tamilnadu

மாணவி பாலியல் வன்கொடுமைச் சம்பவம் அண்ணா பல்கலை. நிர்வாகம் மீதும் விசாரணை நடத்திடுக!

சென்னை,டிச.26- பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், அடையாளம் தெரியாத நபர்களை விசாரணையின்றி அனுமதித்த அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்தின் மீதும் விசாரணை நடத்த வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர்  எஸ்.வாலண்டினா, மாநிலப் பொதுச்செயலாளர் அ.ராதிகா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.   சமீப காலமாக தமிழகத்தில் பெண்கள் குழந்தைகள் மீதான வன்முறைகள் அதிகமாகி வருகிறது. குறிப்பாக பள்ளிக்கூடங்களில் கல்லூரிகளில் மாணவிகள் மீதான வன்முறைகளும்குற்றச் செயல்கள் அதிகரித்து வருவது மிகுந்த கவலை அளிக்கிறது.   அடையாளம் தெரியாத நபர்கள் கல்வி வளாகத்திற்குள்  நுழைகிற போது எவ்வித விசாரணைக்கும் உட்படுத்தாமல் அனுமதித்த அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்தின் மீதும் விசாரணை நடத்திட வேண்டும்.  சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் போதுமான பாதுகாப்பு வசதிகள் இல்லாததே இத்தகைய சம்பவத்திற்கு மிக முக்கிய காரணமாகும். தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் குற்றவாளி ஞானசேகரன் இதேபோல பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக விவரங்கள் தெரிவிக்கிறது.  கல்வி வளாகங்களில் ஹெல்ப் லைன் காவலர்கள்   இத்தகைய கொடும் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் சுதந்திரமாக நடமாடுவதை காவல்துறை எப்படி அனுமதிக்கிறது? என்கிற கேள்வியும் எழுகிறது. தமிழ்நாட்டில் பெண்கள் பயிலும் கல்வி வளாகங்களுக்கு கூடுதல் பாதுகாப்பை அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும். அச்சமின்றி சுதந்திரமாக கல்வி கற்பதற்கான சூழலை உருவாக்கிட வேண்டும். மேலும் இத்தகைய குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உரிய தண்டனை வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்.  கல்வி வளாகங்களில் மாணவிகள் மீதான வன்முறைகளை தடுத்து நிறுத்துவதற்கு தமிழ்நாடு உயர் கல்வித் துறையும், தமிழக காவல்துறையும் துரிதமாக நடவடிக்கை எடுத்திட வேண்டும். கல்வி வளாகங்களுக்குள் காவல்துறை மாணவிகளின் பாதுகாப்பிற்காக ஹெல்ப் லைன் காவலர்களைக் கொண்ட பாதுகாப்பு அறை உள்ளிட்டவைகளை ஏற்படுத்திட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.