tamilnadu

img

சு.வெங்கடேசன் எம்.பி.யின் முயற்சியால் ஜவுளி அமைச்சக ஓய்வூதியர்களுக்கு நிலுவைத்தொகை வழங்கல்..... மத்திய ஜவுளித்துறை அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பு.....

மதுரை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்  முயற்சியால் ஜவுளி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் 500-க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்களுக்கு நிலுவைத் தொகை அனுமதிக்கப்பட்டுள்ளது.இதற்கு மத்திய ஜவுளித்துறை அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

மத்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஜவுளி குழுவில் பணியாற்றி ஓய்வு பெற்ற 500க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்களுக்கு எனது தலையீட்டின் படி 7வது மத்திய ஊதியக்குழுவின் பரிந்துரைகள் அமலாக்கப்பட்டுள்ளது.மத்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஜவுளிக்குழுவில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களுக்கு 7வது மத்திய ஊதியக்குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்படவில்லை. இது தொடர்பாக ஜவுளிக்குழு ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பாக எனக்கு 01.8.2019, 02.11.2019 ஆகிய தேதிகளில் மனு கொடுத்தனர். இதனடிப்படையில் ஜவுளிக்குழுவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு 7-வது மத்திய ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தக்கோரி, நான் 07.09.2019 அன்று மத்திய ஜவுளி துறை அமைச்சர் ஸ்மிருதி ஜீபின் இராணி அவர்களுக்குக் கடிதம் எழுதினேன்.

எனது கடிதத்தின் அடிப்படையில் மத்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் 500-க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்களுக்கு 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை 01.01.2016 முதல் அமல்படுத்தியதுடன், 01.10.2017 முதல் நிலுவைத் தொகை அனுமதிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆணை வழங்கிய மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி ஜீபின் இராணிக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.