tamilnadu

img

பிரக்யாவின் சாபம் இருக்கும்போது சர்ஜிக்கல் ஸ்டிரைக்கெல்லாம் எதற்கு?

போபால்:

பிரக்யா சாபம் விட்டாலே அனைவரும் செத்துப் போவார்கள் எனும்போது, பாகிஸ்தானுக்கு எதிராக இனிமேல் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கெல்லாம் நடத்த வேண்டாம் என்று, பாஜக தலைவர்களை, காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கிண்டலடித்துள்ளார்.


“மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில், காவல்துறை அதிகாரி ஹேமந்த் கார்கரேதான் என்னைக் கைது செய்து சிறையில் அடைத்தார். இதற்காக கார்கரேவும், அவரின் குடும்பமும் பூண்டோடு அழிந்துபோக வேண்டும் என்று நான் சபித்தேன்; என்னுடைய அந்த சாபம் பழித்து, அந்த ஆண்டே கார்கரே கொல்லப்பட்டு விட்டார்” என்று போபால் தொகுதி பாஜக வேட்பாளரும், பெண் சாமியாருமான பிரக்யா சிங் தாக்குர் கூறியிருந்தார்.இதனை குறிப்பிட்டே, காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் விமர்சித்துள்ளார்.


“தோல்வி பயம் காரணமாக, போபால் தொகுதியில் போட்டியிடுவதற்கு உமா பாரதி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பலர் மறுத்து விட்டதால், அவசர வேட்பாளராக பிரக்யா சிங் தாக்கூரை, பாஜக இறக்கி விட்டுள்ளது. பிரக்யா சிங் தாக்கூரோ, தனது சாபத்தினால்தான் ஹேமந்த் கார்கரே கொல்லப்பட்டதாக கூறுகிறார். கார்கரேவின் தியாகத்தையே கொச்சைப்படுத்துகிறார். இனிமேல் மசூத் அசார் போன்ற பயங்கரவாதிகளை அழிக்க சர்ஜிக்கல் ஸ்டிரைக் தேவைப்படாது; சாத்வி பிரக்யாவின் சாபமே போதும் போலிருக்கிறது” என்று திக்விஜய் சிங் கூறியுள்ளார்.


“இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர், சீக்கியர் என அனைவரும் சகோதரர்களாக வாழ்ந்து வருகிறோம். இந்த நாடு இஸ்லாமியர்களால் 500 ஆண்டுகளுக்கும் மேலாக ஆளப்பட்டது. அதனால் எந்த ஒரு மதமும் அழிந்துவிடவில்லை. ஆனால், தற்போதைய காலகட்டத்தில், இந்து மதம் அழிக்கப்படுவதால், இந்துக்கள் ஒன்றுசேர்ந்து வருகின்றனர் என்று மோடி தவறான பிரச்சாரம் செய்கிறார்” என்றும் திக்விஜய் சிங் விமர்சித்துள்ளார்.போபால் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திக்விஜய் சிங்-தான் என்பது குறிப்பிடத்தக்கது.