உண்டியல் சேமிப்பை வழங்கிய குழந்தைகள்! அனுசுபாவைப் போல் நூற்றுக்கணக்கானவர்கள்
சீத்தாராம் யெச்சூரி நகர்- மதுரை, ஏப். 6 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாட்டுப் பணி முடிந்து புதனன்று வீடு திரும்பியபோது இரவு பத்து மணி. அப்போது ஒரு அலைபேசி அழைப்பு. அதில் மழலைக்குரல்.... அதைத்தொடர்ந்து அந்தக் குழந்தையின் தாத்தா ஸ்டாலின் பேசினார். தோழரே நான் முடுவார் பட்டியிலிருந்து பேசுகிறேன். உங்களை அழைத்தது எனது பேத்தி 32 மாதங்களே ஆன அனுசுபா. எனது பேத்தி, கட்சி மாநாட்டுக்காக பிளாஸ்டிக் உண்டியல் நிறைய காசு சேமித்துக் கொடுத்துள்ளார்.. அதைச் சொல்லத்தான் அழைத் தேன் என்றார். அந்தக் குழந்தையோ, தாத்தா நான் உண்டி...ல் காச்சு.. காச்சு... மழலை மொழி பேசுகிறது.. இதனைக் குறிப்பிட்டு, இந்தக் குழந்தையின் மழலைப்பேச்சைக் கேட்டீர்களல்லவா... தீக்கதிரில் செய்தியாக வெளியிட முடியுமா... என்றார். இப்படித் தான், அனுசுபாவைப் போல் நூற்றுக்கணக்கான குழந்தைகள் தங்களது உண்டியல் சேமிப்பை கட்சி மாநாட்டுக்காக வழங்கியிருக்கிறார்கள்... சிபிஎம் அகில இந்திய மாநாட்டின் வெற்றிகளில் முக்கியமானது- இந்த மாநாடு, கார்ப்பரேட்டுகளை சார்ந்திருக்காமல், ஏழை- எளிய பொதுமக்கள் அளித்த நிதி மற்றும் கட்சித் தோழர்களின் வீடுகளில் குழந்தைகள் அர்ப்பணிப்பு உணர்வுடன் அளித்த உண்டியல் சேமிப்பு மூலம் நடைபெற்றிருப்பது தான்.