கம்யூனிஸ்ட் இயக்கம் சந்தித்த சதி வழக்குகள்!
கம்யூனிஸ்ட் இயக்கம் தனது நூற்றாண்டு பயணத்தில் சந்தித்துள்ள அடக்குமுறைகளை வேறு எந்த இயக்கமும் சந்தித்ததில்லை. கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வளர்ச்சியை எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தொடுத்த தாக்குதல்கள், ஏவிய அடக்குமுறைகள், கைது, தடை, அவதூறு வழக்குகள் என நெருப்பாற்றில் நீந்தித்தான் இந்த இயக்கம் வளர்ந்தது. அக்காலத்தில் கம்யூனிஸ்டுகள் மத்தியில், “ஏறினால் ரெயில்! இறங்கினால் ஜெயில்!” எனும் சொலவடை இருந்தது. கம்யூனிஸ்ட் இயக்கத்தை வளர விடாமல் தடுக்க தொடர்ந்து ஏராளமான பொய் வழக்குகளை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தொடுத்து வந்தது. சென்னை சதி வழக்கு, மதுரை சதி வழக்கு, நெல்லை சதி வழக்கு, திருச்சி சதி வழக்கு என ஊர் ஊருக்கு சதி வழக்குகளை ஜோடித்தது. அவற்றின் முக்கியமான மூன்று அகில இந்திய அளவில் பிரபலமான சதி வழக்குகளை இக்கட்டுரையில் பார்ப்போம்.
பெஷாவர் சதி வழக்குகள்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை 1920 இல் தாஷ்கண்டில் உருவான உடனேயே இந்திய மண்ணில் கட்சியை உருவாக்கிட முயற்சிகள் தொடங்கின. அதன் ஒரு பகுதியாக கிலாபத் இயக்கத்தை ஒட்டி துருக்கி சென்ற முஜாஹிதீன்கள் அங்கிருந்து இந்திய விடுதலைக்கு உதவியும் ஆயுதமும் வேண்டி சோவியத் யூனியன் சென்றனர். அப்படி வந்த முஜாஹிதீன்களுக்கு அங்கு கம்யூனிஸ்ட் அகிலத்தால் உருவாக்கப்பட்ட கம்யூனிச பல்கலைக்கழகத்தில் மார்க்சிய பாலபாடத்தைச் சொல்லிக் கொடுத்து அவர்களை தயார் செய்து இந்தியாவுக்கு அனுப்பினார்கள். இதை தனது உளவாளிகள் மூலம் மோப்பம் பிடித்த பிரிட்டிஷ் அரசு அவர்களை இந்தியாவிற்குள் நுழையாதபடி கைது செய்தது. 1922 முதல் 24 வரை அவ்வாறு 5 சதி வழக்குகள் போடப்பட்டன. இவ் வழக்குகளே பெஷாவர் சதி வழக்குகள் எனப்படும்.
இவ் வழக்குகளில் பெரும்பாலும் இஸ்லாமிய முஜாஹிதீன்கள் கைது செய்யப்பட்டார்கள். மாட்சிமை பொருந்திய பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக புரட்சியை உருவாக்க மாஸ்கோவில் இருந்து சதி செய்தார்கள் என இவர்கள் மீது வழக்கு ஜோடிக்கப்பட்டது. இந்தியாவில் பிரிட்டிஷ் இறையாண்மைக்கு எதிராக சதி செய்தார்கள் என குற்றம் சாட்டப்பட்டாலும் இந்திய மண்ணில் இவர்கள் செய்த எந்த குற்றமும் ஆதாரத்துடன் நிரூபிக்கப்படவில்லை. ரஷ்யாவுக்கு சென்றார்கள், அங்கு பயிற்சி பெற்றார்கள் என்று மட்டுமே நிரூபிக்கப்பட்டது. இருந்தாலும் இவ்வழக்குகளில் அவர்களுக்கு ஓர் ஆண்டு முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது.
