லக்னோ:
உத்தரப்பிரதேச மாநிலம், உன்னாவ் தொகுதி பாஜக எம்எல்ஏ-வால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டதுடன், அவரால் கொலை முயற்சிக்கும் ஆளாகி உயிர் தப்பிய இளம்பெண், மருத்துவமனை சிகிச்சைக்குப் பின், புதன்கிழமையன்று வீடு திரும்பியுள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது இளம் பெண், பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்காரால் (51), கும்பல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டார். கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த வன்கொடுமை தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுக்காத நிலையில், பாதிக்கப்பட்ட இளம்பெண், உத்தரப் பிரதேச முதல்வர் ஆதித்யநாத்தின் வீடுமுன்பு தீக்குளிக்க முயன்றார். அப்போதும் நடவடிக்கை இல்லை.இதனிடையே செங்காரின் ஆதரவாளர்கள், பெண்ணின் தந்தை சுரேந்திரா சிங்கை, 2018 ஆகஸ்ட் மாதம் மிகக் கொடூரமாகத் தாக்கி, பொய் வழக்கில் சிறைக்கு அனுப்பினர். அங்கு ஓரிரு நாட்களிலேயே சுரேந்திரா சிங் இறந்து போனார்.
ஒருகட்டத்தில், அலகாபாத் உயர் நீதிமன்றம் தலையிட்ட பின்னரே, பாஜக எம்எல்ஏ செங்காரும், அவரது சகோதரர் அதுல் சிங் உள்ளிட்டவர்களும் கைது செய்யப்பட்டு சீதாப்பூர் சிறையில் அடைக்கப் பட்டனர். ஆனால், சிறையில் இருந்தவாறே சதித்திட்டம் தீட்டிய குல்தீப் சிங் செங்கார், கடந்த ஜூலை 28-ஆம் தேதி இளம்பெண் சென்ற கார் மீது லாரியை ஏற்றி கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதில், பெண்ணின் தாயாரும், உறவினரும் சம்பவ இடத்திலேயே இறந்துபோக, சிறுமி மட்டும் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு, உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கேயே சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு, அவரிடம் வாக்குமூலமும் பெறப்பட்டது. இந்நிலையில் சுமார் 2 மாத சிகிச்சை முடிந்து, உன்னாவ் இளம்பெண் புதன்கிழமையன்று வீடு திரும்பியுள்ளார். அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.