகியோரின் மக்களிசைப் பாடல்கள் மகிழ்விக்க உள்ளன. நிகழ்ச்சிகளை மதுரை கரிசலார் ஒருங்கிணைக்கிறார். இவ்வாறு பெ. சண்முகம் கூறினார். செய்தியாளர்கள் சந்திப்பின்போது மத்தியக் குழு உறுப்பினர் உ. வாசுகி மாநாட்டு வரவேற்புக்குழு செயலாளர் சு. வெங்கடேசன் எம்.பி., மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணேசன், புறநகர் மாவட்டச் செயலாளர் கே. ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.