tamilnadu

img

ஆன்மீக விடுதலை’ எனும் மூடநம்பிக்கை: திருவண்ணாமலையில் 4 பேர் தற்கொலை!

திருவண்ணாமலை, டிச. 28 - ஆன்மீக விடுதலை என்ற மூடநம்பிக்கையால், திருவண்ணமலையில், தாய் அவரது இரண்டு குழந்தைகள் உள்பட 4 பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் ருக்மணி (45), அவரது குழந்தைகளான ஜலந்தாரி (17) மற்றும் முகுந்த் ஆகாஷ் குமார் (12). கணவரிடமிருந்து விவாகரத்தான நிலையில் ருக்மணி தனது குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இவர்கள் மூவரும் ஆன்மீகத்தில் மிகுந்த நம்பிக்கைக் கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், இவர்கள் மூவரும் சில மாதங்களுக்கு முன்பு இதே வியாசர்பாடியைச் சேர்ந்த ஸ்ரீ மஹாகாலா வியாசர் (40) எனும் நபரை தங்களது ஆன்மீகப் பயணத்தின்போது சந்தித்துள்ளனர். இருதரப்புக்கும் ஆன்மீகத்தின் மீது அதீத பற்று இருந்ததினால் அவர்கள் 4 பேரும் ஒன்றாகவே ஆன்மீகப் பயணங்கள் மேற்கொண்டு வந்துள்ளனர். இறுதியாக, கார்த்திகை தீபத் திருநாளன்று ஒன்றாக திருவண்ணாமலை சென்றுவிட்டு சென்னைக்கு திரும்பி வந்துள்ளனர். இந்நிலையில், வெள்ளியன்று (டிச.27) அவர்கள் நான்கு பேரும் சிவன் மற்றும் மஹாலட்சுமி தேவியின் திருவடிகளை சென்றடைந்து மோட்சம் பெறவுள்ளதாக கூறி மீண்டும் திருவண்ணாமலைக்கு சென்றதாகவும், அங்கு கிரிவலப் பாதையில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கிய அவர்கள், அங்கேயே விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளனர். காவல்துறையினர் கதவை உடைத்துச் சென்று அவர்களின் உடல்களை மீட்டுள்ளனர். ஆன்மீக விடுதலை அடையும் நோக்கில் தற்கொலை செய்துகொள்வதாக குறிப்பிட்டு ஒரு கடிதம் அங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்கொலை செய்துகொள்ளும் வீடியோவும் அவர்களது செல்போனில் பதிவு செய்யப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆன்மீக விடுதலை எனும் மூடநம்பிக்கையால் குழந்தைகள் உள்பட 4 பேர் தற்கொலை செய்துகொண்ட அவலம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.