அலகாபாத் நீதிமன்றத் தீர்ப்பு; மனிதாபிமானம் இல்லாதது! உச்சநீதிமன்றம் கண்டனம் புதுதில்லி
, மார்ச் 26- “குழந்தையின் மார்பகங்களை அழுத்துவது, பைஜாமா நாடாவை அவிழ்ப்பது பாலியல் வன் கொடுமை முயற்சி குற்றத்தின் கீழ் வராது” என்ற அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 11 வயது குழந்தையைப் பாலியல் வன் கொடுமை செய்ய இரு நபர்கள் முயற்சித்தது தொடர்பான வழக்கை அலகாபாத் உயர்நீதி மன்றம் சமீபத்தில் விசாரித்தது. அப்போது தான், நீதி பதி ராம் மனோகர் நாராயணன் என்பவர் மேற்கண்ட தீர்ப்பை வழங்கினார். இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் அமர்வு புதனன்று வழக்கை விசா ரித்தது. அப்போது, “இந்தத் தீர்ப்பை எழுதியவர் முற்றிலும் உணர்திறன் இல்லாதவர் என்பதையே காட்டுகிறது என்பது வேதனை அளிக்கிறது” என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், இந்தத் தீர்ப்பு மனிதாபிமானமற்ற அணுகுமுறையைக் காட்டுவதாகவும், தீர்ப்பை நிறுத்திவைப்பதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.