1947 ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தான் பிரிந்த சமயம், பாகிஸ்தான் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் பொதுச் செயலாளராக இருந்த தோழர் மன்சூர் இச்சதி வழக்கில் தண்டிக்கப்பட்ட குற்றவாளி ஆவார். நான்காவது பெஷாவர் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் கம்யூனிஸ்ட் கட்சியின் தாஷ்கண்ட்டில் அமைக்கப்பட்ட முதல் கிளைச் செயலாளர் முகமது ஷாஃபி ஆவர். இந்த சதி வழக்குகளில் அளிக்கப்பட்ட கடுமையான தண்டனைகளுக்கு கம்யூனிஸ்ட் அகிலம் மட்டுமே கடும் கண்டனத்தை தெரிவித்தது. வேறு எந்த இயக்கமும் கண்டிக்கவில்லை. இச்சதி வழக்கு இந்திய மண்ணில் கம்யூனிஸ்ட் கட்சி பரவுவதை தடுக்க முடியவில்லை
கான்பூர் சதி வழக்கு
பெஷாவர் சதி வழக்குகள் என்ற பெயரில் ஆரம்பித்த கம்யூனிஸ்ட் எதிர்ப்பு நடவடிக்கைகள் அடுத்து கான்பூர் சதி வழக்காக தொடர்ந்தன. பெஷாவர் சதி வழக்குகள் முடிவடைந்து வந்த கட்டத்தில் கான்பூர் சதி வழக்குகளுக்கான நடவடிக்கை துவக்கப்பட்டன. கம்யூனிஸ்ட்களின் தேசபக்த உணர்வின் மீது அவதூறு பொழிவது, அந்நிய நாடுகளின் ஏஜென்ட்கள் என்று அவர்கள் மீது முத்திரை குத்துவது, தேசிய இயக்கத்தில் பங்கு பெற்ற இடதுசாரி மனோபாவம் கொண்ட காங்கிரஸ்காரர்கள் மற்றும் கம்யூனிஸ்டுகளுக்கு இடையே பிளவை ஏற்படுத்துவது ஆகிய சூழ்ச்சிகளின் செயல்பாடாகத்தான், வளர்ந்து வரும் கம்யூனிச அபாயத்தை அழித்துவிட வேண்டும் என்ற முனைப்புதான், இச்சதி வழக்கின் நோக்கமாகும் கம்யூனிஸ்டுகளுடன் இடதுசாரி எண்ணம் கொண்டவர்கள் சேர்ந்து செயல்பட வாய்ப்புள்ளது; அது மிக மிக அபாயமானது என பிரிட்டிஷ் அரசு உளவுத்துறை அறிக்கை கூறுகிறது. கான்பூர் சதி வழக்கில் பின்னர் 13 தோழர்கள் சேர்க்கப்பட வேண்டிய பெயர்ப் பட்டியலில் இடம்பெற்றனர். மத்திய உளவுத்துறை இயக்குநரான செசில் ஷுயே தனது ரகசிய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: 1. எம் என் ராய் 2. முசாபர் அகமது 3. சவுகத் உஸ்மானி 4. குலாம் உசேன் 5. சிங்காரவேலு செட்டியார் 6.
எஸ்.ஏ.டாங்கே 7. ஆர்.சி சர்மா 8. நளினி குப்தா 9. எம். பி .எஸ். வேலாயுதம் 10. டாக்டர் மணிலா ஷா 11. சம்பூர்ணானந்தா 12. சத்திய பக்தா 13. சம்சுதீன் ஆகியோரே அவர்கள். ஆனால் சம்சுதீன், எம்.பி.எஸ். வேலாயுதம், டாக்டர் மணிலா ஷா, சம்பூர்ணானந்தா, சத்திய பக்தா ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்கு பின்னர் விலக்கிக் கொள்ளப்பட்டது. மீதமுள்ள எட்டு தோழர்கள் மீது மட்டும் இந்திய குற்றவியல் சட்டம் 121 ஏ (தேசத் துரோகம்) பிரிவின்படி வழக்கு தொடர அரசு முடிவு செய்தது. 1924 பிப்ரவரி 17ஆம் தேதி தொடுக்கப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் எம். என். ராய் ஜெர்மனியில் இருந்தார். பிரான்சு கட்டுப்பாடில் இருந்த பாண்டிச்சேரியில் ஷர்மா இருந்தார். இருவரும் பிரிட்டிஷ் அதிகார வரம்புக்கு வெளியே இருந்தார்கள்.
