மதுரை:
தமிழகத்தில் கொரோனா பரவலின் வீரியம் குறையாத நிலையில் மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்குவது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுவிட்டன.
அழகர்கோவிலிருந்து புறப்பட்டு வரும் கள்ளழகர் மதுரையில் மே 3-ஆம் தேதி ஆற்றில் இறங்குவதாக இருந்தது. கொரோனா வைரஸ் பரவல் தீவிரம் காரணமாக அழகர்கோவிலிருந்து அவர் புறப்படமாட்டார். இதனால் முக்கிய நிகழ்வுகளான எதிர்சேவை, வைகையாற்றில் இறங்குவது, மண்டூக மகரிசிக்கு மோட்சம் கொடுப்பது, இராமராயர் மண்டகப்படி தண்ணீர் பீச்சுதல், வண்டியூர் வீரராகவப்பெருமாள் கோவிலில் எழுந்தருளல், தேனுர் மண்டபத்தில் நடைபெறும் மண்டூக மக ரிசிக்கு மோட்சம் அளித்தல், இராமராயர் மண்டகப்படி தசாவதார நிகழ்ச்சி, மைசூர் மண்டகப்படி பூப்பல்லக்கு ஆகியவை ரத்து செய்யப்பட்டது.
பல்லாண்டு காலமாக நடைபெற்ற உலகப்புகழ்பெற்ற இத்திருவிழா இடைநில்லாமல் இருப்பதற்காக பட்டாச்சாரியார்களின் கூறியதன் அடிப்படையில் மே 8-ஆம் தேதி நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மண்டூக மக ரிசிக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி, புராணம் வாசித்தல் நிகழ்ச்சி மட்டும் உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி கோவிலின் உட்பிரகாரத்தில் நடத்தப்படும். இதையும் பார்க்க பொதுமக்களுக்கு அனுமதியில்லை. மக்கள் www.tnhrce.gov.in, யூ டியூப், முகநூல் மூலமாக அன்று மாலை 4.30 மணி முதல் 5 மணி வரை காணலாம்.
இந்தத் தகவலை கள்ளழகர் திருக்கோவில் நிர்வாகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.