tamilnadu

img

வண்ணக்கதிர் 3

இனிப்பு பானங்களின்  கசப்பான விளைவுகள்  

நாவிற்கு சுவையாகவும் அதிக இனிப்பாகவும் உள்ள சோடா போன்ற பானங்களில் மூளையின் சில பகுதிகளை தூண்டுவதற்காக அதிகப்படியான செயற்கை இனிப்புகள் சேர்க்கப்படுகின்றன. தற்காலிக உற்சாகத்தை தரும் இவற்றில் எந்தவிதமான சத்துகளும் இல்லை. இதைக் குடிப்பதை வழக்கமாகக் கொண்டால் பற்சிதைவு, உடல் பருமன், சர்க்கரை நோய், இதய நோய் ஆகியவற்றிற்கும் இட்டுச் செல்லும் என ஆய்வுகள் காட்டுகின்றன. இந்த ஆய்வில் 118 நாடுகளை சேர்ந்த 2.9 மில்லியன் மக்களின் தரவுகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இனிப்பாக்கப்பட்ட பானங்களை எடுத்துக் கொள்வோரில் 1.2 மில்லியன் புதிய இதய நோயாளிகளும் 2.2 மில்லியன் சர்க்கரை நோயாளிகளும் உண்டாவது தெரிந்தது. இதில் சர்க்கரை நோயால் 80,000 மரணங்களும் இதய நோயால் 2,58,000 மரணங்களும் நிகழ்கின்றன.  இத்தகைய கொடிய நிகழ்வுகளை இனிப்பு பானங்களின் தீமையை எடுத்துச் சொல்வதன் மூலம் குறைக்கலாம் என்கிறார் இந்த ஆய்வின் முதன்மை ஆசிரியரும் டஃப்டஸ் கழகத்தின் முன்னாள் ஆய்வு மாணவரும் இப்போதைய  வாஷிங்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்தவரும் சத்துணவு அறிவியலாளருமான லவ்ரா லாரா- கேஸ்டர். நமது உடல் இந்த பானங்களை விரைவாக செரிப்பதால் இரத்த சர்க்கரை அளவு கூடுகிறது; எந்தவித சத்தும் கிடைப்பதில்லை.   இந்த ஆய்வு நேச்சர் மெடிசின் (Nature Medicine) என்ற இதழில் வந்துள்ளது.

 கொடிதினும் கொடிது  

பெகாசஸ் உளவு மென்பொருள் மற்ற தீய மென்பொருளை (maleware)விட ஆபத்தானது. ஏனெனில் மற்றவை போல இது தகவல்களை வெறுமனே கண்காணிப்பது மட்டுமல்ல ;  கை பேசியையே தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விடுகிறது. மற்ற தீய மென்பொருட்கள் நாம் ஒரு இணைப்பைத் தொட்டாலோ அல்லது அதன் தளத்திற்கு சென்றால்தான் தொற்றிக் கொள்ளும். ஆனால் பெகாசஸ் ஒரு மிஸ்டு காலிலேயே கை பேசியை தன் வசம் எடுத்துக் கொண்டு விடுகிறது. வாட்ஸ் ஆப்பில் உள்ள ஒரு பலவீனத்தை பயன்படுத்தி இவ்வாறு செய்கிறது.  மேலும் ஐ மெசேஜ், ஃபேஸ் டைம், டெலிகிராம், மற்ற செயலிகளிலும் சொடுக்குதல் இல்லாமலேயே (zero click) தொற்றும் வண்ணம் உருவாகியுள்ளது. அந்த மென்பொருள் ஒருவரது கைபேசிக்குள் புகுந்துவிட்டால் குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள், அழைப்பு பதிவுகள் ஆகியவற்றை படிக்க முடியும். ஸ்கிரீன் ஷாட்ஸ், பிரவுசர் செயல்பாடுகள் ஆகியவற்றை பின்பற்ற முடியும். நமது தொடர்பாளர்களையும் அணுக முடியும். தரவுகளை அனுப்பும் கோப்புகளை தனது சர்வரில் சேமிக்க முடியும். வாட்ஸ் ஆப் போன்ற செயல்களில் உள்ள மறைப்பையும் (encyiption) இது ஏமாற்றிவிடுகிறது.  கைபேசியிலிருந்து என்கிரிப்ஷன் செய்யப்படுவதற்கு முன்னாலேயே நேரடியாக தரவுகளை இதை மறித்து விடுகிறது. பெரிதும் பாதுகாப்பானது என்று சொல்லப்படுகிற ஐ போன்களும் இதன் முன்னால் பலவீனமானதே. அதிலாவது கருவியின் செயல்பாடு பதிவு உண்டு. அதன் மூலம் தொற்றுக்களை கண்டுபிடிக்கலாம். ஆனால் ஆண்டிராய்டு போனில் எளிதாக இது உள் புகுந்து தன்னை மறைத்துக் கொண்டுவிடும்.  கைபேசியில் உள்ள இயக்கும் மென்பொருள் (operating system) எதுவாக இருந்தாலும் பெகாசஸ் குறி வைக்கப்பட்டவருடைய டிஜிட்டல் மற்றும் பவுதீக வாழ்வின் எல்லா அம்சங்களிலும் ஊடுருவ இயலும். எனவே உளவு பார்க்க மிகவும் சக்தி வாய்ந்த கருவியாக பார்க்கப்படுகிறது என்கிறார் பீப்பிள்ஸ் டெமாக்ரசி இதழ் கட்டுரையாளர் பப்பா சின்ஹா. இந்த மென் பொருள் என்எஸ்ஓ (NSO) எனும் நிறுவனத்தால் உண்டாக்கப்பட்டது. இஸ்ரேலின் மேனாள் உளவு அதிகாரிகளால் தோற்றுவிக்கப்பட்டு இயக்கப்படும் நிறுவனம் என்எஸ்ஓ.

