தனியார் பள்ளி வேன், அரசுப் பேருந்து மோதி விபத்து மாணவர்கள் 21 பேர் காயம் புதுக்கோட்டை
, மார்ச் 19 - புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே முத்துடையான்பட்டி பகுதியில் உள்ள தனியார் தொடக்கப் பள்ளியிலிருந்து செவ்வாய்க்கிழமை மாலை மாண வர்களை ஏற்றிக் கொண்டு வாகனம் புதுக்கோட்டை நோக்கி புறப்பட்டது. சிப்காட் அருகே முல்லைநகரில் சில மாணவர்களை இறக்கிவிட்டு ரெங்கம்மாள்சத்திரம் அருகே வாகனம் திரும்பியபோது, திருச்சியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி வந்த அரசு பேருந்து மோதியது. இந்த விபத்தில் பள்ளி வாகனத்தில் இருந்த 21 மாணவர்கள் லேசான காயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். காவேரி நகர் பகுதியைச் சேர்ந்த மாணவர் மனோரஞ்சிதம் (8) பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவ, மாணவிகளை புதுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியர் பா. ஐஸ்வர்யா நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார். பள்ளி வாகன ஓட்டுநர் அங்கிருந்து ஓடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து வெள்ளனூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.