ஏப்.3 - மாநில உரிமை பாதுகாப்புக் கருத்தரங்கம்
மு.க.ஸ்டாலின், பினராயி விஜயன், சித்தராமையா பங்கேற்பு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டையொட்டி, ஏப்ரல் 3 அன்று மதுரையில் மாநில உரிமைப் பாதுகாப்புக் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில், தமிழ்நாடு - கேரளம் மற்றும் கர்நாடக மாநில முதல்வர்கள் பங்கேற்க உள்ளனர். இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், செங்கல்பட்டில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது: சிபிஎம் அகில இந்திய 24-ஆவது மாநாடு, ஏப்ரல் 2 முதல் 6 வரை மதுரையில் நடைபெற உள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த மாநாட்டில் நாடு முழுவதுமிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் அனைத்து மாநிலங்களிலுமிருந்து பங்கேற்க உள்ளனர். அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். ஏப்ரல் 3 அன்று, ‘மாநில உரிமைகள் காப்போம்’ என்ற தலைப்பில் 3 மாநில முதல்வர்கள் கலந்து கொள்ளும் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இந்த கருத்தரங்கில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை பாரபட்சமாக பார்ப்பது; நிதி ஒதுக்கீட்டில் பழி வாங்கும் போக்கில் நடந்து கொள்வது, தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என கட்டாயப்படுத்துவது உள்ளிட்ட மாநிலங்களுக்கு எதிரான ஒன்றிய அரசின் தாக்குதல்கள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. இந்த கருத்தரங்கம் அகில இந்திய அளவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். இன்று இந்திய மக்கள் சந்திக்கக்கூடிய தேசிய அரசியல் நிலைமை, வேலையின்மை, விலைவாசி உயர்வு போன்ற முக்கிய பிரச்சனைகள் குறித்தும் இந்த மாநாடு விவாதிக்க உள்ளது. மேலும் அதற்கான தீர்வு குறித்து திட்டமிடுதலையும் இந்த மாநாடு முடிவு செய்யும். இவ்வாறு பெ. சண்முகம் கூறினார்.