ஆர்எஸ்எஸ்-இன் தலைவரான மோகன் பகவத் கோவில்/மசூதி தாவாக்கள் குறித்து இப்போது புதிய பாணியில் பேசியிருப்பதை பார்த்து பலர் தலையைப் பிய்த்துக்கொண்டி ருக்கிறார்கள். டிசம்பர் 19 அன்று புனேயில் அவர் பேசும்போது, இனிப் புதிதாக கோவில்/மசூதி தாவாக்கள் எழுப்பப்படுவதை அவர் ஏற்க மறுத்திருக்கிறார். ராமர் கோவில், இந்துக்களின் நம்பிக்கை தொடர்பான சங்கதியாகும் என்று அவர் கூறியிருக்கிறார். தவறாக வழிநடத்தும் முயற்சி அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது இந்துக்களின் நம்பிக்கை சார்ந்த விஷயமாக இருந்தது. அதனை அடுத்த கட்ட நடவடிக்கை களுக்கு கொண்டு செல்லக்கூடாது என்று கூறி யுள்ள அவர் இறுதியாக, “ஒவ்வொரு நாளும் புதிய தாவா எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதனை எப்படி அனுமதிக்க முடியும்? இது தொடர முடியாது,” என்றும் திருவாய் மலர்ந்திருக் க்கிறார். இவருடைய இந்தப் பேச்சைப் பலர் பலவிதங்களில் விளக்கிக் கொண்டிருக் கிறார்கள். பலர் இதனை, ‘கோவில்கள் இருந்த இடத்தில் அதனை இடித்துவிட்டு மசூதிகள் கட்டப்பட்ட வரலாற்றுத் தவறுகள் தொடர்பாக ஆர்எஸ்எஸ் மேற்கொண்டிருந்த நிலைப் பாட்டில் இது ஒரு முக்கியமான மாற்றம்’ என்று கருதுகிறார்கள். சிலர் இவருடைய கூற்று குறித்து சந்தேகத்தைக் கொண்டிருக்கிறார்கள். சிலர், ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் உண்மையான நிலையை மூடி மறைப்பதன்மூலம் மக்களைத் தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார் என்று நினைக்கிறார்கள்.
2022 முகாம் பேச்சு...
மோகன் பகவத்தின் இந்தப் பேச்சைக் கேட்டுவிட்டு, ஆர்எஸ்எஸ் தன் நிலைப்பாட்டைத் தலைகீழாக மாற்றிக்கொண்டுவிட்டது என்று ஒருவர் கருதினால் அவர் ஓர் ஏமாளியேயாவார். பகவத் கூறியதன் உண்மையான அர்த்தத்தை ஒருவர் புரிந்துகொள்ள வேண்டுமானால், அவர் 2022 ஜூனில் பேசியது என்ன என்று ஒருவர் பார்த்திட வேண்டும். நாக்பூரில் நடைபெற்ற பயிற்சி முகாம் ஒன்றில் ஆர்எஸ்எஸ்-காரர்களிடம் உரையாற்றும்போது, “ஒவ்வொரு மசூதியிலும் ஒரு சிவலிங்கத்தைக் கண்டு பிடித்து ஒவ்வொரு நாளும் ஒரு புதிய சர்ச்சை யைத் தொடங்க வேண்டியதன் அவசியத்தை” அவர் வலியுறுத்தி இருந்தார். உடன்பாடு அல்லது நீதிமன்றம் மூலம் சில வரலாற்றுக் காரணங்களுக்காக ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் ஆர்எஸ்எஸ் ராமஜென்மபூமி போராட்டத்தில் இணைந்ததாக அவர் விளக்கினார். அவ்வாறு கூறும்போது அவர், “அந்தப் பணியை முடித்துவிட்டோம், இனி இதுபோன்ற போராட்டங்களைத் தொடர வேண்டிய தேவை இல்லை” என்றார். இவ்வாறு கூறிய அதே நபர்தான் பின்னர், ஞான வாபி மசூதி - காசி விஸ்வநாதர் கோவில் தாவா வைத் தோண்டி எடுத்தார். அங்கு சம்பந்தப்பட்ட அனைவரும் ஒன்றாக அமர்ந்து பரஸ்பர சம்மதத்துடன் ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும் அல்லது நீதித்துறையின் முடிவே இறுதியானது எனக் கருதி, நீதிமன்றத்தின் முடிவை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார். இவ்வாறு கூறி விட்டு, இஸ்லாம் இந்தியாவிற்கு படை யெடுப்பாளர்களுடன் வந்து கோவில்கள் அழிக்கப்பட்டபோதுதான் ஞானவாபி மசூதியாக மாறியது என்று கூறினார். அயோத்தி, காசி மற்றும் மதுராவில் உள்ள கோவில்/மசூதி தாவாக்கள் இந்துக்களுக்கு ஆதரவாக தீர்க்கப்பட வேண்டும் என்பதே பாஜக-ஆர்எஸ்எஸ் நிலைப்பாடு. இவ்வாறு இந்துக்களுக்கு சாதகமாகத் தீர்க்கப்பட்டு விட்டால், இதர தாவாக்களை எடுக்க வேண்டிய தேவை இல்லை.
