கொல்கத்தா:
வங்க கலாச்சாரத்திற்கு அந்நியமான, ‘ஜெய் ஸ்ரீராம்’, ‘ராம நவமி’களின் ஊடுருவல், அண்மைக் காலத்தில் அதிகரித்து இருப்பதாக ‘நோபல் பரிசு’ பெற்ற பொருளாதார அறிஞர் டாக்டர் அமர்த்தியாசென் கூறியுள்ளார்.
கொல்கத்தாவில் நடை பெற்ற நிகழ்ச்சியொன்றில் இதுதொடர்பாக அவர் மேலும் பேசியிருப்பதாவது:“வங்கத்தில் இதற்கு முன்பு ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று யாரும் கூறி, ஒருபோதும் நான் கேட்டதில்லை. ஆனால், இது மக்களை அடித்து, தாக்குவதற்கு சமீப காலங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வங்க கலாசாரத்துடன் இதற்கு எந்ததொடர்பும் இல்லை என நான் நினைக்கிறேன். அண்மைக் காலத்தில் இங்கு ‘ராம நவமி’ அதிக அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையும் நான் இதற்கு முன் கேட்டறியவில்லை.எனது 4 வயது பேத்தியிடம், உனக்கு பிடித்த கடவுள் எது? என்று கேட்டேன். அதற்கு அவள்‘அன்னை துர்க்கை’ என கூறினாள். அன்னை துர்க்கையின் முக்கியத்துவம், ஒருபோதும் ‘ராம நவமி’யுடன் ஒப்பிட முடியாதது”இவ்வாறு டாக்டர் அமர்த்தியா சென் கூறியுள்ளார். வங்கத்தில், குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள், தற்போது வெளியில் நடமாடவே பயப்படுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.