திருத்தம் மற்றும் திரும்பப்பெறும் மசோதா, இருக்கும் சட்டங்களை மேலும் மோசமாக்குகிறது! மக்களவையில் சு. வெங்கடேசன் எம்.பி. கடும் எதிர்ப்பு
புதுதில்லி, டிச. 16 - ‘திருத்தம் மற்றும் திரும்பப்பெறும் மசோதா - 2025’ மீது, மக்களவையில் நடைபெற்ற விவாதத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் எம்.பி. பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: ‘திருத்தம் மற்றும் திரும்பப்பெறும் மசோதா-2025’ மசோதா ஏறக்குறைய 70-க்கும் மேற்பட்ட சட்டத் திருத்தங் களை கொண்டு வருகிறது. சட்டங்கள் காலத்திற்கேற்றபடி மாற்றப்பட வேண்டுமென்பதில் மாற்றுக் கருத்தில்லை. நல்லவற்றை சிறந்தவை யாக மாற்றுவதற்கும், சிறந்ததை மிகச் சிறந்தவையாக மாற்றுவதற்கும் திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும். ஆனால் நல்லதை மோசமாக மாற்றுவதற்கும், அதைவிட மோசமாக மாற்றுவதற்குமான திருத்தங்கள் கொண்டு வரப்படக்கூடாது. இங்கே பேசுகையில், நீதித்துறை யிலே ஒரு வழக்கு மனுத்தாக்கல் செய்யப்பட்டால் பதிவு செய்யப் படுவதற்கு எவ்வளவு நாட்கள் ஆகிறது, பதிவு செய்யப்பட்ட வழக்கு விசார ணைக்கு வர எவ்வளவு மாதங்கள் ஆகிறது, விசாரணைக்கு வந்த வழக் கில் தீர்ப்பு வருவதற்கு எத்தனை ஆண்டு ஆகிறது என்று மரியாதைக்குரிய கல்யாண் பானர்ஜி குறிப்பிட்டார். நீதிபதிகளின் சார்பு தீர்ப்பில் விழுவது சாபக்கேடு எங்களது அனுபவம் அதற்கு நேர் தலைகீழானது. சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை யினுடைய ஒரு வழக்கு, நவம்பர் 7-ஆம் தேதி மனுத்தாக்கல் செய்யப்பட்டு, 10-ஆம் தேதி பதிவு செய்யப்பட்டு, டிசம்பர் 1-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது. வெறும் இருபதே நாட்களில் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டு தீர்ப்பு வழங்கப்படுகிறது. அதுவும் அந்தப் பிரச்சனை நூற்றாண்டுகளாக நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டு பல முறை தீர்ப்பு வழங்கப்பட்ட பிரச்சனை. நீதிபதிகளின் சாயல் தீர்ப்பில் விழுவது போன்ற சாபக்கேடு வேறெது வும் இல்லை. தனக்கு அந்தப் பிரச்சனை யில் ஒரு கருத்து இருக்கிறதென்றால் அதிலிருந்து விலகி வேறொரு நல்ல நீதிபதி விசாரிக்க வேண்டுமென்கிற நாகரிகத்தை நீதித்துறை தவறவிட்டுக் கொண்டிருக்கிறது என்பதை மிக அதிர்ச்சியோடு நாங்கள் இங்கே பதிவு செய்ய வேண்டும் என்று கருது கிறோம். உச்சநீதிமன்ற நீதிபதியே விமர்சித்துள்ளார்! அதேபோல், கலாநிதி வீராச்சாமி குறிப்பிட்டதைப் போல, உச்சநீதி மன்ற நீதிபதி அவர்களே ஒருமுறை குறிப்பிட்டிருந்தார். “சட்டம் இயற்றுகிற இந்த அவையில், போதுமான நேரம் எடுத்து விவாதிக்காமல், அவசர கதி யில் நீங்கள் சட்டம் இயற்றுவதால் எவ்வ ளவு புதிய பிரச்சனைகளை நீதிமன்றங் கள் சந்தித்துக் கொண்டிருக்கின்றன தெரியுமா?” என்று அவர் கூறினார். வெறும் மூன்று நிமிடத்தில் நான்கு தொகுப்பு தொழிலாளர் நலச் சட்டங் களை, விவாதமே இல்லாமல் நிறை வேற்றியது இந்த அவை. 140 கோடி மக்களில், பல கோடி தொழிலாளர் களின் வாழ்க்கையை தீர்மானிக்கிற மசோதாவைக் கூட எந்த விவாதமும் இல்லாமல் இங்கே நிறைவேற்றி னீர்கள். ஓய்வுக்கால பதவிக்காக எழுதப்படும் தீர்ப்பு முன்பெல்லாம் தீர்ப்பு என்பது வழக்குகளில் இருந்து உருவாக்கப்படு வது என்ற எண்ணம் இருந்தது. இப்போது தீர்ப்பு என்பது பதவி ஓய்வு காலத்திற்குப் பிறகு அடையப் போகும் பதவிக்கான நுழைவுத் தேர்வோ, பரீட்சையோ என்று, பலர் அச்சப்படுகிற அளவிற்கு தீர்ப்புகள் இன்றைக்கு வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நண்பர்களே நான் மிகுந்த வேதனை யோடு இங்கே பதிவு செய்யக் கடமைப் பட்டிருக்கிறேன். நான் நாடாளுமன்ற உறுப்பினராகி 7 ஆண்டுகள் ஆகி விட்டன. கடந்த 7 ஆண்டுகளில் இந்த அவையிலே ஆளும் கட்சி முன்வைத்த மசோதாக்களில் எதிர்க்கட்சிகள் சொன்ன ஒரு திருத்தத்தையாவது ஏற்றுக் கொண்டு சட்டமாக்கி இருக் கிறீர்களா? ஒரு கருத்தைக் கூட, திருத்தத்தைக் கூட ஆளும் கட்சி ஏற்றுக் கொண்டதில்லை. உங்களது நோக்கம் நீங்கள் கொண்டு வருவதை சட்டமாக்க வேண்டும் என்பது தானேயொழிய, இந்த அவையில் 140 கோடி இந்தியர்களை யும் கட்டுப்படுத்துகிற சட்டத்தை நிறை வேற்றுகிற ஜனநாயகத் தன்மையைக் காப்பாற்ற வேண்டும் என்கிற நோக்கம் உங்களுக்கு சிறிதும் இல்லை. எனவே, உங்களது இந்தச் சட்டத் திருத்தத்தை முற்றிலுமாக நாங்கள் எதிர்க்கிறோம். இவ்வாறு சு. வெங்கடேசன் எம்.பி. பேசினார்.