மதுராவுக்கும் பொருந்தும்
பாபர் மசூதி இடிப்புக்கு வழிவகுத்த இயக்கத்தில் ஆர்எஸ்எஸ் தீவிரமாகப் பங்கேற்ற தால் ராமர் கோவில் போராட்டம் தனித்துவ மானது என்று பகவத் அந்த உரையில் குறிப்பிட்டார். ஞானவாபி மசூதி தாவாவும் இவ்வாறே முக்கியமானது என்றாலும் இதற்காக கிளர்ச்சி நடவடிக்கைகள் கூடாது என்றும் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே பரஸ்பர உடன்பாடு அல்லது நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் இது தீர்க்கப்பட வேண்டும் என்றும், மதுராவில் உள்ள ஈத்கா - கிருஷ்ணா கோவிலுக்கும் இரு பொருந்தும் என்றும் கூறினார். பகவத்தின் தற்போதைய பேச்சு அந்த 2022 உரையின் கட்டமைப்பிற்குள் உள்ளது. ராமர் கோவில் இயக்கம் பற்றி அவர் பேசுகிறார். தற்போது அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி முடிந்து விட்டதால், மற்ற கோவில் பிரச்சனைகளுக்காக போராட்டம் நடத்தக்கூடாது என்கிறார். வாரணாசி மற்றும் மதுராவில் உள்ள தகராறுகள் தொடர்பாக நீதிமன்றங்கள் மூலமாக சட்ட நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. அதையும் தாண்டி, புதிய கோவில்/மசூதி சர்ச்சைகள் எழுப்பப்படு வதையும், கிளர்ச்சியடைவதையும் அவர் விரும்பவில்லை. ஆனால், பகவத் பேசும் கூற்றுகளுக்கும், ஸ்தலத்தில் என்ன நடை பெற்றுக் கொண்டிருக்கிறது என்பதற்கும் இடையே உள்ள இடைவெளி தெளிவான தாகும்.
17 வழக்குகள்
ஒவ்வொரு மசூதியிலும் சிவலிங்கங்களைத் தேடக் கூடாது என்று அவர் 2022இல் ஆற்றிய உரைக்குப் பிறகு, பல்வேறு மாநிலங்களில் உள்ள பல்வேறு மசூதிகள் குறித்து வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ராஜஸ்தானில் உள்ள ஷாஹி ஜமா மசூதி, ஆஜ்மீர் ஷெரீப் தர்கா மற்றும் சமீபத்தில் சம்பலில் ஏற்பட்டுள்ள தாவா உட்பட மொத்தம் பதினேழு வழக்குகள் மீது விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. பகவத் புனேயில் தான் ஆற்றிய உரையின் போது, “மதத் துவேஷத்தை விசிறிவிடாமல் எவரொருவரும் இந்துக்களின் தலைவராக மாற முடியாது” என்று கூறியிருந்தார். 1991ஆம் ஆண்டின் வழிபாட்டுத் தலங்கள் சட்டத்திற்கு முரணான மதத் தலங்கள் மீதான தகராறில் வழக்குத் தொடர நீதித்துறையில் சில நீதிபதிகள் தற்போது தங்களுக்கு ஒத்துழைத்து வருவதை பகவத் அறிந்திருக்கிறார். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த சந்திரசூட், ஞானவாபி மசூதியின் கணக்கெடுப்பை எவ்வாறு தொடர அனுமதித்தார் என்பதை அறிந்ததன் மூலமாக பகவத்துக்கு நீதித்துறை தங்கள் பக்கம் இருக்கும் என்பதில் இருந்த நம்பிக்கை தவறாகிவிடவில்லை.
