திருவனந்தபுரம்:
திருவனந்தபுரம் மாநகராட்சி எல்லைக்குள் மும்மடங்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. திங்கக் கிழமை காலை ஆறு மணி முதல் ஒருவார காலத்திற்கு இது நீடிக்கும். ஞாயிறன்று மாலை முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த உயர்மட்டகுழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
கோவிட்-19 சமூக பரவலுக்கான வாய்ப்பு நீடிக்கும் நிலையில் தொடர்புகள் மூலம் தொற்று ஏற்பட்டு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சூழ்நிலையில் உயர்மட்டக்குழு கூட்டத்துக்கு முதல்வர் அழைப்பு விடுத்தார். இந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவின்படி அவசர சுகாதார காரணங்களுக்காக மட்டுமே வெளியே செல்ல மக்கள் அனுமதிக்கப்படு கிறார்கள்.தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. ஒரு பகுதியில் ஒரு கடை மட்டும் திறக்கப்பட்டுள்ளது. அவசியமான பொருட்கள் வீடுகளுக்கே கொண்டு சென்று வழங்கப்படுகின்றன. மருந்துக் கடைகள், மருத்துவமனைகள், வங்கிகள் செயல்படுகின்றன.திருவனந்தபுரத்தில் ஞாயிறன்று கோவிட் கண்டறியப்பட்ட 27 பேரில் 22 பேருக்கும் தொடர்புகள் மூலம் நோய் பரவியுள்ளது. இதில் 14 நபர்களின் நோய்க்கான பிறப்பிடம் தெரியவில்லை. திருவனந்தபுரம் நகரத்திற்குள்தான் அதிக அளவில் தொடர்பு நோயாளிகள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் கட்டுப்பாட்டு (ஹாட்ஸ்பாட்) பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.