இராமநாதபுரம்:
மின் ஊழியர் மத்திய சங்க இராமநாதபுரம் மாவட்டச் செயலாளரும் சிஐடியுமாவட்டத் துணைத்தலைவருமான எம்.குமார் (44) வியாழன் அதிகாலை மூச்சுத்திணறல் காரணமாக சிவகங்கை அரசுமருத்துவமனையில் உயிரிழந்தார்.
காலமான எம். குமார் இராமநாதபுரம் நகர் மின்வாரிய கணக்கீட்டாளராகப் பணியாற்றியவர். மின் ஊழியர் மத்திய அமைப்பு, சிஐடியு சார்பில் நடைபெற்ற இயக்கங்களில் முன்னணியில் நின்றவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
அன்னாரது மறைவுச் செய்தி அறிந்து சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.சிவாஜி, மின் ஊழியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் ஆர்.குருவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்டச் செயலாளர் கே.வீரபாண்டி, இராமநாதபுரம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் என்.கலையரசன், இ.கண்ணகி, எஸ்.ஏ.சந்தானம், முருகன், காசிநாதன் ஆரோக்கியம், முருகேசன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலாடி கிழக்கு தாலுகா செயலாளர் கேபச்சமால் ஆகியோர் அவரது உடலுக்கு மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினர்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர்வி.காசிநாததுரை, சிஐடியு அகிலஇந்திய செயலாளர் ஆர்.கருமலையான்,மாநிலத் தலைவர்கள் எம். மகாலட்சுமி,எஸ். கண்ணன், மின் ஊழியர் மத்திய அமைப்பு பொதுச்செயலாளர் எஸ். இராஜேந்திரன், மின்ஊழியர் மண்டலச் செயலாளர் உமாநாத்,எம். அசோகன் ஆகியோர் இரங்கல்தெரிவித்துள்ளனர். எம்.குமாரின் தந்தை சர்புதீன் கட்சியின் கீழக்கரை தாலுகா குழு உறுப்பினர் மற்றும் முகவை கலைக் குழு ஒருங்கிணைப்பாளர் ஆவார்.
இதற்கிடையில் குமார் மரணமடைந்தது குறித்து மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சியின்சிவகங்கை மாவட்டச் செயலாளர் கே.வீரபாண்டி வலியுறுத்தியுள்ளார். “ கொரோனா தடுப்பு சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த குமாருக்கு தொற்று பரவல் இல்லை என முடிவு கிடைக்கப்பெற்றதையடுத்து அவர் பொது வார்டிற்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. ஒரு மணி நேரம் மருத்துவர்கள் தாமதப்படுத்தியுள்ளனர். மூச்சுத்திணறல் கடுமையாகி குமார் உயிரிழந்துள்ளார். இவரது இறப்பு குறித்து மாவட்ட ஆட்சியர், மருத்துவக் கல்லூரி முதல்வர் ஆகியோர் விசாரணைநடத்தி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆட்சியரிடம் கே.வீரபாண்டி மனு அளித்துள்ளார்.