tamilnadu

img

பழங்குடியினர் காட்டுநாயக்கன் சாதிச்சான்றிதழ் கோரி பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டம்

மதுரை, நவ.7-  பழங்குடியினர் காட்டுநாயக்கன் சாதிச் சான்றிதழ் வழங்கக்கோரி மதுரை பரவை சத்தியமூர்த்தி நகரில் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சி சத்தியமூர்த்தி நகர் பகுதியில் எஸ்டி பழங்குடியினர் காட்டுநாயக்கன் என சாதிச் சான்றிதழ் வழங்க கோரி வகுப்புகளை புறக்கணித்து 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் என  1500-க்கும்  மேற்பட்டோர் குடும்பத்துடன் நவம்பர் 7 வியாழக்கிழமையன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.   பரவை பேரூராட்சி 3 மற்றும் 4 ஆவது வார்டு சத்தியமூர்த்தி நகரில் இந்து காட்டுநாயக்கன் சமுதாயத்தை சேர்ந்த மக்கள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.  இவர்களின் குழந்தைகள் 500க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் பரவை, சமயநல்லூர், சத்தியமூர்த்தி நகர் ஆகிய அரசு பள்ளிகளில் பயின்று வருகின்றனர்.  இந்த நிலையில் இவர்களுக்கு எஸ்டி காட்டுநாயக்கன் பழங்குடியினர் என்ற பெயரில் கடந்த ஆண்டு  வரை சாதி சான்றிதழ் வழங்கப்பட்டு வந்துள்ளது. கடந்த ஓராண்டாக எஸ்டி காட்டுநாயக்கன் பழங்குடியினர் என்ற பெயரில் சாதி சான்றிதழ் வழங்க முடியாது என கோட்டாட்சியர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.  இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்து ஒரு ஆண்டுக்கு மேலாகியும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காத மாவட்ட ஆட்சியர்,கோட்டாட்சியர் ஆகியோரைக் கண்டித்து  500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ - மாணவிகள் வகுப்புகளை  புறக்கணித்தும்,  அவர்களது பெற்றோர்கள் 1500 பேர் மற்றும் காட்டுநாயக்கன் சமூக மக்கள் சத்திய மூர்த்தி நகரில்  வனகாளியம்மன் கோவில் மந்தை திடலில் வியாழக்கிழமையன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த சமயநல்லூர் காவல்துறையினர் மற்றும் மதுரை வடக்கு தாசில்தார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சாதிச்சான்றிதழ் வழங்கும் வரை போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.  மாலை 6 மணி வரை போராட்டம் நடைபெற்றது.  மேலும் தங்களது கோரிக்கை நிறைவேறும் வரும் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபடப் போவதாக பழங்குடி சமூக மக்கள் தெரிவித்தனர்.