tamilnadu

img

காவலில் வைத்து கைதிகளை தாக்குவதை பொறுக்க முடியாது... காவல்துறை உயர் அதிகாரிகள் கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் எச்சரிக்கை

திருவனந்தபுரம்:
காவலில் வைத்து கைதிகளை தாக்குவதும், சட்டவிரோதமாக ஆட்களை காவலில் வைப்பதும் பொறுத்துக்கொள்ள முடியாதவை. இதுபோன்ற தவறுகள் செய்யும் காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்

திருவனந்தபுரம் காவல்துறை பயிற்சி கல்லூரியில், டிஒய்எஸ்பி முதல் உயர் பொறுப்பு களில் உள்ள காவல்துறை அதிகாரிகளிடையே புதனன்று உரையாற்றுகையில் அவர் மேலும் கூறியதாவது: காவல்துறையில் ஒரு சிலர் செய்யும் சிறிய தவறுகூட பொதுமக்களிடையே அவமதிப்புக்கு உள்ளாகும். தவறுகளை திருத்தி முன்னேறவும் பொதுமக்கள் நலன் கருதி தேவையான தலையீடுகளுக்கும் உயர் அதிகாரிகள் முன்வர வேண்டும். காவலில் வைத்து கைதிகளை தாக்குவதும், சட்டவிரோதமாக ஆட்களை காவலில் வைப்பதும் பொறுத்துக்கொள்ள முடியாதவை. இதுபோன்ற தவறுகள் செய்யும் காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் பணியிலிருந்து நீக்கப்படுவார்கள். காவல்துறையின் செயல்பாடுகளை உத்தரவாதப்படுத்த மாவட்ட காவல் உயர் அதிகாரிகள் தனி கவனம் செலுத்த வேண்டும். மாவட்ட காவல் அதிகாரிகள் சீரான இடைவெளியில் சோதனை மேற்கொள்ள வேண்டும். கடுமையான குற்றங்கள் நடக்கும் இடங்களுக்கு நேரில் செல்ல வேண்டும்.

பாரபட்சமற்ற முறையில்
வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக வலுவான நிலைபாட்டை எடுப்பது சாத்தியமாக வேண்டும். அரசியல் பிரச்சனைகளோடு பாரபட்சமற்ற நிலைபாடு மேற்கொள்ள வேண்டும். காவல் நிலையங்கள் பொதுமக்கள் நன்மைக்காக தொழில்முறையில் ஈடுபட வேண்டும். ஆய்வாளர்கள் காவல் நிலையங்களின் செயல்பாடுகளை மேம்படுத்த வேண்டும். புகாருடன் வருவோரிடம் நல்லமுறையில் நடந்துகொள்ள வேண்டும். புகார்களுக்கு ரசீது கொடுக்க வேண்டும். புகார்களை முறையாக கேட்டு விவரங்களை சேகரித்து விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.காவல்துறையை நவீனப்படுத்துவதன் பகுதியாக நவீன ஊடகங்கள் வழியாகவும் இதர வழிகளிலும் ஏற்படும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள ஒரு முகமை (ஏஜென்சி) துவக்கப்படும்.  தொழில்நுட்ப திறன் உள்ள காவல் அதிகாரிகளின் சேவை அந்தந்த பகுதிகளில் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என முதல்வர் பேசினார்.

உள்துறை கூடுதல் முதன்மை செயலாளர்டாக்டர். விஸ்வாஸ் மேத்தா, மாநில காவல்துறை தலைவர் லோக்நாத் பெஹ்ரா, முதல்வரின் ஆலோசகர் ஸ்ரீவத்சவா உள்ளிட்டோர் நிகழ்ச்சி யில் பங்கேற்றனர். உதவி ஆய்வாளர்கள், ஆய்வாளர்கள் நிலையில் உள்ள அதிகாரிகள் அந்தந்த மாவட்டங்களில் காணொலி காட்சி மூலம் பங்கேற்றனர்.சிறந்த காவல் நிலையங்களுக்கான விருதினை முதல்வர் வழங்கினார். சாலக்குடி காவல்நிலையம் முதலிடமும், சேர்த்தலா காவல்நிலையம் இரண்டாம் இடமும், திருவனந்தபுரம் கோட்டை காவல்நிலையம் மூன்றாம் இடமும் பெற்றன.