சென்னை, டிச. 26 - சுரண்டல் அமைப்பு முறைக்கு எதிராகவும், சாதிய ஆணவ சக்திகளை எதிர்த்து மக்கள் ஒற்றுமையை உரு வாக்கவும் உழைத்த தலைவர்- தோழர் ஆர். நல்லகண்ணு என்று நூற்றாண்டு துவக்க விழாவில் தமிழக முதல்வர் மற்றும் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் புகழாரம் சூட்டினர். இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் ஆர்.நல்ல கண்ணு, டிசம்பர் 26 அன்று 100-ஆவது அகவையை எட்டுகிறார். இதையொட்டி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு அலுவலகமான பாலன் இல்லத்தில், கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் தலைமையில் தோழர் ஆர். நல்லகண்ணு நூற்றாண்டுத் துவக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் செங்கொடியை தோழர் ஆர். நல்லகண்ணு ஏற்றினார். இத னை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில், திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தோழர் ஆர். நல்ல கண்ணுவிற்கு ஆடைபோர்த்தி, ‘தாய்’ நாவல் மற்றும் திருவள்ளுவர் சிலை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ் ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மூத்த தலைவர் டி.கே. ரங்கராஜன், மாநி லக்குழு உறுப்பினர்கள் ஐ. ஆறுமுக நயினார், ஆர். பத்ரி, இரா. சுதீர், மாவட்டச் செயலாளர்கள் ஆர். வேல்முருகன் (தென் சென்னை), ஜி. செல்வா (மத்திய சென்னை), எம்.ராமகிருஷ்ணன் (வட சென்னை), சி. பத்மநாபன் (கோவை) ஆகியோர் தோழர் நல்லகண்ணுவிற்கு பயனாடை போர்த்தி வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். மூத்த தலைவர் பழ. நெடுமாறன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், திமுக பொருளாளர் டி.ஆர். பாலு எம்.பி., அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., டி.கே.எஸ். இளங்கோவன், மமக பொதுச்செயலாளர் அப்துல் சமது, சிபிஐ (எம்எல்-எல்) விடுதலை செயலாளர் பழ.ஆசைத்தம்பி, கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன், ஐயுஎம்எல் துணைத்தலைவர் அப்துல் ரஹ்மான், ஆம் ஆத்மி கட்சி தலைவர் வசீகரன், மூத்த தொழிற் சங்க தலைவர் குசேலர், மே 17 இயக்க நிர்வாகி திருமுருகன் காந்தி, சிபிஐ மாநில துணைச் செயலாளர்கள் மு.வீரபாண்டியன், என். பெரியசாமி உள்ளிட்டோரும் தோழர் நல்ல கண்ணுவிற்கு வாழ்த்து தெரிவித்தனர்.
திருவைகுண்டம் அரசு மருத்துவமனை கட்டிடத்திற்கு ஆர். நல்லகண்ணு பெயர்
இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவரான தோழர் ஆர். நல்லகண்ணு, புதனன்று சென்னையில் நடைபெற்ற அவரது நூறாவது பிறந்த நாள் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை ஒன்றை விடுத்தார். அதனையேற்று, அவர் பிறந்த திருவைகுண்டம் அரசு மருத்துவமனையை சி.டி. ஸ்கேன் வசதியுடன் தரம் உயர்த்தி, கூடுதல் வசதிகளுடன் புதிய மருத்துவமனைக் கட்டிடம் கட்டித் தருவதற்கு உத்தரவு பிறப்பித்தார். அத்துடன், கடந்த 85 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் பணியையே எப்போதும் தனது தலையாயக் கடமையாகக் கொண்டு செயல்பட்டு வரும் தன்னலமற்ற ‘தகைசால் தமிழர்’ தோழர் ஆர்.நல்லகண்ணு அய்யாவின் பெருமையைப் போற்றும் வகையில், திருவைகுண்டத்தில் அமையவிருக்கும் புதிய மருத்துவமனைக் கட்டடத்திற்கு “தோழர் நல்லகண்ணு நூற்றாண்டுக் கட்டிடம்” எனப் பெயரிடவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக, தமிழக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.