tamilnadu

img

மோடி அரசைக் கண்டித்து இன்று மீனவர்கள் கருப்புக்கொடி போராட்டம்....

மதுரை:
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் திங்களன்று தொடங்குகிறது. இந்தக் கூட்டத் தொடரில் மீனவர்களின் நலனை காவு கொடுக்கும் இந்தியக் கடல் மீன் வள மசோதாவை  ரத்து செய்ய வலியுறுத்தி இராமேஸ்வரம் உட்பட மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல், படகுகளில் கருப்புக்கொடி ஏற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். 

பாரம்பரிய மீனவர்கள் 12 கடல் மைல் வரை மட்டுமே சென்று மீன்பிடிக்க வேண்டும். அதற்கு அப்பால் சென்று மீன்பிடிக்க அனுமதியில்லை. மீறினால் படகுகள் பறிமுதல் செய்யப்படும். ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். மீனவர்கள் மீன்பிடிக்குமுன் ஒரு கட்டணத்தை “நுழைவுக் கட்டணமாக” செலுத்த வேண்டுமென்கிறது ஒன்றிய அரசு.மீனவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் மத்திய அரசின் சட்டங்களை எதிர்த்து இன்று மீனவர்கள் தங்களது படகுகளில் கருப்புக்கொடி ஏற்றி தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்க உள்ளனர்.புதிய சட்டம் நடைமுறைக்கு வந்தால் மீனவமக்கள் கடற்கரையிலிருந்து, அப்புறப்படுத்தப் படுவர். பன்னாட்டு கம்பெனிகளுக்கும், அனல் மின் நிலையங்களுக்கும் கடற்கரை தாரைவார்க்கப்படும். வெளிநாட்டுக் கப்பல்களுக்கு இந்தியப் பிரத்தியேகப் பொருளாதார மண்டலத்தில் மீன்பிடிக்கும் அனுமதி தற்போது இல்லை. தற்போது மோடி  அரசு எந்த நிறுவனங்களுக்கும், எந்த வகையிலான கப்பல்களுக்கும் உரிமம்வழங்க முடியும் சட்ட திருத்தம் செய்யப்போவதாக மீனவர்கள் கூறுகின்றனர்.

மேலும் வெளிப்பொருத்து இயந்திரம் பயன்படுத்தப்படும் வள்ளம் மற்றும் கட்டுமரங்களும் கப்பல்களாகக் கணக்கில் கொள்ளப் பட்டு, ‘வணிகக் கப்பல் சட்டம், 1958’-ன் கீழ் பதிவுசெய்யப்பட்டால் மட்டுமே மீன்பிடி உரி மங்கள் கொடுக்கப்படும் என்று சொல்கிறது. நிலப்பரப்பிலிருந்து 12 கடல் மைல் வரை அண்மை கடல், 12 கடல் மைல் முதல் 200 கடல் மைல் வரை சிறப்புப் பொருளாதார மண்டலம், 200 கடல் மைலுக்கு அப்பால் பன்னாட்டு கடல் என்று வரையறை செய்யப்பட்டுள்ளது.சிறு மீனவர்களின் தொழில் நிலையும், பெரும் வணிகக் கப்பல்களின் தொழில் நிலையும் வெவ்வேறானவை. இரண்டையும் ஒன்றாக வரையறுப்பது தவறு. தற்போது மத்திய அரசு கொண்டுவரவுள்ள சட்டம் சிறிய அளவில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்களை முற்றாக வெளியேற்றும் நடவடிக்கையாகும் என மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.