குலாம் உசேன் கான்பூருக்கு அழைத்து வரப்படவே இல்லை. சிங்காரவேலர் கடுமையான நோய்வாய்ப்பட்டு இருந்ததால் ஜாமீன் வழங்கப்பட்டு சென்னையில் வீட்டு காவலில் வைக்கப்பட்டார். முசாபர் அகமது, உஸ்மானி, டாங்கே, நளினிகுப்தா ஆகிய நான்கு பேர் மீது மட்டும் 1924 மார்ச் 17 அன்று விசாரணை தொடங்கியது. கான்பூர் நீதிமன்றத்தில் இணை மாஜிஸ்டிரேட் வி.வி. கிறிஸ்டி என்பவர் தலைமையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அவர்கள் மீது சாட்டப்பட்ட முக்கியமான குற்றச்சாட்டு: கம்யூனிஸ்டு அகிலம் என்ற புரட்சிகர அமைப்பு ஐரோப்பாவில் உள்ளது. அதில் உள்ள ஒரு பிரிவினர் இந்தியாவில் அதன் கிளையை அமைக்க முயல்கின்றனர். அதன் நோக்கம் பிரிட்டிஷ் மன்னரின் சுயாதிபத்திய உரிமையை பறிப்பதாகும் என குறிப்பிடப்பட்டது. விசாரணை 1924 ஏப்ரல் 22 பிரிட்டிஷ் நீதிபதியான ஹெச்.இ.ஹோம்ஸ் ஐ.சி.எஸ் முன்னிலையில் தொடங்கியது. ஓராண்டுக்கு முன்னால் சவுரிசவுரா வழக்கில் 172 விவசாயிகளுக்கு மரண தண்டனை வழங்கிய ‘மகா புண்ணியவான்’ இவர். இப்படிப்பட்ட நீதிபதியினால் தங்கள் மீதுள்ள வழக்கு விசாரிக்கப்படக்கூடாது என குற்றம் சாட்டப்பட்டவர்கள் கவர்னர் ஜெனரலுக்கு மனு அனுப்பினார்கள். ஆனால் அது பரிசீலிக்கப்படாமல் நிராகரிக்கப்பட்டது .சுமார் ஒரு மாதம் நடைபெற்ற விசாரணை முடிவடைந்து குற்றம் சாட்டப்பட்ட நாலு பேருக்கும் நாலு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
தண்டனையை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் அவர்கள் மனு செய்தார்கள். மனு அங்கே தள்ளுபடி செய்யப்பட்டது. பெஷாவர் வழக்கு போலின்றி கான்பூர் சதி வழக்கு சர்வதேச அளவிலும் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தியது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக இயக்கங்களை பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியது .வழக்குக்கு ஆதரவாக நிதி வசூல் செய்யப்பட்டது. சோசலிசப் பிரச்சாரம், கம்யூனிச பிரச்சாரம் பிரிட்டனில் அனுமதிக்கப்பட்டுள்ளபோது இந்தியாவில் ஏன் அதை தடை செய்ய வேண்டும் என வலுவாக அப்போதைய தொழிலாளர் கட்சி அரசிடம் எழுப்பப்பட்டது. அதன் பெயர்தான் தொழிலாளர் கட்சியே தவிர, அது ஏகாதிபத்திய ஆதரவுக் கட்சியாகவே இருந்தது என்பதை இவ்வழக்கு அம்பலப்படுத்தியது. இவ்வழக்கில் சிறை வைக்கப்பட்ட தோழர் முசாபர் அகமது கடுமையான சிறைக் கொடுமையை அனுபவித்த காரணத்தால் உடல் நலம் பெரிதும் பாதிக்கப்பட்டு மரணப்படுக்கைக்குச் சென்றதன் பின்னணியில் விடுதலை செய்யப்பட்டார். உஸ்மானி போன்றவர்கள் கை கால்களில் விலங்கிடப்பட்டு மைல் கணக்கில் நடத்திச் செல்லப்பட்டனர்.