வக்பு சொத்துக்களை கபளீகரம் செய்ய துடிக்கிறது பாஜக அரசு
சட்டமன்றத்தில் அனைத்து அரசியல் கட்சிகள் குற்றச்சாட்டு
ஒன்றிய பாஜக அரசு மக்களவையில் அறிமுகம் செய்துள்ள வக்பு சட்டத் திருத்த முன்வடிவை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார். இதைப் பாஜகவைத் தவிர அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் வரவேற்று பேசியது வருமாறு:- எஸ்.பி. வேலுமணி “வக்பு வாரியத் சட்டத்திற்கு 1937-ஆம் ஆண்டில் அரசியல் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
அதன்பிறகு, சில திருத்தங்கள் செய்யப்பட்டன. இதை இஸ்லாமிய மக்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டனர். ஆனால், தற்போது திருத்தம் செய்ய வேண்டும் என்று அந்த சமூக மக்கள் யாரும் கோரிக்கை வைக்கவில்லை. ஆனால், ஒன்றிய பாஜக அரசு திருத்தம் என்ற பெயரில் வக்பு வாரிய சொத்துக்களை அபகரிக்க முயற்சி செய்கிறது. ஏற்கெனவே கொண்டு வந்திருக்கும் வாரியத்தின் நோக்கத்தையே முழுமையாக சீரழிக்கிறது. இதனால், அந்த மக்களின் உரிமை பறிபோகும் அபாயம் உள்ளதால் முதலமைச்சர் கொண்டு வந்திருக்கும் தீர்மானத்தை அதிமுக முழுமையாக ஆதரிக்கிறது” என்று எஸ்.பி. வேலுமணி கூறினார். அசன் மவுலானா “அம்பேத்கர் வடிவமைத்து கொடுத்த அரசியல் அமைப்புச் சட்டத்தை நீர்த்துப் போக செய்வதாக ஒன்றிய பாஜக அரசின், வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா உள்ளது. நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்க மதத்தின் பெயரில் ஆட்சி யை நடத்த வேண்டும் என்றும் நினைக் கிறது.
இதற்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்” என காங்கிரஸ் உறுப்பி னர் அசன் மௌலானா கூறினார். டி. ராமச்சந்திரன் “இந்தியா முழுவதும் உள்ள ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயத்திற்கு எதிராக ஒன்றிய பாஜக அரசு சதித் திட்டம் தீட்டுகிறது. சட்டத்திருத்தம் கொண்டு வந்து சொத்துக்களை அபகரிக்க முயல்கிறது. இந்த நிலையில்தான், நமது முதலமைச்சர் பாதுகாப்பாக திகழ்கிறார். முதலமைச்சர் கொண்டு வந்துள்ள இந்த தீர்மானத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஆதரித்து வரவேற்கிறது” என்று சிபிஐ சட்டமன்ற கட்சித் தலைவர் டி. ராமச்சந்திரன் பேசினார். ம. சிந்தனைச்செல்வன் “பன்மை தன்மையை மறுதலித்து இந்தியாவை சூனியப் பாதையிலே வழி நடத்திக் கொண்டிருக்கும் ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வக்பு திருத்த மசோதாவை எதிர்த்து தனித் தீர்மானம் அல்ல தனித்துவமான தீர்மானத்தை முதலமைச்சர் எதிர்கொண்டு இருக்கிறார். ” என்று விசிக தலைவர் சிந்தனைச்செல்வன் பாராட்டினார். சதன் திருமலைக்குமார் “மதத்தின் பெயரால் சிறுபான்மை மக்களின் கழுத்தை நெறிக்க வேண்டும். அதற்காக மதம், மொழி, கல்வி என்று உரிமைகளை பறிக்க நினைக்கும் ஒன்றிய அரசின் ஆசை ஒருபோதும் நிறை வேறாது. எனவே, சட்டத்திருத்த மசோதாவை முழுமையாக திரும்பப் பெறவேண்டும்,” என்றார் மதிமுக தலைவர் சதன்திருமலை குமார்.
எம்.எச். ஜவாஹிருல்லா “இஸ்லாமிய மக்களிடம் உள்ள குமுறல்களை வெளிப்படுத்தும் வகையில் முதலமைச்சர் கொண்டு வந்திருக்கும் இந்த தீர்மானத்தை ஆதரிப்பதாக கூறிய மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, ஒரு சட்டத்தில் திருத்தம் என்றால் ஒன்றிரண்டு இருக்கலாம்; ஆனால், 117 திருத்தங்களை கொண்டு வந்திருக்கும் ஒன்றிய பாஜக அரசு, இஸ்லாமியர்களின் சொத்துக்களை வஞ்சமாக கபளீகரம் செய்ய துடிக்கிறது” என்று குற்றம் சாட்டினார். ஜி.கே. மணி “தன்னாட்சி அதிகாரம் பெற்றது வக்பு வாரியம். அந்த அமைப்பை பலவீனப்படுத்தும் முயற்சியை ஒன்றிய பாஜக அரசு கைவிட வேண்டும் அல்லது மறு பரிசீலனை செய்து ஒருமித்த கருத்தை கொண்டு வரவேண்டும்” என்றார் பாமக தலைவர் ஜி.கே.மணி. தி. வேல்முருகன் “இந்தியாவின் பன்முகத்தன்மையை சீர்குலைத்து சிறுபான்மை மக்களின் உரிமை களை பறிப்பதை எந்தச் சூழ்நிலையிலும் அனுமதிக்கக் கூடாது. கூட்டாட்சி தத்து வத்தை உடைத்து, பிளவுவாத அரசியலை முன்னெடுக்கும் பாஜகவின் சதி வேலை களை முறியடித்து, இந்தியாவிற்கே வழிகாட்டியாக வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்துள்ள தீர்மா னத்தை தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பாக வரவேற்கிறேன்” என்று அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறினார்.
ஈ.ஆர். ஈஸ்வரன் “ஒன்றிய பாஜக அரசு பிரிவினை வாதத்தை உருவாக்கும் நிலையில், இந்த மசோதாவுக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் இருந்து எப்போது எதிர்ப்பு குரல் வரும் என்று இந்தியா முழுவதும் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். இதற்கான முன்னெடுப்பை இப்போது முதலமைச்சர் எடுத்துள்ளார்,” என்றார் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சித் தலைவர் ஈ.ஆர். ஈஸ்வரன். ஜெகன்மூர்த்தி “அரசியல் அமைப்பு வழங்கி இருக்கும் உரிமைகளுக்கு மாறாக, ஒன்றிய பாஜக அரசு சட்டத் திருத்தம் செய்துள் ளது. இஸ்லாமிய மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக முதலமைச்சர் கொண்டு வந்திருக்கும் தீர்மானத்தை புரட்சி பாரதம் வரவேற்கிறது” என்று அக்கட்சியின் தலைவர் ஜெகன்மூர்த்தி கூறினார்.