tamilnadu

img

அவல நிலையில் வாசவி நகர் வழி பிறக்குமா?

ஓசூர் ரயில் நிலையத்தை அடுத்த தின்னூர் நியாயவிலைக் கடை எதிரில் ஐம்பது மீட்டர் தூரத்தில் உள்ளது வாசவி நகர். 15 ஆண்டுகளில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுடன் 25 தெருக்கள், 1000 க்கும் மேற்பட்டவர்கள் வசிக்கும் பகுதியாக உருவாகியுள்ளது. அரசு ஊழியர்கள், பெரிய தனியார் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் நடுத்தர மக்களே உள்ளனர். இந்த நகர மக்கள் கட்டிய சிறிய கழிவு நீர் கால்வாய்கள், பல இடங்களில் இடிந்தும், மண்மூடியும், தூர்ந்தும் உள்ளதால் பல இடங்களில் கழிவு நீர் தெருக்களில் வழிந்தோடுகிறது. முன்னாள் நகராட்சியும், இன்னாள் மாநகராட்சியும் எதுவும் கண்டுகொள்ளவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உடைந்த கல்வெட்டு (சிரிய பாலம்) மக்களுக்கு பல மாதங்கள் கடும் சிரமத்தை ஏற்படுத்திய நிலையில் ‘தீக்கதிரில்’ படத்துடன் செய்தி வெளியிட்டதும் சீரமைத்துக்கொடுத்தனர். இந்நிலையில் மூன்று மாதங்களுக்கு முன்பு அதே கல்வெட்டு உடைந்து கம்பிகள்  யாரை பழிவாங்களாம் என வெளியில் நீட்டிக் கொண்டிருக்கிறது. இருக்கும் சுமாரான இந்த சாலையிலும் யானை பிடிக்க வெட்டிய குழி போல் பெரிய பள்ளம் எதற்கு தோண்டினார்கள் என்று தோண்டிய மாநகராட்சிக்கே தெரியாத நிலையில் மூடப்படாமல் மக்களை தினமும் விபத்துக்குள்ளாக்கி வருகிறது. பாதி தெருக்கள் மின் விளக்கு வசதிகள்,தார்,சிமெண்ட் சாலைகள், கழிவு நீர் கால்வாய்கள், ஒகேனக்கல் குடிநீர் உட்பட எதுவும் இல்லாத புழுதிக்காடாக இருட்டில் உள்ளது. இது குறித்து வாசவி நகர் குடியிருப்போர் நல சங்கத் தலைவர் சிபி.ஜெயராமன் , செயலாளர் ஆனந்தகுமார், நிர்வாகிகள் சாம்பசிவன், திலகவதி, ஜோசப் அருள்ராஜ், ஜோதி, வெங்கடேசன், சம்பங்கி, உட்பட பலரும் ஆணையாளரை பல முறை சலிக்காமல் சந்திந்து கோரிக்கை மனுக்கள் அளித்து வந்துள்ளனர்.  கொடுத்த மனுக்கள் எங்கே போகிறது என்று தெரியவில்லை. பொருத்தது போதும் என கோரிக்கைகள் தீர்க்கப்பட சாலை மறியல் செய்யத் தயாராக உள்ளதாக வாசவிநகர் சங்கமும் மக்களும் கூறுகிறார்கள்.