செவ்வாய்க் கோளின்  வடக்கு தெற்கு வேறுபாடுகள்  

செவ்வாய்க் கோளில் தெற்குப் பகுதி மிகவும் உயர்ந்தும் வடக்குப் பகுதி தாழ்ந்தும் காணப்படுகின்றன. இதை இரு தன்மை(dichotomy) என்கின்றனர். இதன் காரணத்தை அறிவியலாளர்கள் ஆய்வு செய்துள்ளார்கள். நாசா அனுப்பிய இன்சைட் லேண்டர் எனும் செயற்கைக்கோள் செவ்வாயின் இரண்டு பகுதிகளுக்கும் நடுவிலுள்ள எல்லையில்  ஏற்பட்ட நில நடுக்கங்களை கண்டுபிடித்துள்ளது.  இந்த அதிர்வுகள் எவ்வாறு பரவின என்பதை ஆய்வு செய்ததில் செவ்வாயின் இரு வேறுபட்ட தன்மைகள் எவ்வாறு தோன்றின என்பது தெரிய வந்துள்ளது.  உயரத்தில் மட்டுமல்லாது தென்பகுதியில் பள்ளங்களும் உறைந்துபோன எரிமலைக் குழம்பு தடங்களும் காணப்படுகின்றன. இதற்கு மாறாக வடக்குப் பகுதியின் பரப்பு சீராகவும் சமதளமாகவும்  எந்தவித தடங்களும் இல்லாமலும் உள்ளது. மேலும் தெற்குப் பகுதியின் அடித்தளம் கனமானதாகவும் காந்தப்படுத்தப்பட்டதாகவும் உள்ளது. நில அதிர்வின்போது உண்டாகும் எஸ் அலைகள் தெற்குப்பகுதியில் விரைவாக ஆற்றலை இழப்பது காணப்பட்டது. தெற்குப்பகுதியின் அடித்தளத்திலுள்ள பாறைகள் சூடாக இருப்பதுவே இதற்குக் காரணமாக இருக்கும்.   ஒரு நேரத்தில் செவ்வாயிலும் பூமியில் இருப்பது போல கண்டத் தட்டுகள் (tectonic plates) இருந்தன. அந்த தட்டுகளின் நகர்வும் அதன் அடியிலிருந்த பாறைகள் உருகிய குழம்பும் இந்த வேறுபாடுகளுக்கு காரணமாக இருக்கலாம். கண்டத்தட்டுகள் நகர்வது நின்றபின் உருகிய குழம்புகள் உறைந்து போயிருக்கும். இந்த நிகழ்வுகளின் போது உருகிய குழம்புகள்  தெற்குப்பகுதியில் மேல் நோக்கியும் வடக்குப் பகுதியில் கீழ் நோக்கியும் பாய்ந்து இந்த ஏற்ற இறக்க வடிவங்களை உண்டாக்கி இருக்கலாம். இந்த முடிவுகளை உறுதிப்படுத்த செவ்வாய் நில நடுக்கம் குறித்த அதிக தரவுகள், செவ்வாய்க் கோள் எவ்வாறு உருவானது மற்றும் பூமி, பிற கோள்களுடன் அதை ஒப்பிடுவது ஆகியவை தேவைப்படுகின்றன. இந்த ஆய்வு ‘Geophysical Research Letters,’ எனும் இதழில் வெளிவந்துள்ளது.

அதிக நீர் அருந்துவது ஆபத்தானதா...!