சட்டப்பூர்வமாக சாதகமாக்க
மோகன் பகவத், சம்பலில் நடந்ததைப் போல வன்முறை மற்றும் குழப்பத்திற்கு வழி வகுக்கும், நாடு முழுவதும் கோவில்-மசூதி தகராறுகளை எழுப்பும் நடவடிக்கைகளை விரும்பவில்லை. தங்களுடைய மோடி அர சாங்கத்தின்கீழ் இந்துத்துவா நிகழ்ச்சிநிரலை மிகவும் செம்மையாகத் திட்டமிட்டு சுமூக மான முறையில் முன்னெடுத்துச் செல்லவே விரும்புகிறார். அரசின் கீழ் செயல்படும் பல்வேறு துறைகளும் ஆர்எஸ்எஸ்-இன் செல்வாக்கிற்குள் வருவது அதிகரித்துக் கொண்டிருக்கக்கூடிய நிலையில், வாரணாசி யிலும், மதுராவிலும் தங்களுடைய இந்துத்துவா நோக்கங்கள் அமைதியான முறையில் சட்டப்பூர்வமாகவே தீர்க்கப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் ஏற்பட்டிருக்கின்றன. இவ்வாறு சூழ்நிலைகள் தங்களுக்கு சாதகமாக இருக்கக்கூடிய பின்னணியில் தவறான திட்ட மிடல்களும், அராஜக நடவடிக்கைகளும் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும் என அவர் கருதுகிறார். எனவேதான் பகவத் தங்க ளுடைய அடிப்படை இந்துத்துவா நிகழ்ச்சி நிரலுக்கு சேதம் ஏற்படாத விதத்தில் நடவடிக்கை களைத் திட்டமிட்டிருக்கிறார். ஆர்கனைசர் ஏடு மோகன் பகவத், தங்களுடைய இந்துத்துவா ஆட்சி ஒருங்கிணைக்கப்படும் சமயத்தில், தாங்கள் புரிந்துள்ள “வரலாற்றுத் தவறுகளை” சரிசெய்துகொள்ள முடியும் என்று நம்புகிறார். “இந்து நாகரிகத்தை மீட்பதற்கான போராட்டம் கைவிடப்படவில்லை” என்பதை ஆர்எஸ்எஸ்-இன் அதிகாரப்பூர்வ ஏடான “ஆர்கனைசர்” தன் அட்டைப்படத்தில் தெளிவுபடுத்தி இருக்கிறது. எனவேதான் பகவத்தின் பேச்சு உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசும் இரண்டகமானதாகும்.
உச்சநீதிமன்றத்தின் கையில்
இந்தப் பின்னணியில்தான், 1991ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின் செல்லு படியாகும் தன்மையை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு முக்கியமான தாகும். இத்தகைய தாவாக்கள் மீதான கீழமை நீதிமன்றங்களில் அனைத்துவிதமான விசார ணைகளுக்கும் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த ரிட் மனுக்களுக்கு நான்கு வாரங்களுக்குள் எதிர் உறுதிவாக்கு மூலங்களைத் தாக்கல் செய்யுமாறு அரசை கேட்டுக் கொண்டுள்ளது. இதுவரை அரசாங்கம் அவ்வாறு செய்வதை தவிர்த்து வந்தது. ஒன்றிய அரசு எவ்வாறு பதிலளிக்கிறது என்பது இந்த விஷயத்தில் பாஜக-ஆர்எஸ்எஸ் வியூகம் என்ன என்பது பற்றிய குறிப்பை வழங்கும். அரசமைப்புச் சட்டத்தின் செல்லுபடித்தன்மை யை நிலைநிறுத்துவது மட்டுமின்றி, அதைச் செயல்படுத்துவதன் மூலமும் உச்ச நீதிமன்றத்தால் மட்டுமே இந்த அழிம்பினை முளையிலேயே கிள்ளி எறிய முடியும்.
டிசம்பர் 25, 2024 - தமிழில்: ச.வீரமணி