tamilnadu

img

தொலைக்காட்சி சேனல்களின் ரேட்டிங்கை அதிகரிக்கும் கேரள முதல்வரின் அன்றாட செய்தியாளர் சந்திப்பு

திருவனந்தபுரம், ஏப். 5- கொரோனா ஆலோசனைக்குப் பிறகு அன்றாடம் கேரள முதல்வர் நடத்தும் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி மலையாள தொலைக்காட்சி சானல்களின் ரேட்டிங் அதிகரிக்க உதவியுள்ளது. செய்திச் சேனல்களில் மிகவும் ஜனரஞ்சகமான நிகழ்ச்சியாக கேரள முதல்வரின் செய்தியாளர் சந்திப்பு மாறியுள்ளதாக இந்தியன் ரேட்டிங் ஏஜென்சியான பிஏஆர்சி (பிராட்காஸ்டிங் ஆடியன்ஸ் ரிசர்ச் கவுன்சில்) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள மக்கள் தவறாமல் தொலைக்காட்சியில் காணும் நிகழ்ச்சியாக முதல்வரின் செய்தியாளர் சந்திப்பு மாறியுள்ளது. சேனல்களின் ரேட்டிங் வரலாற்றில் மிகப்பெரிய இடத்தை முதல்வரின் செய்தியாளர் சந்திப்பு பெற்றுள்ளது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்போது கிடைப்பதைவிட உயர்வான ரேட்டிங் பல சேனல்களுக்கும் இதில் கிடைத்து வருகிறது. ரேட்டிங்கில் மட்டுமல்ல, அனைத்து வயதினரையும் இந்த நிகழ்ச்சி கவர்ந்து வருவதாக ‘பார்க்கி’ என்கிற புள்ளிவிவர கணக்கு சுட்டிக்காட்டுகிறது. மாலை ஆறு மணி முதல் ஏழு மணி வரையிலான இந்த நேரடி ஒளிபரப்பை அவசியமானதாக மக்கள் பார்ப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. முதல்வரின் முகநூல் பதிவுக்கான ‘லைக்’கும் உயர்ந்துள்ளது. பல பதிவுகளுக்கும் லட்சக்கணக்கில் லைக் கிடைத்து வருகிறது. கொரோனா தொடர்பான முதல்வரின் ஆலோசனைகளுக்கு சமூகத்தின் பல்வேறு துறையினரின் பெருத்த வரவேற்பு கிடைத்து வருகிறது. திரைத்துறை மற்றும் சமூக தளத்தில் உள்ளவர்களும், அரசியல் ரீதியாக மாறுபட்ட கருத்து உள்ளவர்களும் முதல்வரின் ஆலோசனை பெரும் மனவலிமையை அளிப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர்.