மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு கூட்டம் இந்த மாதக் கடைசியில்... ஆனால் யெச்சூரி இருக்கமாட்டார். அவருக்கே உரித்தான பாணியில் நாங்கள் ஆவலுடன் கேட்கும் எள்ளலுடன் கூடிய முன்மொழிவும் தொகுப்பும் இனி கிடைக்காது. அபாரமான, அசாத்தியமான அறிவாற்றல் அவருக்கு! அத்தனை அறிவாற்றலையும் மார்க்சியத்துக்காக, மக்கள் விடுதலைக்காக அர்ப்பணித்த அற்புதமான வாழ்க்கையை அவர் வாழ்ந்திருக்கிறார். அவர் பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற போது ஊடகங்கள், அவரை மூழ்கும் கப்பலின் கேப்டன் என வர்ணித்தன. இடதுசாரி இயக்கத்திற்கு சவால்களும் நெருக்கடியும் மிகுந்த காலம் என்பதை மட்டும் ஏற்றுக் கொண்டாரே தவிர, மார்க்சியம் என்கிற - திட்டவட்டமான சூழலைத் துல்லியமாக ஆய்வு செய்யும் விஞ்ஞானத்துக்கு ஒருபோதும் தோல்வி இல்லை என்பதைத் தெளிவாக முன் வைத்தார். இதுதான் இயக்கவியலின் உயிர்ப்பான சாராம்சம் என அவர் அடிக்கடி சொல்வதுண்டு.
உதாரணங்களை அடுக்குவார்
வகுப்புவாதத்தின் குறிப்பாக இந்துத்துவத்தின் பல பரிமாணங்களை விளக்கி நம்மை எச்சரிக்கும் போது, தங்கள் கருத்துகளுக்கு சாதகமாக அனைத்தையும் போலியாக, புனைவுகளாகக் கட்டமைக்கும் அவர்களின் குணாம்சத்தை சுட்டிக்காட்டுவார். கருத்துச் சுதந்திரத்தின் மீதான அவர்களது தாக்குதலை வெறும் தணிக்கை (censorship) எனப் பார்த்து விடக் கூடாது, அது தர்க்கம் மற்றும் பகுத்தறிவு மீதான ஆர் எஸ் எஸ்-ன் ஒவ்வாமையைக் காட்டுகிறது என்பதை அம்பலப்படுத்துவார். அத்தகைய தாக்குதலை, அவர்களது நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகப் பார்க்க வேண்டும் என அனைத்து மேடைகளிலும் அவர் முன்வைப்பதுண்டு. நிறைய உதாரணங்களுடன் பேசுவது அவரது இயல்பு. சமூக ஒடுக்குமுறைக்கும் வர்க்கச் சுரண்டலுக்கும் எதிரான போராட்டங்களை இந்தியச் சூழலில் ஒருங்கிணைந்து நடத்துவது என்பதை, இரு கால்களில் நடப்பது என்பதுடன் ஒப்பிடுவார். அதே போல், சர்வதேச நிதி பெறும் சில தன்னார்வ அமைப்புகள் உலகமயத்துக்கு எதிராக நடத்தும் போராட்டங்கள்,‘குக்கரின் சேஃப்டி வால்வு’ போல மக்களின் கோபத்தை அவ்வப்போது வெளியேற்றி அடக்கி விடுமே தவிர தீர்வை நோக்கிப் பயணிக்காது என்பார்.
தத்துவார்த்த தெளிவு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது அகில இந்திய மாநாட்டின் காங்கிரஸின் அரசியல் ஸ்தாபன அறிக்கை- பகுதி 2 என்பது “சில கொள்கை பிரச்சனைகள் குறித்து” என்ற ஆவணம். மாநாட்டில் அவரது முன்மொழிவு மிகச் சிறப்பு. நவீன தாராளமய கொள்கைகளை எதிர்கொள்வது குறித்த (engagement of revolutionary forces with the existing realities with the sole objective of changing the correlation of class forces in favour of socialism) ஆழமான புரிதலை அளித்த ஆவணம் அது. நடப்பில் உள்ள எதார்த்த நிலவரங்களுடன் புரட்சிகர சக்திகள் செயலாற்றுவது என்பது, வர்க்கச் சக்திகளின் சேர்மானங்கள் மற்றும் அதனால் கிடைக்கும் பலன்களை சோசலிசத்திற்குச் சாதகமானதாக மாற்றும் ஒரே நோக்கத்தோடு கூடியதாக இருக்க வேண்டும் என்று அந்த ஆவணம் கூறியது. பொதுத்துறை, தன்னார்வ அமைப்புகள், சுய உதவி குழுக்கள் பற்றிய மதிப்பீடும் அதில் இடம்பெற்று இருந்தது. இத்தகைய பிரச்சனைகள் குறித்த ஒரு தெளிவை இந்த ஆவணத்தின் மூலமாக அவர் பலருக்கும் ஏற்படுத்தினார். 20வது கட்சி மாநாட்டில் “சில தத்துவார்த்த பிரச்சனைகள்” குறித்த தீர்மானம் முன்வைக்கப்பட்டது. அதன் தயாரிப்பில் தோழர் சீதாராமுக்குப் பிரதான பங்கு உண்டு. மிக நேர்த்தியாக அவரால் முன்மொழியப்பட்ட அத்தீர்மானம் பல தத்துவார்த்த கேள்விகளுக்கு விடையளித்தது. மார்க்சிஸ்ட் கட்சியின் நவரத்தினங்களிடம் பயிற்சி பெற்ற வளமான அனுபவம் அவருக்கு உண்டு. குறிப்பாக தோழர் இ.எம்.எஸ். அவர்களோடு மக்கள் சீனத்தின் தலைவர் டெங் ஷியோ பிங் அவர்களை சந்தித்ததை, 50 ஆண்டுகளுக்கான தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய வளர்ச்சித் திட்டத்தை அவர் பகிர்ந்து கொண்டதைப் பல்வேறு இடங்களில் தோழர் சீத்தாராம் சொல்வதுண்டு
அதுதான் சீத்தாராம்
நகைச்சுவை அவருடன் கூடப் பிறந்தது என சொல்ல முடியும். எப்பேர்ப்பட்ட கேள்விக்கும் நொடிப்பொழுதில் எதிர்வாதம் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல் வந்து விழும். ஒரு முறை கரண் தாப்பரின் நேர்காணல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பேசிக்கொண்டே இருப்பது கரண் தாப்பரின் பாணி. நிகழ்ச்சியின் இறுதியில், என் அழைப்பை ஏற்று கலந்து கொண்டதற்கு நன்றி என அவர் கூறி முடிப்பதற்கு முன்னால், தோழர் சீத்தாராம், நானும் உங்களுக்கு நன்றி கூற விரும்புகிறேன், கேள்விகளையும் நீங்களே கேட்டு பதில்களையும் நீங்களே சொன்னதற்கு நன்றி என்று ஒரு போடு போட்டார்... அதுதான் சீத்தாராம்!
