tamilnadu

img

தோழர் பகத்சிங் இந்தியப் புரட்சியின் இதயம்! - ஜி. செல்வா

தோழர் பகத்சிங் இந்தியப் புரட்சியின் இதயம்!

1907ஆம் ஆண்டு செப்டம்பர் 28-ஆம் தேதி பிறந்து, ஏகாதி பத்திய - காலனியாதிக்க அதிகாரக் கூட்டத்தினால் 1931-ஆம் ஆண்டு மார்ச் 23-இல்  தூக்கிலிடப்பட்ட 23 வயது இளைஞன் மாவீரன் பகத்சிங்.  பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கும், பெரும் முதலாளித்துவ நிலப்பிரபுத்துவக் கட்டமைப்புக்கு எதிராகக் கூர்மையாகச் செயலாற்றியவர் தோழர் பகத்சிங். பஞ்சாப் மாநிலத்தில் பிறந்த பகத்சிங், இந்தியாவின் கடைக்கோடி மாநிலமான தமிழ் நிலப்பரப்பு வரை தனது சிந்தனைகளாலும் செயல்பாடு களாலும் வியாபித்து நின்றிருந்தார்.

“தேசப்பிதா மகாத்மா காந்திக்கு இணையாக மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற தலைவராகப் பகத்சிங் திகழ்ந்தார்”  என்பதை காங்கிரஸ் இயக்கத்தின் அதிகாரப்பூர்வ வரலாற்று நூல் பதிவு செய்துள்ளது.  பகத்சிங் தூக்கிலிடப்பட்ட  காலத்தில், விருதுநகர் மாவட்டத்தில் பகத்சிங் படம் போட்ட தீப்பெட்டி  உருவாக்கப்பட்டிருந்தது. பகத்சிங் எழுதிய  “நான் ஏன் நாத்திகன் ஆனேன்?” என்ற  பிரசுரம் தந்தை பெரியார் இயக்கத்தினால் தமிழில் வெளியிடப்பட்டது.

“மகாத்மா காந்தி வாழ்க, காங்கிரஸ் வாழ்க” என முழக்கங்கள் எழுப்பப்பட்ட காலத்தில், “இன்குலாப் ஜிந்தாபாத்” முழக்கத்தை இந்தியத் துணைக்கண்டம் எங்கும் உக்கிரமாக ஒலிக்கச் செய்தவர் பகத்சிங்.  பொதுவுடைமைப் பாதையும்  எச்.எஸ்.ஆர்.ஏ-வும்  கம்யூனிஸ்ட் இயக்கமும், கம்யூனிஸ்ட் நூல்களும் தடை செய்யப்பட்ட காலத்தில் பொதுவுடைமை இலட்சி யத்தை நோக்கி இயல்பாக முன்னேறியவர்; தன்  சகாக்களையும் அவ்வாறே செயல்பட வழிநடத்தி யவர். குறிப்பாக, ‘இந்துஸ்தான் ரிபப்ளிக் அசோசியேசன்’ (HRA) என்கிற தனது அமைப்பின் பெயரை ‘இந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிக் அசோசி யேசன்’ (HSRA) எனப் பெயர் மாற்றம் செய்தார். மாமேதை லெனினுக்கு வாழ்த்து மடல் தீட்டியவர். அடிமை இந்தியா, பொதுவுடைமை இலட்சியப் பாதையை நோக்கிச் செல்வதற்கு அடித்தளமிட்ட வர்களில் முதன்மையானவர் பகத்சிங்.  பகத்சிங் மற்றும் அவரது அமைப்பு முன்னெடுத்த புரட்சிகர மற்றும் வகுப்புவாதமற்ற தேசியவாதம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்திருந்தது என்பதை, “அவர்கள் அபாயத்தில் வாழ்ந்தார்கள்” (They Lived Dangerously) எனும் நூலில் மன்மத் நாத் குப்தா சுட்டிக்காட்டியுள்ளார். 1

927-ஆம் ஆண்டில் புரட்சிகர சோசலிசத் தத்துவத்தை முதன்முதலாக ஏற்றுக்கொண்ட இளைஞர் குழுவாக பகத்சிங் தலைமையிலான அமைப்பு இருந்ததை எடுத்துக்காட்டி, இத்தகைய அடிச்சுவட்டில் காந்தி, நேரு, ஜின்னா போன்றோர் நடந்திருந்தால் இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு இன்னும் சிறப்பு வாய்ந்ததாக மாறி இருக்கும் என விடுதலைப் போராட்ட வீரரான மன்மத் நாத் குப்தா பதிவு செய்துள்ளார்.  அதிகாரத்தைக் கைப்பற்றுதலும் மக்கள் கல்வியும் இந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிக் அசோசியேசன் 1928 காலகட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி  அமைப்பு போன்று செயல்பட பகத்சிங் வழிநடத்தி யுள்ளார். “புரட்சி என்பதன் பொருள், தற்போது நிலவிக் கொண்டிருக்கும் சமூக ஒழுங்கை அடியோடு முற்று முழுதாகத் தூக்கியெறிந்துவிட்டு, அதற்கு  மாற்றாகச் சோசலிசச் சமூக ஒழுங்கை நடைமுறைப்படுத்துவதே” எனத் தெளிவாகக் குறிப்பிடுகிறார் பகத்சிங். “அந்தக் குறிக்கோளுக்காக நமது உடனடியான இலக்கு அதிகாரத்தைக் கைப்பற்றுவது.

