tamilnadu

img

கேள்வி கேள்! - கோவி.பால.முருகு

கேள்வி கேள்!

“தம்பி…அழகு இன்னக்கி சாயந்திரம் நம்ம சிவன் கோயில்ல யாரோ சிவனேசச்செல்வியாம் ஒரு அம்மா ஆன்மீகச் சொற்பொழிவு செய்யப் போறாங்களாம். நாம போயிட்டு வருவோமா? நல்லா பேசுவாங்கலான்டா..”அம்மாவின் பேச்சைத் தட்டாத அழகு “சரிம்மா.. எப்ப போகணும்?” சாயந்திரம் ஆறு மணிக்குப் போவோம்.

மாலை ஆறு மணிக்கு அழகும் அவன் அம்மாவும் சிவன்  கோயிலுக்கு வந்துவிட்டார்கள். சொற்பொழிவு இன்னும் தொடங்கவில்லை. சொற்பொழிவாளர் வந்துவிட்டாலும் கூட்டம் குறைவாக இருந்ததால் நிகழ்ச்சியைத் தொடங்கா மல் இருந்தார்கள்.ஒவ்வொருவராக வந்து கொண்டிருந்த னர். சொற்பொழிவு ஏற்பாட்டாளர்கள் குறைந்தது ஐம்பது  பேராவது வரட்டும் என்று காத்திருந்தனர். கோயிலின் வெளிப் பிரகாரத்தில் மேடை அமைக்கப் பட்டிருந்தது. பார்வையாளர்கள் அமர பெரிய ஜமக்காளம் கருங்கல் தரையில் விரிக்கப் பட்டிருந்தது. வந்தவர்கள் அதில் அமர்ந்து கொண்டனர். இப்போது சுமார் எழு பத்தைந்துபேர் வந்துவிட்டார்கள். சொற்பொழிவாளர் சிவ னேசச்செல்வி மேடையில் ஏறி அவருக்கு விரிக்கப் பட்டி ருந்த விலையுயர்ந்த கம்பளத்தில் அமர்ந்தார்.நெற்றி நிறைய  திருநீறு, கண் புருவ மத்தியில் சந்தனப் பொட்டு, சந்தனப்  பொட்டின் இடையில் சிறிய அளவில் குங்குமப் பொட்டு.தலை நிறைய மல்லிகைப் பூச்சரம் பின் கழுத்தைத் தாண்டி  தொங்கியது. சரசரக்கும் விலையுயர்ந்த பட்டுப் புடவை, கழுத்தே தாங்க முடியாத அளவிற்கு தங்கமும், வைரமுமாக  ஜொலித்தது. “அரகர நமப் பார்வதி பதயே!தென்னாடுடைய சிவனே போற்றி!”என்று சொல்ல எதிரே அமர்ந்திருந்தவர்கள் “என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி”என்று ஒருமித்த குர லில் சொல்ல தன்னுடைய சொற்பொழிவைத் தொடங்கிப்  பேசிக் கொண்டிருந்தார்.இடையில்“ஆன்மீக அன்பர்களே!  உங்களுக்கு ஒரு கதையைச் சொல்லப் போகிறேன்.அது வும் நடந்த உண்மைக் கதை என்று சொல்லிவிட்டுக் கதை யைச் சொல்ல ஆரம்பித்தார். “அதாவது ஒரு ஊரில் பதினைந்து வயதான இரண்டு நண்பர்கள். இருவரும் பத்தாம் வகுப்புப் படித்துக் கொண்டி ருந்தார்கள். ஒருவன் பெயர் சிவனேசன். இன்னொருவன் பெயர் அறிவுக்கரசு. இருவரும் இணைபிரியா நண்பர்கள்  எங்கு சென்றாலும் சேர்ந்தே செல்வார்கள். ஒரு நாள் கடைத்  தெருவுக்கு இருவரும் செல்லும்போது வழியிலே இருக்கும்  பெருமாள் கோயிலுக்குப் போக ஆசைப் பட்டான் சிவ னேசன்” டேய்…அறிவு வாடா கோயிலுக்குப் போயிட்டு வரலாம்” என்றான். “டேய்..சிவா.