tamilnadu

img

வெண்டைக்காய் வீரர்கள் - உதயசங்கர்

வெண்டைக்காய் வீரர்கள்

ஒரு தோட்டத்தில் பறிக்காமல் விட்ட வெண்டைக்காய் காய்ந்து முற்றியது. முற்றிய வெண்டைக்காய் வெடித்து அதில் இருந்த விதைகள் காற்றில் பறந்தன. காற்றில் மேலும் கீழும் பறந்து பறந்து வந்தது வெண்டைக்காய் விதை. காற்று நின்றதும் அங்கே இருந்த ஒரு பூத்தொட்டியில் விழுந்தது. அது ராஜியின் மாடி வீட்டுத் தோட்டம். அந்தப் பூத் தொட்டியில் ஏற்கனவே ஒரு ஆர்கிட் பூச்செடி இருந்தது. ராஜிக்கு ஆர்கிட் பூக்களை மிகவும் பிடிக்கும். அதனால் அவள் ஆர்கிட் யார் வைத்திருந்தாலும் வாங்கிக் கொண்டு வந்து தொட்டியில் வளர்ப்பாள். அப்படி அவளுடைய தோழி சுபாவிடமிருந்து ஒரு செடியை வாங்கி வைத்திருந்தாள்.  பூத்தொட்டியில் விழுந்த வெண்டைக்காய் விதைக்குக் குளுகுளுன்னு இருந்தது. அப்படியே வழுகிக் கொண்டு மண்ணுக்குள் புதைந்தது. ஈரம் பட்டதும் அதுவரை வெண்டைக்காய் விதைக்குள் உறங்கிக் கொண்டிருந்த வீரன் விழித்துக் கொண்டான். உடனே தன்னுடைய தோழர்களை எழுப்பி விட்டான்.  வெண்டைக்காய் வீரனின் தோழர்கள் வேகவேகமாக வேலை செய்தனர். தண்ணீரின் வழியே ஊட்டச்சத்துகளை உறிஞ்சினர். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த உயிர்ச்சக்தியை எழுப்பினர். அந்த உயிர்ச்சக்திக்கு தண்ணீர் வழியே உறிஞ்சிய ஊட்டச்சத்துகளை ஊட்டி விட்டனர்.  ஊட்டச்சத்து பெற்ற உயிர்ச்சக்தி தன்னுடைய அனைத்து சக்தியையும் பயன்படுத்தி விதையிலைகளுக்கு உயிர் கொடுத்தது. இப்போது புதிய இரண்டு விதையிலைகள் பிறந்தன. விதையின் மேல் ஓட்டை உடைப்பதற்கு வெண்டைக்காய் வீர்ர்கள் உதவி செய்தனர். ஓடு உடைந்ததும் அவர்களும் விதையிலைகளுக்குள் ஏறிக் கொண்டனர். மண்ணிலிருந்து மெல்ல வெளியேதலைகாட்டியது விதையிலைகள். பிறகு இரண்டாகப் பிரிந்தன. இந்தப் புதிய உலகத்தைப் பார்த்து வாய் விட்டுச் சிரித்தன. ஆகா! என்ன வெளிச்சம்! என்ன காற்று!  விதையிலைகள் மெல்லத் தலையாட்டின. அருகில் ஆர்கிட் செடி உயரமாக நின்றது. அண்ணாந்து பார்த்த வெண்டைக்காய்ச்செடி இதை விட உயரமாக வளரவேண்டும் என்று நினைத்தது. அப்போது மேலிருந்து தண்ணீர் துளித்துளியாய் விழுந்து இதமாக தழுவியது. ராஜி தான் ஆர்கிட்டுக்குத் தண்ணீர் ஊற்றினாள். ராஜியை அன்புடன் பார்த்துச் சிரித்தது வெண்டைக்காய்ச்செடி.  தண்ணீர், காற்று, சூரியவெளிச்சம் மூன்றும் தாராளமாகக் கிடைத்தன. மீண்டும் வெண்டைக்காய் வீர்ர்கள் வெளியே வந்து மளமளவென்று வெண்டைக்காய்ச்செடியின் அடுத்த அடுத்த இலைகள் முளைக்க உதவிசெய்தனர்.  இப்போது வெண்டைக்காய்ச்செடியில் நிறைய இலைகள் முளைத்து விட்டன. திடீரென ஒரு நாள் ராஜி இந்தப் புதிய வெண்டைக்காய்ச்செடியைக் கவனித்தாள். அதுவும் ஒரு ஆர்கிட் என்று நினைத்துக் கொண்டாள். ஆனால் வெண்டைக்காய்ச்செடி வேகமாக வளர்ந்து ஆர்கிட்டை விட உயரமாகி விட்டது. ஒரு நாள் அதன் தலையில் ஒரு மொட்டு உருவானது.  ராஜிக்கு மகிழ்ச்சி. ஆகா! புது ஆர்கிட் பூப்பூக்கப் போகிறது என்று தோழிகளிடம் சொன்னாள்.  அந்த பூவைப் பார்க்க வீட்டுக்கு வரச்சொன்னாள். ஞாயிற்றுக்கிழமை மாலை எல்லாரும் அந்தப் பூவைப் பார்க்க வந்தனர்.  வெண்டைப்பூ மெல்ல ஒவ்வொரு இதழாய் விரித்தது. முழுவதும் விரிந்தபோது  வாவ்! என்ன அழகு! வெள்ளைநிறத்தில் ஊதா நிறப்புள்ளிகளுடன் அழகான தலையசைத்து ராஜியின் தோழிகளை வரவேற்றது வெண்டைப் பூ.  தோழிகள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். அப்போது கல்பனா, “இது ஆர்கிட் இல்லை ராஜி.. இது வெண்டைக்காய்ச்செடி.. இதனுடைய தாயகம் எத்தியோப்பியா. நிறைய ஊட்டச்சத்துகள் உள்ள காய்..” “ஐயே! எனக்கு வெண்டைக்காய் பிடிக்காது.. வழவழ கொழகொழன்னு இருக்கும்..” என்றாள் ராஜி. “இல்லை ராஜி.. வெண்டைக்காய் நம்முடைய உடலையும் மூளையையும் வலிமையாக்கும்…” என்றாள்.  வெண்டைக்காய்ச்செடி, ஆமாம் என்று தலையாட்டியது.  வெண்டைப் பூவும் சிரித்தது.  வெண்டைக்காய்ச் செடி வீர்ர்களும் சிரித்தனர்.