சென்னை,நவ.22- திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராமில் ரூ.330 கோடி செலவில் 21 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள டைடல் பூங்காவை முதல்வர் மு.க. ஸ்டாலின் நவம்பர் 22 வெள்ளியன்று திறந்து வைத்தார். தமிழகத்தின் தகவல் தொழில்நுட்ப சூழல் அமைப்பினை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தும் வகையில், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், விழுப்புரம், தஞ்சாவூர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளன. இந்த வரிசையில் திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே பட்டாபிராமில் 11.41 ஏக்கர் பரப்பளவில், ரூ. 330 கோடி செலவில் தரை மற்றும் 21 தளங்களுடன் 5.57 லட்சம் சதுர அடி பரப்பளவில் அதி நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள டைடல் பூங்கா தமிழக முதல்வரால் வெள்ளியன்று திறந்து வைக்கப்பட்டது. பசுமை கட்டிடம் இந்த டைடல் பூங்காவில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்பட தேவையான, நவீன தொலைத்தொடர்பு வசதிகள், தடையற்ற உயரழுத்த மும்முனை மின் இணைப்பு மற்றும் மின் இயக்கி வசதிகள், மின்தூக்கி வசதிகள், சுகாதார வசதி, தீ பாதுகாப்பு மற்றும் கட்டிட மேலாண்மை வசதிகள், சிசிடிவி கேமரா வசதிகள், 927 கார்கள் மற்றும் 2280 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி, உணவகம் மற்றும் உடற்பயிற்சி கூடம் போன்ற அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இக்கட்டடமானது, 6,000 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் பணிபுரியும் வகையில் பசுமை கட்டிடம் வழிமுறைகளின்படியும் கட்டப்பட்டுள்ளது. சமூக பொருளாதாரம் மேம்படும் பட்டாபிராமில் இந்த புதிய டைடல் பூங்கா அமைக்கப்படுவதன் மூலம் தமிழகத்தின் வட பகுதியைச் சார்ந்த குறிப்பாக திருவள்ளூர் உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்களில் உள்ள படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதுடன் அம்மாவட்டங்களின் சமூக பொருளாதார நிலையும் மேம்படும். பட்டாபிராம் டைடல் பூங்கா திறப்பு விழாவின்போது, வேப்பெரக்ஸ், டாட்நிக்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு இப்பூங்காவில் தள ஒதுக்கீட்டுக்கான ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இவ்விழாவில், அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், ஆவடி எஸ்.எம்.நாசர், டி.ஆர்.பி. ராஜா மற்றும் எம்எல்ஏக்கள், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.