நான்தான் கோயிலுக்கு வரமாட்டேன்னு தெரியுமில்ல?அப்புறம் ஏன் என்னைக் கூப்புடுற.நீ போயிட்டு  வா.நான் வெளியில் நிற்கிறேன்”.சிவனேசன் கோயிலுக்குப் போய் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தான்.வெளியே நின்று கொண்டிருந்த அறிவு தற்செயலாகக் குனிந்து தரையைப்  பார்த்தான்.என்ன ஆச்சரியம் புத்தம் புதிய ஐநூறு ரூபாய்  நோட்டு அவன் காலடியில் கிடந்தது. சுற்றுமுற்றும் பார்த்தவன் யாரும் இல்லை என்பதை உறுதிப் படுத்திக் கொண்டு பணத்தை எடுத்துப் பையில் வைத்துக் கொண்டான். கதை சொல்லிக்கொண்டுவந்த சிவனேசச்செல்வி பக்கத்தில் இருந்த வெள்ளிக் கூஜாவைக்  காட்ட அங்கிருந்த பெண் உதவியாளர் கூஜாவில் இருந்த  பால், சுக்கு, பனங்கற்கண்டு கலந்த சூடான கசாயத்தைக்  கொஞ்சம் வெள்ளி டம்ளரில் ஊற்றிக் கொடுத்தார். வாங்கிக்  குடித்தவர்,ஒரு கனைப்போடு பேச ஆரம்பித்தார். “கோயிலுக்கு உள்ளே சாமி கும்பிடச் சென்ற சிவனேசன்  முகத்தில் இரத்தம் வழிய வெளியே வந்து கொண்டிருந்தான். அதைப் பார்த்த அறிவு பதறிப் போனான்”டேய்.. சிவா என்ன  ஆச்சுடா?முகமெல்லாம் இரத்தம் என்றவன், பக்கத்தில் இருக்கும் குழாயடிக்கு அழைத்துச் சென்றான். அடிபட்ட  இடத்தைக் கழுவிவிட்டு மண்டை காயம்பட்ட இடத்தை இரத்தம் வெளியேறாமல் அழுத்திப் பிடித்துக் கொண்டான்.  சிறிது நேரத்தில் இரத்தம் வழிவது நின்றது. “சரி..இப்ப சொல்லு என்னாச்சுன்னு?” ஒன்னுமில்லடா பக்கத்தில இருக்கிற சாமியைப் பார்த்துக் கொண்டே எதிரே தொங்குகிற வெண்கல மணியைக் கவனிக்கல.அது  தலையில் மோதிவிட்டது.மெதுவாக வந்ததால் பெரிய அளவு மண்டை உடையவில்லை”என்று சிவனேசன் சொன்னவுடன்”டேய்...வாடா முதல்ல டாக்டர்கிட்டப் போவோம்”என்று சொல்லிவிட்டு டாக்டரிடம் அழைத்துச் சென்றான். அப்போதுதான் அறிவு ஒரு செய்தியை சிவகுமாரி டம் சொல்ல ஆரம்பித்தான்.டேய்..பக்திப் பழமே! கோயி லுக்குப் போன உனக்குக் கடவுள் தந்த பரிசு மண்டையை  உடைய வைத்தது.கோயிலுக்கு வராத எனக்கு ஐநூறு ரூபாயைக் கொடுத்திருக்கிறார்.பையிலிருந்து பணத்தை எடுத்துக் காண்பித்து இந்த பணம் என்னுடைய காலடியில் கிடந்தது.இதற்கு என்ன சொல்லப் போற?”என்றான். “அறிவு இங்கதான் நீ தவறா புரிஞ்சிக்கிற..நான் கடவுளை  நம்புவதால் எனக்கு நேர இருந்த பெரிய விபத்து சிறிய  விபத்தோடு போய்விட்டது.அதுபோல் நீ கடவுளை நம்பாத தால் உனக்குக் கிடைக்க வேண்டிய பெரிய புதையல் வெறும் ஐநூறு ரூபாயோடு நின்றுவிட்டது”என்றான். இக்கதையைச் சொல்லிமுடித்த சொற்பொழிவாளார் சிவனேசச்செல்வி”எனவே ஆன்மீக அன்பர்களே கடவுளை  நம்புகிறவர்களை இறைவன் பெரிய விபத்துகளில் இருந்து  காப்பான்.