அதிக நீர் அருந்துவது நல்லதா? ஒவ்வொரு நாளும் நாம் எட்டு கோப்பை நீரை அருந்தவேண்டுமா? இது உண்மையா? இல்லை வெறும் கற்பனையா? “ஹெச்2ஓ” (H2O)  என்ற வேதிப்பெயர் உடைய நீரின் நுகர்வு பற்றி அளவுக்கு அதிகமாக கவலைகளை சிலர் பரப்புகின்றனர். இந்த கேள்விக்கான பதில் சிக்கலானது. பொதுவாக நம் உடலில் நீரிழப்பு ஏற்படுவது இயல்பு. நம் உடலில் உள்ள நீரின் சதவிகிதம் அதிகம். இதை வியர்வையாக மாற்றி வெளியேற்றி நாம் நம் உடலை குளிர்ச்சியடையச் செய்கிறோம்.

அருந்தும் நீர் அமுதமாக இதனால் இந்த திரவத்தை நாம் ஈடு செய்யவேண்டும். ஆனால் குறுகிய அல்லது நடுத்தர கால அளவில் நம் உடல் திரவங்கள் இழக்கப்படுகின்றன. அப்போதும் நம் உடலில் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படுவதில்லை” என்று வியர்வை மற்றும் அருந்தும் நீர் ஆகியவை உடல் வெப்பநிலையில் ஏற்படுத்தும் தாக்கம் பற்றி ஆராயும் ரோஹாம்ட்டன் (Roehampton) பல்கலைக்கழக சூழலியல் உடற் செயல் ஆய்வாளர் லூயிஸ் ஹால்சி (Lewis Halsey) கூறுகிறார். “ஒவ்வொரு தனிநபருக்கும் தேவைப்படும் நீரின் அளவு வேறுபடுகிறது. பெரிய உடலுடன் அல்லது எப்போதும் சுறுசுறுப்பாக செயல்படுபவருக்கு அதிக நீர் தேவைப்படுகிறது. மிக மெலிதான உடல் அல்லது அதிக திசுக்களுடன் இருப்பதால் ஒருவர் மிகக் குறைந்த அளவு உடற்கொழுப்பு கொண்டவர் என்றால் கொழுப்பை விட திசுக்கள் அதிக நீரை பிடித்து வைத்திருக்கும் இயல்புடையது என்பதால் அவர் அதிக அளவு நீர் அருந்தவேண்டும். அத்தகையவரின் உடலில் உள்ள உடற்திசுக்களில் எப்போதும் நீர் இருப்பது அவசியம். சுவாசித்தலின் போது அதிக நீர் இழப்பு ஏற்படுவதால் குறைவான ஈரப்பதம் உள்ள இடங்களில் வாழ்பவர்கள் அதிக நீர் அருந்தவேண்டும்.  20 முதல் 30% நீர்ச்சத்து நாம் உண்ணும் உணவின் மூலமே நமக்கு கிடைக்கிறது. அதிக கலோரி அடங்கிய கெட்டியான உணவை உண்பவர் அதிக நீர் அருந்துவது நல்லது. அத்தகைய உணவுகள் கெட்டியாக இருப்பதற்கு அவற்றில் நீர்ச்சத்து குறைவாக இருப்பதே காரணம். போதுமான அளவு நாம் நீர் அருந்துகிறோமா என்பது எப்படி நமக்குத் தெரியும்? ஒரு நாளைக்கு இவ்வளவு என்ற இலக்கை மனதில் வைத்துக்கொண்டு நீரை அருந்தக்கூடாது. தாகம் எடுக்கும்போது தண்ணீர் குடியுங்கள். வயதாகும்போது தாகம் என்ற உணர்வு குறைவதால் இதில் விதிவிலக்கானவர்கள் முதியவர்கள். அவர்கள் அதிக நீர் அருந்தாவிட்டால் நீரிழப்பினால் ஏற்படும் நாட்பட்ட பிரச்சனைகள் ஏற்படும். நாள் முழுவதும் ஒருவர் தண்ணீர் குடித்துக் கொண்டேயிருக்கவேண்டும் என்று அவசியமில்லை. நீர்த்தேவையைஐ ஒழுங்கற்ற முறையில் கையாளும்போதும் அதை நம் உடல் சமாளிக்கிறது. உண்மையில் ஓய்வாக இருக்கும்போது ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு லிட்டருக்கும் கூடுதலான நீரை அருந்துவது நல்லதில்லை. அதனால் அந்த ஒரு லிட்டர் தண்ணீர்ப் பாட்டிலை உங்கள் பார்வையில் இருந்து விலக்கி வைக்கவேண்டும்”என்கிறார் ஹால்சி. தண்ணீர் குடிப்பது பற்றிய பொதுவான அறிவுரைகள் அவரவர் உடல் அல்லது மன நிலைக்கேற்ப வேறுபடும் என்பதை இதன் மூலம் நாம் உணரலாம்.