tamilnadu

img

இந்நாள் இதற்கு முன்னால் மே 01

1851 - ‘பெரும் பொருட்காட்சி’ என்றழைக்கப்படும், முதலாவது அனைத்துலக தொழிற்துறைப் பொருட்காட்சி, லண்டனில், கிரிஸ்டல் பேலஸ் என்னும் தற்காலிக அரங்கில் தொடங்கியது. (இரும்புத் தூண்கள், கண்ணாடிகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த அரங்கு பிரிக்கப்பட்டு, 1854இல் சைடன்ஹாம் மலையில் மீண்டும் அமைக்கப்பட்டு, 1936வரை இருந்ததுடன், அப்பகுதியின் பெயரே கிரிஸ்டல் பேலஸ் ஆகியது!) பதினைந்து நாட்கள் நடைபெற்ற இந்தப் பொருட்காட்சியே இன்றுவரை ‘வோர்ல்ட் எக்ஸ்போ’ என்ற பெயரில் நடத்தப்படும் உலகத் தொழிற்துறைப் பொருட்காட்சிகளில் முதலாவதாகும். சுமார் 60 லட்சம் (பிரிட்டனின் அன்றைய மக்கள் தொகையில் மூன்றிலொரு பங்கு!) பார்வையாளர்கள் வந்ததுடன், உலகின் முதல் வாக்களிக்கும் எந்திரம் உள்ளிட்ட பல கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த அரங்கில்தான் உலகின் முதல் நவீன கட்டணக் கழிப்பிடம் அமைக்கப்பட்டு, அரங்கம் அகற்றப்பட்ட பின்னும் செயல்பட்டது. இதற்கான கட்டணம் ஒரு பென்னி என்பதால், ஒரு பென்னி செலவு என்பது கழிப்பிடத்திற்குச் செல்வதைக் குறிப்பதாக மாறியது. இந்த உலகப் பொருட்காட்சிக்கு, 1798இல் பிரான்சில் நடத்தப்பட்ட, பிரெஞ்சுத் தொழிற்துறை உற்பத்திப் பொருட்களின் கண்காட்சிதான் முன்னோடியாக அமைந்தது. பிரெஞ்சுப் புரட்சியைத் தொடர்ந்து, சட்டத்துக்கான விழா, காரணத்துக்கான விழா (காரணத்தை வழிபடுதல் இத்தொடரில் 2017 நவம்பர் 10இல் வெளியாகியுள்ளது.), குடியரசின் நிர்மாணத்துக்கான விழா என்று நடத்தப்பட்ட விழாக்களின் வரிசையில் தொழிற்துறைப் பொருட்காட்சியும் நடத்தப்பட்டது. அதில் கண்புரை அறுவைக்கான புதிய கருவி, ஆறுகளில் சேரும் குப்பைகளை அகற்றும் கருவி உள்ளிட்டவை அறிமுகப்படுத்தப்பட்டதுடன், 1849வரை இத்தகைய பொருட்காட்சிகள் பாரீசில் நடத்தப்பட்டன. ஆனால், பொஹீமியா நாட்டின் இரண்டாம் லியோபோல்ட் அரசரின் முடிசூட்டு விழாவையொட்டி, 1791இல் ப்ரேக் நகரில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் கண்காட்சி நடத்தப்பட்டதே இவை அனைத்திற்கும் முன்னோடியாகும். உலகப் பொருட்காட்சிகளை ஒழுங்குபடுத்தி நடத்துவதற்காகவே, பன்னாட்டு பொருட்காட்சிகளுக்கான அமைப்பு 1928இல் உருவாக்கப்பட்டு, இந்த எக்ஸ்போக்கள் நடத்தப்படும் இடம், தேதி, பங்கேற்கும் நிறுவனங்கள் முதலானவற்றைத் தீர்மானிக்கிறது.அறிவுக்கடல்