நோய்நொடியின்றி நூறாண்டுகள் வாழ்வது பெரும்பேறு.அத்தகைய பெரும்பேறு பெற்ற பெருமைக்குரியவர் பெருமதிப்புக்குரிய தோழர் என்.சங்கரய்யா அவர்கள். நூறாவது பிறந்தநாள் காணும் மூத்த தலைவர் என்.சங்கரய்யா அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனம்நிறைந்து பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பெருமை கொள்கிறோம். ஒன்பதாவது அகவையிலேயே வீதிக்கு வந்து வெள்ளையர் ஆட்சியை-அந்நியர் ஆதிக்கத்தை எதிர்க்கும் வெகுமக்கள் போராட்டத்தில் பங்கேற்று, பொதுவாழ்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் தோழர் என்.சங்கரய்யா அவர்கள் என்பது பெருவியப்பூட்டுகிறது. இதன்மூலம் ஆதிக்க எதிர்ப்பு என்பது அவரது குருதியில் ஊறிய உணர்வாக உறைந்திருப்பதை உணர முடிகிறது.
இன்று 99-வது அகவையில் அவரது அன்றைய போர்க்குணம் தமிழகப் பொதுவுடைமை இயக்கத்தின் தியாக வரலாறாய் விரிவடைந்து, போராட்ட பெருநெருப்பாய்ப் பற்றிப் பரவியிருப்பதை அறிய முடிகிறது. படிப்பு, வேலைவாய்ப்பு என தனது வாழ்வின் திசைவழியை தீர்மானித்துக் கொள்ளும் இளைஞர்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு நாடு, மக்கள், விடுதலை, மார்க்சியம் என தனது வாழ்க்கையைக் கட்டமைத்துக்கொண்டு, போராட்டம், சிறை என வாழ்ந்து, ‘ஈகமே வாழ்வு ’ என்னும் அடையாளமாக விளங்குபவர் தோழர் என்.சங்கரய்யா அவர்கள். அவரது ஈகவாழ்வும் கொள்கை உறுதியும் முதிர்ந்த எளிமையும் தாம் அவர் நூறாண்டுகள் வாழ்வதற்கான உள்ளத்து உறுதியை அவருக்கு அளித்திருக்கும் என்கிற நம்பிக்கையைப் பெற முடிகிறது. அரசியலில் நேர்மையான வழியில் சாதிக்கத் துடிக்கும் யாவருக்கும் அவரது ஈகவாழ்வு ஒரு முன்மாதிரியாக விளங்கும் உழைக்கும் மக்களுக்காக உண்மையாகவும் உறுதியாகவும் உயிர்மூச்சு உள்ளவரையில் உழைக்கும் உயரிய ஆளுமை உள்ளவர்கள் ஒரு நூறாண்டு வாழ முடியும். தமது ஆயுளுக்குப் பின்னரும் காலமெல்லாம் வாழ்ந்து கொண்டேயிருப்பர் என்பதற்கு பொதுவுடைமை இயக்கத்தின் மூத்தத் தலைவர் தோழர் என்.சங்கரய்யா அவர்கள் ஒரு சாட்சியமாக விளங்குகிறார். ஒரு நூறாண்டு வாழ்ந்து சாதனை புரிந்துள்ள அவர் மென்மேலும் நீடுபுகழுடன் நெடிது வாழ்க என நெஞ்சார வாழ்த்துகிறோம்.