tamilnadu

img

அதானியை கைது செய்க - நவ.28 சிபிஎம் ஆர்ப்பாட்டம்

சென்னை, நவ. 22 - பல்லாயிரம் கோடி லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டில் அதானியை உடனடியாகக் கைது செய்து, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.  இக்கோரிக்கையை முன்வைத்து நவம்பர் 28 அன்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு பெருந்திரள் கண்டன  ஆர்ப்பாட்டங் களையும் அறிவித்துள்ளது. சென்னையில் நவம்பர் 27 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் கட்சியின் மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன் கலந்து கொள்கிறார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ் ணன் வெள்ளியன்று  இதுதொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது:

கையும் களவுமாக சிக்கிய அதானி

மோடி தலைமையிலான பாஜக அரசின் ஆதரவோடும் ஒத்துழைப் போடும் தொடர்ச்சியாக பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டு வரும் அதானி நிறுவனம் தற்போது மீண்டும் ஒரு பெரும் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. அதானி நிறு வனத்தின் மீது பகிரங்கமான குற்றச் சாட்டை முன்வைத்த அமெரிக்க நீதி மன்றம் அவருக்கு எதிரான கைது வாரண்டையும் பிறப்பித்துள்ளது. அமெரிக்காவின் பாதுகாப்பு, அய லுறவு மற்றும் ஊழல் தடுப்புச் சட்டங் களை மீறி, முதலீட்டாளர்களை ஏமாற்றி  ரூ. 6,300 கோடி  அளவிற்கு மோசடி செய்ததோடு இந்திய அதிகாரிகளுக்கு ரூ. 2,029 கோடி அளவிற்கு லஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டில் அதானி நிறு வனம் கையும் களவுமாக பிடிபட்டுள்ள தாக ஆதாரங்களோடு அமெரிக்க நீதி மன்றம் தெரிவித்துள்ளது.

அரசு நிறுவனங்களுக்கு இழப்பு

சூரிய ஒளி மின்சார  விநியோக ஒப்பந்தங்களை அடுத்த  20 ஆண்டுகளுக்கு பெறுவதற்காகவும், அதன் மூலமாக கிடைக்கவுள்ள  ரூ.16,800  கோடி  லாபத்திற்காக அதிகாரி களுக்கு லஞ்சம் கொடுத்தது, சட்டங் களை மீறி முறைகேடாக மூல தனத்தை திரட்டியது உள்ளிட்ட சட்ட விரோத நடவடிக்கைகளில் அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, அவரது மருமகன் சாகர் அதானி உள்ளிட்ட பலர் இத்தகைய முறைகேடு களில் ஈடுபட்டுள்ள செய்தி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சூரிய ஒளி மின்சாரம் வாங்கு வதற்கு அதானி குழுமத்திடம் தமிழ்நாடு உட்பட பல மாநிலங்கள் ஒப்பந்தங் களை ஏற்படுத்தியுள்ளன. மோடி அர சின் நிர்ப்பந்தத்தினால் அதானி நிறு வனங்களில் முதலீடு செய்திருந்த எல்.ஐ.சி நிறுவனம் ரூ. 12,000 கோடி யை இழக்க நேரிட்டுள்ளது. இதே போல், எஸ்.பி.ஐ., பேங்க் ஆப் இந்தியா  உள்பட பல வங்கிகளும் பெரும் இழப்பை சந்தித்துள்ளன. அதானி மீதான இத்தகைய குற்றச்சாட்டை தொடர்ந்து பல்வேறு நாடுகளும் அதானி நிறுவனத்துடனான தனது வர்த்தக ஒப்பந்தங்களை திரும்பப் பெற்றுள்ளன.

அமெரிக்காவிலும் மோசடி 

ஏற்கெனவே செபி (SEBI) விதிகளை ஏமாற்றியது, ஏராளமான நிழல் நிறு வன முதலீடுகள் மூலம்  பங்குச்  சந்தையில் தனது மதிப்பை செயற் கையாக அதிகரித்துக் கொண்டது, மாநில மின்வாரியங்களுக்கு தரமற்ற நிலக்கரியை வழங்கி அரசுக்கு பல்லா யிரம் கோடி நட்டத்தை உருவாக்கி யது என பல்வேறு சட்ட விரோத முறை கேடுகளில் ஈடுபட்டுள்ள அதானி, தற்போது மீண்டும் பெரும் ஊழல் - லஞ்சப் புகாரில் சிக்கியுள்ளார். இந்நிலையில், வழக்கம் போல  அவர் தப்பிவிடாமல் சட்ட ரீதியான உடனடி நடவடிக்கைகளை மேற் கொண்டு அவர் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதையும், அதானி நிறுவன ஊழலுக்கு துணை நின்ற அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் என அனைவரையும் கைது செய்திடவும், இவ்வழக்கினை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தி வெளிப்படையான புலன் விசாரணை மேற்கொள்வதையும் ஒன்றிய அரசு உறுதி செய்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலி யுறுத்துகிறது.

மின் மீட்டர் ஒப்பந்தத்தை ரத்து செய்க!

அதானி குழுமத்தால் லஞ்சம் வழங்கப்பட்ட நிறுவனங்களில் தமிழ்நாடு மின்வாரியத்தின் பெயரும் இடம்பெற்றுள்ளதால் இதுதொடர்பான முழு விசாரணைக்கு உத்தரவிட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டுமென வும், உண்மை விபரங்களை பொது மக்களுக்கு தெரியப்படுத்திட வேண்டு மெனவும், கூடுதலான கட்டணத்தில் அதானி நிறுவனத்துடன் மின்சார கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டு மெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது. வலுவான கண்டனம் முழங்குவோம்  நவம்பர் 28 அன்று தமிழகம் முழு வதும் அனைத்து மாவட்ட தலைநகரங் களில் ஒன்றிய அரசு அலுவலகங் கள் முன்பு பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். சென்னையில் நவம்பர் 27 அன்று  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.  இந்தப் போராட்டங்களில் கட்சி அணிகள், ஜனநாயக சக்திகள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டு வலுவான கண்டனம் முழங்க வேண்டும் என்று கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.