திருவனந்தபுரம்:
‘ஆத்மநிர்பர் பாரத்’ (சுயசார்பு பாரதம்) தொகுப்பின் ஒரு பகுதியாக புலம்பெயர் தொழிலாளர்களுக்காக மத்திய அரசு அறிவித்த திட்டங்களை ஓராண்டுக்கு முன்பே கேரளம் செயல்படுத்தியுள்ளது. இவை மத்திய அரசு அறிவித்ததைவிட விரிவான செயல்பாடுகளைக் கொண்ட திட்டங்களாகும்.
புலம் பெயர் தொழிலாளர்களுக்கு வசிப்பிடமும் உணவும் வழங்க மாநிலபேரிடர் நிவாரண நிதியை பயன்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதேநேரத்தில் ஊரடங்கு தொடங்கியது முதல் புலம் பெயர் தொழிலாளர் களுக்கு சுகாதார பரிசோதனையும் சிகிச்சையும் உணவும் கேரள அரசு வழங்கியது. பல்வேறு மாவட்டங்களில் 20,861 முகாம்களில் 3.61 லட்சம் தொழிலாளர்களுக்கு இந்த வசதிகள் ஏற்பாடுசெய்யப்பட்டன.பொது- தனியார் பங்கேற்புடன் குறைந்த வாடகைக்கு தங்குமிடம் ஏற்பாடு செய்யப்படும் என்பது மத்திய அரசின் மற்றொரு அறிவிப்பு.
ஏற்கனவேபாலக்காடு மாவட்டத்தின் தொழில் நகரமான கஞ்ஞிக்கோடில் ‘அப்னா ஹர்’என்கிற பெயரில் ஓராண்டுக்கு முன்பு கட்டப்பட்ட அடுக்கு மாடி குடி யிருப்பில் 620 பேர் வசிக்கிறார்கள். திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு ஆகிய இடங்களில் இதுபோன்ற அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 1000 பேருக்கான தங்குமிடம் கட்டப்பட உள்ளது.முந்தைய எல்டிஎப் அரசு கேரளத்தில் குடியேற்ற தொழிலாளர் நலத்திட்டம் அமல் படுத்தியது. தற்போதைய அரசு ஆவாஸ் என்கிற பெயரில் விரிவான திட்டத்தை தயாரித்தது. அதன்படி இதுவரை 5.9 புலம் பெயர் தொழிலாளர்கள் இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு மாநிலங்களில் குடும்ப அட்டை உள்ள தொழிலாளர்களுக்கு தற்போது ரேசன் வழங்கப்பட்டு வருகிறது. தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு இலவச கல்வி அளிக்கப்படுகிறது.
சொந்த ஊர்களுக்கு திரும்புகிற வர்கள் வேலை உறுதித் திட்டத்தில் பயனாளிகளாகலாம் என மத்திய அரசு இப்போது அறிவித்துள்ளது. கேரளத்தில் மழைக்காலத்துக்கு முந்தைய தூய்மைப்பணிகளில் உட்பட புலம்பெயர் தொழிலாளர்களை பயன்படுத்தலாம் என்கிற முதல்வரின் உத்தரவு ஏற்கனவே அமலில் உள்ளது.