இர்ஃபான் ஹபீப் மீது தாக்குதல்! வைகோ கடும் கண்டனம் சென்னை, பிப்.14- புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர், பேராசிரியர் இர்ஃபான் ஹபீப் புதுதில்லி பல்கலைக்கழகத்தில் பிப்.12 ஆம் தேதி ஒரு கருத்தரங்கில் பங்கேற்ற போது, இந்துத்துவா மதவெறியர்கள் அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். “இந்திய சமுதாயத்திலும் பல்கலைக்கழகங்களிலும் சாதி” என்ற தலைப்பில் நடைபெற்ற அமர்வில், பேராசிரியர் இர்ஃபான் ஹபீப், “வரலாற்றைச் சிதைப்பது” மற்றும் “பாஜக- ஆர்எஸ்எஸ் இணைந்து வரலாற்றை மறு எழுத முயற்சிப்பது” குறித்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது கருத்தரங்கம் நடைபெற்ற அரங்கில் நுழைந்த பாஜக, ஆர்.எஸ்.எஸ் குண்டர்களும், ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த வர்களும் இர்ஃபான் ஹபீப் மீது கற்களை வீசி, தண்ணீர் நிறைந்த வாளியை மேடையின் மீது எறிந்துள்ளனர். வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் இர்ஃபான் ஹபீப் மீதான தாக்குதல், கருத்துரிமைக்கு எதிரான தாக்குதல். அரசியல் அமைப்பு சட்டத்தின் மீதான தாக்குதல். உலகம் அறிந்த கல்வியாளரும், வரலாற்று ஆய்வாளருமான 94 வயது நிரம்பிய பேராசிரியர் இர்ஃபான் ஹபீப் தாக்கப் பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்திற்கு எதிராக பேராசிரியர் இர்ஃபான் ஹபீப், வரலாற்று ஆசிரியர் ரொமில்லா தாப்பர் போன்றோரின் வலிமையான குரல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. இந்துத்துவா மதவெறியர்களால், அவர்கள் சிந்தனைக்கு விலங்கு பூட்டவோ, செயல்பாடுகளை தடுக்கவோ முடியாது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருக் கிறார்.