வணிக வரி ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்!
தமிழ்நாடு முழுவதும் வணிக வரி ஊழியர்கள் வியாழனன்று (மார்ச் 6) தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு வணிகவரி பணியாளர் சங்கம் இந்த போராட்டத்தை நடத்தியது. மாநில துணை வரி அலுவலர் பணியிடங்கள் தேவையை விட அதிகமாக தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்திற்கு (டிஎன்பிஎஸ்சி) பரிந்துரை செய்யப்பட்டுள்ளது; இதை சரி செய்ய வேண்டும். பல்வேறு நிலை பதவி உயர்வுகளை உடனடியாக வழங்க வேண்டும். நேரடி நியமன அளவை 10 விழுக்காடாக குறைக்க வேண்டும். பணிப் பளுவைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகப்படியான ஆய்வுகளை முறைப்படுத்த வேண்டும், அரசு விடுமுறை நாளான சனிக்கிழமைகளில் ஆய்வுகள் நடத்துவதை ரத்து செய்ய வேண்டும். துறை மறுசீரமைப்பின் போது கோட்டம் மாறுதல் செய்யப்பட்ட பதிவுரு எழுத்தர்களுக்கு தாய் கோட்டத்திற்கு திரும்ப மாறுதல் வழங்க வேண்டும், புள்ளிவிவரங்கள் அறிக்கைகள் கோருவதை குறைத்து, முறைப்படுத்த வேண்டும், அனைத்து வரி விதிப்பு வட்டங்களுக்கும் உதவியாளர், தட்டச்சர், இளநிலை உதவியாளர், பதிவுரு எழுத்தர், அலுவலக உதவியாளர் நிலைகளில் கூடுதல் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக சங்கத்தின் பொதுச்செயலாளர் டேனியல் ஜெயசிங் குறிப்பிடுகையில், மாநிலம் முழுவதும் சுமார் 65 விழுக்காடு ஊழியர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றதாக தெரிவித்தார்.