திருவனந்தபுரம்:
மக்களை மத அடிப்படையில் பிரிக்கும் குடியுரிமை திருத்த சட்டம் ரத்து செய்யப்படும்வரை ஓய்வில்லை எனவும், வலுவான எதிர்ப்பு தொடரும் எனவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.ஞாயிறன்று கேரளத்தில் நடந்த மனித மகாசங்கிலியின் பகுதியாக திருவனந்தபுரம் பாளையம் தியாகிகள் மண்டபம் அருகில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது: குடியுரிமை திருத்த சட்டமோ குடிமக்கள் பட்டியலோ, மக்கள் தொகை பதிவேடோ கேரளத்தில் அமல்படுத்தப்பட முடியாது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இவற்றை அமல்படுத்தும் மாநிலமல்ல கேரளம்.
மதம் பார்த்து குடியுரிமையை தீர்மானிக்கும் இந்த காட்டுமிராண்டி சட்டத்திற்கு உலகமே எதிராகும். பல நாடுகளின் ஆட்சியாளர்கள் இந்திய வருகையை ரத்து செய்துள்ளனர். ஐநா சபையும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் மாணவர்கள், இளைஞர்கள், அறிவுஜீவிகள் எல்லோரும் தெருவில் இறங்கியுள்ளனர். கலை இலக்கிய படைப்பாளிகள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படையாக தெரிவித்துள்ளனர். திரைப்பட உலகத்திலும் பெரிய அளவிலான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சாதாரண நிலையில் பொதுவாக எதிர்ப்புகளை வெளிப்படையாக தெரிவிக்காத கலைஞர்கள்கூட சட்டத்திற்கு எதிராக களமிறங்கினர்.குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டதற்கு எதிராக நமது நாடே ஒன்றுபட்டு போராடுகிறது. கேரளத்தில் பல்வேறு மாவட்டங்களை ஆய்வு செய்தால் பல பத்து லட்சம் மக்கள் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றுள்ளனர். இது பாராட்டுதலுக்குரியது. அமைதியான முறையில் கடுமையான எதிர்ப்பை கேரளம் பிரதிபலித்திருக்கிறது. விரும்பத்தகாத சம்பவங்கள் ஏதும் இல்லாத கடும் எதிர்ப்பு கேரளத்தின் தனித்துவமாகும். சாதி மத வேறுபாடுகள் இல்லாமல் சகோதரத்துவம் நீடிக்கும் நாட்டில், மக்களை மத அடிப்படையில் பிளவுபடுத்தும் அநீதியை ஏற்க முடியாது.
இந்த எதிர்ப்பு இயக்கங்களுக்கு மத்தியில் உயர்ந்து நிற்பதுதான் மனித மகாசங்கிலி. இது பெரும்பாலான இடங்களில் சுவராக மாறியது. எல்டிஎப் விடுத்த அழைப்பு என்றாலும் மதச்சார்பின்மையையும் அரசமைப்பு சாசனத்தையும் பாதுகாக்க விரும்பும் மக்கள்அனைவரும் முழுமனதுடன் வெள்ளம்போல் அணிதிரண்டு வந்தனர். கேரளத்தின் மாபெரும் எதிர்ப்பில் பல பத்து லட்சக்கணக்கான மக்கள் கரம் கோர்த்துள்ளனர். நம்மால் ஓய்ந்திருக்க முடியாது. நாட்டின் விடுதலையை ஆபத்துக்குள்ளாக்கவும், மதச்சார்பின்மையை தகர்க்கவும் நடக்கும் முயற்சிகளுக்கு எதிரான போராட்டம் வலுவாக தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். அரசமைப்பு சாசனத்தின் அனைத்து மதிப்பீடுகளையும் பாதுகாக்க அதன் முகப்பில் கூறப்பட்டுள்ளதுபோல அதற்காக சுயமாக சமர்ப்பிக்கலாம். அதற்கு அனைவரும் முன்வர வேண்டும்.இவ்வாறு முதல்வர் கூறினார்.