விவசாயப் பண்ணையை பார்வையிட்ட வேளாண் கல்லூரி மாணவிகள்
தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங்கோட்டை பகுதியில் உள்ள முனைவர் எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை சேர்ந்த மாணவிகள், பட்டுக்கோட்டை வட்டம் பொன்னவராயன்கோட்டை ஊராட்சியில் அமைந்துள்ள என்.எஸ். மணியன் பால் பண்ணையை பார்வையிட்டனர். மாணவிகள் இப்பண்ணையின் மூலமாக கால்நடை வளர்ப்பு மற்றும் பேணிக்காத்தல் என்பதனை பற்றியும், மாடுகளின் பல்வேறு ரகங்கள் பற்றியும் அறிந்து கொண்டனர். இந்த பண்ணை அமைப்பு, ஓர் ஒருங்கிணைந்த பண்ணைய முறை (IFS), இதன் மூலம் குறுகிய வளங்களை வைத்து அதிக லாபம் ஈட்டுவதை பற்றியும் மாணவிகள் நேரடியாக அறிந்து கொண்டனர். மேலும், இப்பண்ணையில் இயந்திரம் மூலமாக பால் கறக்கும் முறையை தெரிந்து கொண்டனர். இதை தவிர ஆடு, புறா, கிளி, கோழி மற்றும் வாத்துகளின் ரகங்கள் பற்றியும் அறிந்து கொண்டனர்.