tamilnadu

img

பொய் பிரச்சாரத்தில் யுடிஎப்பும் பாஜகவும் ஒருதாய் மக்கள்... கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் பேட்டி

திருவனந்தபுரம்:
ஒருதாய் பெற்ற இரட்டையர்களைப்போல் யுடிஎப்பும் பாஜகவும் கேரள அரசுக்கு எதிராக கோயபல்ஸ் தந்திரத்தை பயன்படுத்தி பொய்ப் பிரச்சாரம் செய்வதாக அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்தி ரன் கூறினார்.திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மேலும் கூறியதாவது: அண்மைக்கால அரசுகளைவிட மிகச்சிறந்த செயல்பாட்டை இந்த அரசு கொண்டுள்ளது. புதிய கேரளத்தை படைப்பதற்கான திட்டங்களை இந்த அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது. பாதிவழியில் முடங்கிக் கிடந்த பல திட்டங்களை இந்த அரசால் நிறைவேற்ற முடிந்தது. 10ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த கூடங்குளம் அணுமின்சாரம் கொண்டுவரப்பட்டது இதற்கு உதாரணமாகும்.   அற்ப காரணத்துக்காக இத்திட்டம் முடக்கி  வைக்கப்பட்டிருந்தது. இப்போது மின்சா ரத்தில் கேரளம் தன்னிறைவு பெற்றுள்ளது. பல அடிப்படை பிரச்சனைகளை அரசால் துரிதமாக கையாள முடிந்தது.

இத்தகைய அரசுக்கு பல்வேறு பிரிவினரின் ஆதரவு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில்தான் தங்க கடத்தல் வழக்கு வருகிறது. அதை அரசுக்கு எதிராக பயன்படுத்தும் முயற்சியில் யுடிஎப்பும்பாஜகவும் ஸயாமீஸ் இரட்டையர்களைப்போல பொய்ப் பிரச்சாரம் நடத்துகின்றன. கோயபல்ஸ் சித்தாந்தத்தை இவர்கள் பயன்படுத்துகின்றனர். முதல்வருக்கு எதிராக தாக்குதலின் முனையை திருப்பியுள்ளனர். முதல்வரின் அலுவலகம் எப்படி செயல்படுகிறது என்பதை இங்குள்ள ஊடகத்தினர் அறிவார்கள். இவ்வாறு வெளிப்படையான செயல்பாடுகளை கொண்டுள்ள அலுவலகத்தை அண்மைக் காலத்தில் பார்க்க முடிந்ததா என்பது ஊடகத்தின ருக்கு தெரியும்.   கோவிட் காலத்தில் அரசின் பணிகள் குறித்து அனைத்து மலையாளிகளும் பெருமைப்படலாம். வேலையில்லாமலும் சம்பளமில்லாமலும் நான்கைந்து மாதங்கள் கடந்த போதிலும், கேரளாவில் ஒருபட்டினி மரணம் கூட ஏற்படவில்லை. இரண்டு கட்டங்களாக 51லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.17,000அவர்களது வீடுகளில் ஒப்படைக்கப்பட்டது. ஏதுமற்ற ஏழைகளுக்கு இது பெரிய தொகை. 87 லட்சம் குடும்பங்களுக்கு இலவசமாக உணவுப்பொருள் விநியோகம்போன்ற மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இவையெல்லாம் எதிர்கட்சிக்கு தெரியாதவை அல்ல. கேரள மக்கள் சரியான முறையில் இவற்றை பாரக்கவே செய்கிறார்கள். முதல்வரையும் அவரது அலுவலகத்தையும் அவமானப்படுத்தும் முயற்சியை மக்கள் ஏற்கமாட்டார்கள் எனவும் அவர் கூறினார்.