tamilnadu

img

சமூக நீதி, சமத்துவக் கொள்கைத் திட்டங்களுக்கு உறுதுணையாக இருப்பவர் தோழர் நல்லகண்ணு

சென்னை, டிச. 26 - இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர்- தோழர் ஆர். நல்லகண்ணு பிறந்த நாள் விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர். அப்போது அவர்கள் பேசியது வருமாறு வாழ்த்த அல்ல, வாழ்த்துப் பெறவே வந்திருக்கிறேன் : முதல்வர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துப் பேசுகையில், “எல்லோருக்கும் எல்லாம், சமூக நீதி, சமத்துவத்தை நிலை நாட்டிட வேண்டும் என்ற உணர்வோடு நிறைவேற்றப்படும் திட்டங்களுக்கெல்லாம், உறுதுணையாக விளங்கிக் கொண்டிருக்கக் கூடியவர் அய்யா நல்லகண்ணு. அமைதியாக, அடக்கமாக அதே நேரத்தில் ஆழமாக எதையும் சிந்தித்து வெளிப்படுத்தக் கூடியவர். அப்படிப்பட்ட அய்யா நல்லகண்ணுவை உங்களோடு சேர்ந்து வாழ்த்துவதில் பெருமைப்படுகிறேன். பொதுவுடைமை இயக்கத்திற்கும், அய்யா நல்லகண்ணுவிற்கும் ஒருசேர நூற்றாண்டு. இப்படி ஒரு பொருத்தம் யாருக்கும் கிடைத்ததில்லை. அவரை வாழ்த்த வரவில்லை;  வாழ்த்தை பெற வந்திருக்கிறேன்” என்று தெரிவித்தார். இடதுசாரிகள் எழுச்சியே வலதுசாரிகளுக்கு வீழ்ச்சி விசிக தலைவர் தொல். திருமாவளவன்  எம்.பி. பேசுகையில், “உடலாலும் கட்டுப்பாடோடு வாழ்ந்திருக்கிறார் தோழர் ஆர்.என்.கே. பொதுவாழ்வில் எவ்வளவு இடர், இன்னல், அழுத்தம், மன உளைச்சல் இருக்கும். அவற்றையெல்லாம் தாக்குப்பிடிக்கிறது என்றால் அந்த உள்ளம் தூய்மையானதாக வலிமையான உள்ளது என்று பொருள். அத்தகைய அளப்பரிய சாதனையை என். சங்கரய்யா, ஆர். நல்லகண்ணு ஆகியோர் சாதித்துள்ளனர். இடதுசாரிகளின் எழுச்சியே வலதுசாரிகளின் வீழ்ச்சி. தோழர் ஆர்என்கே பல்லாண்டு காலம் வாழ வேண்டும். அவரது இருப்பே நமக்கு ஒரு பாதுகாப்பு” என்றார்.

3“சுரண்டலுக்கு எதிராக, மக்கள் ஒற்றுமைக்காக 82 ஆண்டுகள் உழைத்த தலைவர்!”

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் கே. பாலகிருஷ்ணன் பேசியதாவது: தலைசிறந்த கம்யூனிஸ்ட் தலைவர், விடுதலைப் போராட்ட வீரர், எளிமையின் இலக்கணம் தோழர் ஆர்.என்.கே. நூற்றாண்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் பெருமையடைகிறோம். நூற்றாண்டு விழா என்பது மனித வாழ்க்கையில் ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கிற பெரும்பெரும் வாய்ப்பு. இந்த நூறாண்டுகளில், 82 ஆண்டுகள் உழைப்பாளி மக்களின் நலனுக்காகவும், சமூக ஒடுக்குமுறை, சாதிய ஆணவ சக்திகளை எதிர்த்து, மக்கள் ஒற்றுமையைக் பாதுகாக்கவும், சுரண்டல் கொடுமைகளுக்கு முடிவுகட்டி, எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் என்ற லட்சியத்திற்காகவும் நீண்ட போராட்டத்தை நடத்தியவர் தோழர் ஆர்.என்.கே. 

விடுதலைப் போராட்டக் கால அடக்குமுறை, வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நெஞ்சை நிமிர்த்தி நடத்திய போராட்டத்தில் சிறைச்சாலையில் இழைக்கப்பட்ட கொடுமைகள், திருநெல்வேலி மாவட்டத்தில் பண்ணையார் கொடுமையை எதிர்த்து நடந்த போராட்டத்தில் காட்டிய உறுதி போன்ற- தோழர் ஆர். நல்லகண்ணுவின் வாழ்க்கை, ஒரு வரலாறு மட்டுமல்ல, எதிர்கால இளைய சமூகத்திற்கு பாடப்புத்தகமாக திகழும். அதன் காரணமாகத்தான் தோழர்கள் என். சங்கரய்யாவிற்கும், ஆர்.நல்லகண்ணுவிற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘தகைசால் தமிழர்’ விருதை வழங்கி பாராட்டினார்.  எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கக்கூடிய, ஏற்றத்தாழ்வற்ற சமூகம், ஆண்டான் அடிமை இல்லாத சமூகம், மேல்சாதி கீழ்சாதி என்ற பாகுபாடில்லாத சமூகம், பொதுவுடமை சமூகம் அமைக்க வேண்டும் என்பதே அவர்களின் லட்சியம். அந்த வகையில், பெரும்பான்மை சிறுபான்மை என மக்களை கூறுபோடும் இந்துத்துவா மதவெறி கோட்பாடு போன்ற  அனைத்து விதமான சமூக கேடுகளையும் எதிர்த்து சமர்புரிந்த வீரப்போராளி ஆர்.என்.கே. இன்னும் பல்லாண்டு வாழ்ந்து தமிழக மக்களுக்கும், செங்கொடி இயக்கத்திற்கும், இடதுசாரி இயக்கத்திற்கும் என்றைக்கும் வழிகாட்டியாக திகழ்வார். இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் பேசினார்.