நம்பாதவர்கள் பெரிய இழப்பினைச் சந்திப்பார்கள்.எனவே இறைவன் திருவடிகளைச் சேவித்தி ருப்பதே நமக்கு நன்மை தரும்”என்று சொல்லிவிட்டு அரஹர  நமப் பார்வதி பதயே!தென்னாடுடைய சிவனே போற்றி என்று  சொல்லி சொற்பொழிவை முடித்தார். வெளியே வந்த அழகிடம் அவன் அம்மா கேட்டார் “தம்பி.. சொற்பொழிவு எப்படி இருந்தது? ஒரு கதை சொன்னாங்க, கேட்டியா? அதனாலதான் கடவுளை நிந்திக்கக் கூடாது. வணங்கணும்”என்றவுடன் அழகு லேசாகச் சிரித்துக் கொண்டே ஆரம்பித்தான். ”அம்மா எனக்கு ஒரு சந்தேகம்.கோயிலுக்குப் போன தால பெரிய விபத்திலேர்ந்து தப்பித்ததாகவும். கடவுளை  வணங்காமல் வெளியே நின்றவனுக்குக் கிடைக்க இருந்த பெரிய புதையலை அவன் இழந்து விட்டதாகவும் அந்த அம்மா சொன்னாங்க… நான் கேட்கிறேன் கடவுளை வணங்கப் போனவனுக்குச் சிறு காயம்கூட ஏற்படாமல் கடவுள் தடுத்திருக்கலாம். வெளியே கடவுள் நம்பிக்கை இல்லாதவனுக்கு அந்தப் பணத்தைக் கொடுக்காமல் இருந்திருக்கலாம். அதுதான் சரியானது.மாறாக இப்படிச் சொல்வதில் கடவுளின் சக்தி எங்கே இருக்கிறது? என்றான். தொடர்ந்து அம்மா.. பழைய திரைப் படம் ஒன்றில் ஒரு  வசனம் வரும்”ஆண்டவன் புண்ணியத்தில ஒரு கண்ணு போயி..ஒரு கண்ணு தப்பிச்சிகிட்டு” என்பதுதான் அது.எவ்வளவு அழகா நாசுக்கா சொல்லியிருக்கிறாரு பாரு. ஆண்டவன் புண்ணியத்தில ஒரு கண்ணின் பார்வை போயிட்டுது. அதைப் பேசாமல் ஆண்டவன் புண்ணியத்தில்  இன்னொரு கண் காப்பாற்றப்பட்டது என்று சொல்வது எவ்வ ளவு மூடத்தனமானது. உண்மையிலேயே ஆண்டவன் இருந்தால் இரண்டு கண்களையும் அல்லவா காப்பாற்றி இருக்கவேண்டும்” என்றான். அதைக் கேட்ட அழகுவின் அம்மா” இப்படியெல்லாம் உனக்குப் பேசக் கத்துக் கொடுத்தது யாரு?” “அம்மா... எதையும் எதற்கு? ஏன்? என்ற கேள்வியைக் கேட்டு அறிவியல் பூர்வமான முடிவை  ஏற்றுக் கொள்வதற்குத்தான் நமக்கு ஆறாவது அறிவாகிய பகுத்தறிவைப் பரிணாம வளர்ச்சியில் பெற்றிருக்கிறோம். அதைப் பயன்படுத்தாமல் இருந்தால் அந்த அறிவைப் பெற்றதற்கு அர்த்தமில்லாமல் போய்விடுமே!” என்ற அழகுவின் பேச்சைக் கேட்ட அவன் அம்மாவுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. அதோடு மீண்டும் வலியுறுத்திப் பேசுவதை நிறுத்திக் கொண்டாள். மேலும் விவாதம் செய்தால் இப்படி சிந்திப்பவன் எல்லா வற்றுக்கும் பதில் வைத்திருப்பான். தேவையில்லாமல் கடவுள் நிந்தனைக்குத் தன் மகன் ஆளாகக் கூடாது என்று  நினைத்து விவாதம் தொடர்வதை நிறுத்திக் கொண்டாள்.