அரசு, அரசாங்க இயந்திரம் ஆகிய அமைப்புகள், ஆளும்  வர்க்கத்திற்குத் தங்களின் நலன்களை முன்னெடுப்ப தற்கும், பாதுகாத்துக்கொள்வதற்கும் உரிய ஓர்  ஆயுதம் என்பது உண்மைதான். நாம் அதே இயந்தி ரத்தைப் பறித்தெடுத்துக்கொண்டு, நமது இலட்சிய மான, மார்க்சிஸ்ட் கருத்தியல் அடிப்படையில் இச்சமூகத்தைச் சிறப்பான முறையில் மறுகட்டுமானம் செய்ய விரும்புகிறோம். இந்தக் குறிக்கோளுக்காக அரசாங்க இயந்திரத்தைக் கையாளுவதற்கு நாம் போராடிக்கொண்டிருக்கிறோம். இதற்காகப் பரந்துபட்ட வெகுமக்கள் திரளுக்குக் கல்வி கற்பித்தே ஆக வேண்டும். போராட்டங்களில் அவர்களுக்கு ஆகச்சிறந்த முறையில் பயிற்சியளித்துக் கற்பிக்க முடியும்” என்கிறார்.

மாணவர் எழுச்சியும் ‘பால பாரத சபா’வும் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கக் காலகட்டத்தில் இந்திய மக்களின் பின்தங்கியிருந்த அரசியல் உணர்வு  நிலையில் விழிப்புணர்வை ஏற்படுத்த லாகூர் மாணவர் சங்கம் மற்றும் ‘பால பாரத சபா’ போன்ற பல வெகுஜன அமைப்புகளை உருவாக்குவதில் முன்நின்றார் பகத்சிங். பன்னிரண்டு முதல் பதினாறு வயது வரையி லான பள்ளி மாணவர்களைக் கொண்ட ஓர் அமைப்பாகப் ‘பால பாரத சபா’ செயல்பட்டது. தாய்நாட்டு விடுதலைக்காகச் செயலாற்றிய இந்த  அமைப்பின் 11 வயது சிறுவன் கஷன் சந்திற்கு (Kashan Chand) மூன்று மாத காலம் தீவிரச் சிறைத் தண்டனை வழங்கியது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம். இந்த அமைப்பின் தீவிரச் செயல்பாடுகளின் காரண மாக விடுதலைப் போராட்டத்தின் வீரியம் பன்மடங்கு பெருகும் என்பதால், அக்காலகட்டத்தில் 15 வயதுக்கு உட்பட்ட 1192 பாலர் சங்கத் தோழர்கள் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிறுவர்களையும் மாணவர்களையும் அரசியல் படுத்திய பகத்சிங்கின் வரலாற்று ஆளுமை குறித்து அதிகாரப்பூர்வ வரலாற்று ஏடுகள் இன்றும் மௌனம் காக்கின்றன. சமரசமற்ற புரட்சிகரச் சிந்தனை புரட்சிகரச் செயல்பாட்டில் நடைமுறை உத்தியை வகுப்பதில் பகத்சிங்கின் அறிவார்ந்த புரிதல்  முக்கியமானது. “உங்கள் எதிரியிடமிருந்து நீங்கள்  பதினாறு அணாக்களைப் பெற்றுவிட வேண்டு மென்று போராடுகிறீர்கள். ஆனால், ஒரே ஓர்  அணாவைத்தான் உங்களால் பெற முடிந்த தென்றால் அதைப் பெற்றுக்கொண்டு எஞ்சிய அணாக்களுக்காகப் போராட வேண்டும். ஆனால் மிதவாதிகளிடம் நாம் காண்பது என்னவென்றால், அவர்களின் இலட்சியமே ஒரே ஓர் அணாவைப் பெறுவதுதான். புரட்சிக்காரர்கள் எப்போதுமே தங்களின் மனதில் இருத்திக்கொள்ள வேண்டியது, தாங்கள் போராடிக்கொண்டிருப்பது முழுமையான ஒரு புரட்சிக்காகத்தான் என்பதையே.

சமரசங்கள் நமக்கு  அச்சம் தருபவையாக இருக்கின்றன. அத்தகைய  அபாயகரமான சூழல்களில், நமது இலட்சியத்தி லிருந்து திசை திரும்பிவிடாமல் நாம் கட்டாயமாக மிகவும் கவனமாக இருந்தாக வேண்டும்” என எழுதியுள்ளார் பகத்சிங். இந்திய மண்ணில் மத அடிப்படையில் பிளவுபடுத்தும் கருத்தியல் வலுவாக வேரூன்றிய காலகட்டத்தில், அதற்கு எதிரான நிலையில் மக்கள்  ஒற்றுமை, மத நல்லிணக்கம், பகுத்தறிவுச் சிந்தனை,  தேசிய விடுதலை, சோசலிசம் ஆகிய கருத்தோட்டங்களை நோக்கி நகர்ந்த பகத்சிங்கின் விடுதலைப் போர் புரட்சிகரமானது. இன்றைய காலத்தின் தேவை மாவீரன் பகத்சிங் கனவு கண்ட அடிப்படையில் தேசம் அரசியல் விடுதலை பெற்றுவிட்டது.

ஆனால் அவர் திட்டமிட்டுச் செயலாற்றிய சமூகப் பொரு ளாதார விடுதலைக்கான போராட்டங்கள் இன்னும் முழுமை பெறவில்லை. இன்று ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் விடுதலைப் போராட்டத்தின் விழுமியங்களைச் சிதைத்து வரும் நிலையில், சமகால முதலாளித்துவத்திற்கு எதிராக உறுதிமிக்க செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. குறிப்பாகப் பிற்போக்கு மத, சாதிய, பாலின அடிப்படைவாதக் கருத்துகளுக்கு எதிராக அரசியல் விழிப்புணர்வுக் களத்தில் துடிப்புடன் செயலாற்ற தோழர் பகத்சிங்கின் வழியில் நின்று உறுதி ஏற்போம்.