அற்புதமான உரைகள்
அவரது உரைகளை மொழியாக்கம் செய்வது சவாலாகத் தான் இருக்கும். அவரது பேச்சின் வேகத்தை சமாளித்து, அவர் முன்வைக்கும் ஏராளமான விவரங்களை உள்வாங்கி நினைவில் வைத்து, பொருத்தமான வார்த்தைகளுடன் தமிழில் சொல்ல வேண்டும். சில சமயம் மொழியாக்கத்திற்கு இடைவெளி விடாமல் பேசிக்கொண்டே போய்விடுவார். நமக்கு சிரமம் வரும் என்பதைப் புரிந்து கொண்டு, மைக்கின் முன்பாகவே சாரி சாரி என வருத்தம் தெரிவிப்பார். சில சமயம் தமிழ்நாடு மாநிலக் குழு கூட்டங்களில் அவர் மத்தியக் குழு முடிவுகளை ரிப்போர்ட் செய்யும்போது, விடுபட்ட சிறிய ஆனால் முக்கியமான அம்சங்களை சேர்த்து நான் சொல்லி விடுவேன். அவர், ‘நான் சொன்னது.. சொல்ல மறந்தது அனைத்தையும் சிறப்பாக மொழியாக்கம் செய்ததற்குப் பாராட்டு’ என வேடிக்கையாக சொல்லி சிரிப்பார்.
பாசிஸ்டுகளின் சிம்ம சொப்பனம்
நினைவுகள் எப்போதும் அவரை நம்மோடு நிலைக்க வைக்கும். அவரது அபாரமான அறிவாற்றலை எப்போதும் வியக்க வைக்கும். 1926ல் முசோலினியின் பாசிச நீதிமன்றத்தில் ஒரு பொய் வழக்கு புனையப்பட்டு இத்தாலிய மார்க்சிய சிந்தனையாளர் கிராம்ஷி குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டார். விசாரணை முடிவில் அரசுத் தரப்பு வழக்கறிஞர், இவரது மூளையை அடுத்த 20 ஆண்டுகளுக்கு செயல்பட விடாமல் முடக்குகிற தண்டனையைத் தர வேண்டும் என வாதிட்டார். மக்கள் சிந்திப்பவர்களாக இருப்பதை பாசிஸ்டுகள் விரும்ப மாட்டார்கள். அதுவும் கம்யூனிஸ்டுகள் சிந்திப்பது ஆட்சியாளர்களை ஆட்டம் காண வைக்கும் என்பதால் அறவே வெறுப்பார்கள். இன்றுள்ள ஆட்சியாளர்கள் யாருடைய மூளையையாவது முடக்க வேண்டும் என நினைத்தால், சீத்தாராம் தான் அவர்கள் பட்டியலில் முதல் வரிசையில் இருப்பார். இருந்தாலும் இவ்வளவு அவசரம் ஏன் தோழர் சீத்தாராம்? மதுரையில் கட்சி மாநாட்டை நாங்கள் சிறப்பாக நடத்துவதை நீங்கள் பார்க்க வேண்டாமா? மாநாட்டில் உங்கள் அற்புதமான முன்மொழிவையும் தொகுப்பையும் நாங்கள் கேட்க வேண்டாமா? பாசிச பாணி ஆட்சியாளர்களை முறியடிக்கும் கருத்தியல் ஆயுதமாயிற்றே நீங்கள்… பாதியில் எங்களிடமிருந்து அது பறிக்கப்பட்டது நியாயமா? புரட்சிகர சக்திகளுக்கு சாதகமாக வர்க்கச் சக்திகளின் சேர்மானம் மற்றும் பலன்களில் மாற்றம் ஏற்படுத்துவோம் என்ற உங்கள் அறைகூவலை மீண்டும் கேட்கவே முடியாமல் செய்து விட்டீர்களே… உங்களைப் பார்த்தாலே, நீங்கள் முஷ்டி உயர்த்தி ரெட் சல்யூட் வைத்தாலே கட்சி அணிகளுக்கு உற்சாகம் ஊற்றெடுக்குமே.. அந்த ஊற்றையே மூடி விட்டீர்களே.. இது அடுக்குமா? இந்தியாவில் புரட்சிகர மாற்றத்துக்கான லட்சிய வேட்கையை அணைய விடாமல் வளர்ப்போம்…நீங்களாக நாங்கள் இருக்க முயற்சிப்போம்..!