குடியுரிமை திருத்தச் சட்டம் இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது என்று நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் தெரிவித்துள்ளார்.
இன்ஃபோசிஸ் அறிவியல் அறக்கட்டளையின், 2019-ஆம் ஆண்டுக்கான இன்ஃபோசிஸ் பரிசு வழங்கும் நிகழ்வு பெங்களூரில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துக் கொண்ட நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென்னிடம், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமர்த்தியா சென், பிறந்த இடம், வாழ்ந்த இடம் உள்ளிட்டவையே ஒருவரின் குடியுரிமையை தீர்மானிக்க வேண்டும் என்றும், குடியுரிமை திருத்தச் சட்டம், இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது என்றும், குடியுரிமை வழங்குவதற்கு மதத்தின் அடிப்படையிலான பாகுபாட்டை காட்டுவது ஏற்றுக்கொள்ளப்படாது என்றும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து, ஜே.என்.யு தாக்குதல் குறித்து பேசிய அவர், பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் தாக்கப்படுவதை அறிந்தும் பல்கலைக்கழக நிர்வாகம் தாமதமாக போலீசாரை தொடர்பு கொண்டதும், அதே சமயம் மாணவர்கள் தாக்கப்படுவதை கண்டும் போலீசார் அதனை தடுக்காமல் இருந்ததும் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார். மேலும், பல்கலைக்கழகத்திற்குள் வெளியாட்கள் நுழைவதையும், இது போன்ற வன்முறைகளை தடுக்கவும் பல்கலைக்கழக நிர்வாகம் தவறியதாக குற்றம் சாட்டியுள்ளார்.