வேதமயமாக்கப்பட்ட இந்தியாவே தேசிய கல்விக்
கொள்கையின் திட்டம்; ஆதவன் தீட்சண்யா கருத்து
வேதமயமாக்கப்பட்ட இந்தியாவை கட்டமைப்பதே தேசிய கல்வித் திட்டமாக உள்ளது என எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா கூறினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் ‘இந்திய ஆதிக்க எதிர்ப்பு மற்றும் கல்வி உரிமை பாதுகாப்பு’ என்ற தலைப்பில் புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் கலந்துகொண்டு சங்கத்தின் பொதுச்செயலாளர் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா பேசியதாவது: தற்போது உள்ள கல்விக் கொள்கை மேற்கத்தியத் தன்மை யுடனும், இடதுசாரித் தன்மையுடனும் உள்ளது. இதை இந்தியத் தன்மை கொண்டதாக மாற்ற வேண்டும் என்கின்றனர். அதாவது வேதகால கல்விமுறை வேண்டும் என்கின்றனர். இந்தியத் தன்மை கொண்ட வரலாற்றை எழுதுவதற்கு அமைக்கப்பட்ட குழுவில் பெண்களோ, பட்டியல் இனத்தவரோ, இஸ்லாமியரோ, கிறிஸ்தவரோ ஒருவர்கூட இடம்பெறவில்லை. முழுக்க, முழுக்க சாஸ்திரிகளும், சன்மார்க்கர்களுமே இந்தக் குழுவில் உள்ளனர். இந்தியாவின் பூர்வகுடிகள் ஆரியர்கள் எனவும், தொன்மையான மொழி சமஸ்கிருதம் எனவும் நிறுவுவதே இந்தக் குழுவின் திட்டம். தேசிய கல்விக் கொள்கையின் முக்கியமான நோக்கம் நம்முடைய குழந்தைகளை நமக்கு எதிராகத் திருப்புவதுதான். வேதமயமாக்கப்பட்ட இந்தியாவை கட்டமைப்பதுதான். மும்மொழிக் கொள்கை மட்டுமே பிரச்சனை அல்ல. நம்முடைய குழந்தைகளை நவீன இந்துக்களாக மாற்றுவதற்கான திட்டத்தை அவர்கள் வகுக்கின்றனர். வலுவான போராட்டத்தை முன்னெடுப்பதன் மூலம் மட்டுமே இவர்களின் சதித்திட்டத்தை முறியடிக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார். கவிஞர் ரமா ராமநாதனுக்கு பாராட்டு கருத்தரங்கிற்கு தமுஎகச மாவட்டத் தலைவர் ராசி.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் ஆர்.நீலா, மாநிலக்குழு உறுப்பினர் இரா.தனிக்கொடி மற்றும் தோழமை சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாநில துணைத் தலைவர் நா.முத்துநிலவன் தொடக்கவுரையாற்றினார். தமிழ்செம்மல் விருது பெற்ற கவிஞர் ரமா ராமநாதனை பாராட்டி, கவிஞர் ஜீவி உரையாற்றினார். முன்னதாக மாவட்டச் செயலாளர் ஸ்டாலின் சரவணன் வரவேற்க, பொருளாளர் மு.கீதா நன்றி கூறினார்.