tamilnadu

img

8 மாதங்களில் கடத்தியது 200 கிலோ தங்கம்.... ஆவணங்கள் தயாரித்தது சரித்தும், சொப்னாவும்

திருவனந்தபுரம்:
திருவனந்தபுரம் தங்க கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான ரமீஸின் கூட்டாளிகள் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். இந்த கும்பல் தூதரக பார்சல் மூலம்கடந்த எட்டு மாதங்களில் நூறு கோடி ரூபாய்மதிப்புள்ள 200 கிலோ தங்கம் கடத்தியதாகவும், அதற்கான தூதரக ஆவணங்களை சரித்தும் சொப்னாவும் தயாரித்து கொடுத்ததாகவும் என்ஐஏ தெரிவித்துள்ளது.

கடந்த 2019 ஜூன் மாதத்தில் யுஏஇ தூதரக பார்சல் மூலம் தங்க கடத்தல் தொடங்கியது. கடந்த ஜனவரி வரையிலான எட்டு மாதங்களில்20 முறை இந்த கும்பல் தங்கம் கடத்தியுள்ளது என என்ஐஏ அளித்த வாக்குமூலத்தில்தெரிவிக்கப்பட்டுள்ளது. பி.எஸ்.சரித்,சொப்னா சுரேஷ், சந்தீப் நாயர் உள்ளிட் டோரின் ஜாமீன் மனுவுக்கு எதிராக இந்த வாக்குமூலத்தை என்ஐஏ சமர்ப்பித்தது. தூதரக பார்சல் மூலம் தங்கம் கடத்துவதற்கான வாய்ப்பை கண்டறிந்தது யுஏஇ தூதரகத்தில் ஊழியர்களாக இருந்த சரித்தும் சொப்னாவுமாகும்.

ஹவாலா பணமாக
தூதரகத்துக்கு வரும் பார்சலில் தங்கமும் கடத்த மற்ற குற்றவாளிகளுடன் கூட்டாக திட்டமிட்டுள்ளனர். யுஏஇயில் உள்ள மூன்றாவது குற்றவாளி பைசல் பரீத் கடத்தலுக்கான ஏற்பாடுசெய்துள்ளார். பார்சல் திருவனந்தபுரம் வந்துசேர்ந்ததும் சரித் அதை எடுத்து நான்காவது குற்றவாளியான சந்தீப் நாயரின் வீட்டில் ஒப்படைப்பது வழக்கம். ஐந்தாவது குற்றவாளி கே.டி.ரமீஸும் மற்றவர்களும் சேர்ந்து பார்சலில் உள்ளதங்கத்தை பிரித்து ரமீஸ் கூறும் நபர்களிடம் ஒப்படைப்பார்கள். தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களிடமிருந்து தங்கம் வாங்க இந்த கும்பல் பணம் திரட்டியது. இது ஹவாலாபணமாக யுஏஇயில் உள்ள பைசல் பரீத்துக்கும் கூட்டாளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.  

பைசல் தான் தூதரக பார்சலில் தங்கத்தை மறைத்து வைப்பவர். பார்சல் அனுப்பும்போது யுஏஇ ஏர் கார்கோ ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களை சரித்தும் சொப்னாவும் சேர்ந்து தயாரித்துள்ளனர். அட்டாசேயின்பாஸ்போர்ட் நகல், ஏர்வே பில், தூதரகத்தி லிருந்து அளிக்கும் கடிதம் போன்றவற்றை இவர்கள் பைசல் பரீத்திடம் கிடைக்கச் செய்துள்ளனர். சொப்னாவும் சரித்தும் உட்படுவதால் மட்டுமே தூதரகம் வழியாக தங்க கள்ளக்கடத்தல் நடத்த இந்த கும்பலால் சாத்தியமானது.

ரமீஸின் மேலும் 2 கூட்டாளிகள்
தூதரக பார்சல் மூலம் தங்கம் கடத்திய வழக்கில் ரமீஸின் கூட்டாளிகளான பெரந்தல்மன்னாவைச் சேர்ந்த கே.டி.ஷராபுதீன் (38),மன்னார்காடைச் சேர்ந்த ஷபீக் (31) ஆகியோரை என்ஐஏ கைது செய்துள்ளது. இவர்கள்இருவரையும் 4 நாட்கள் என்ஐஏ காவலில் எடுத்துவிசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதோடு என்ஐஏ பதிவு செய்துள்ள வழக்கில் குற்றவாளிகளாக கூறப்படும் 14 நபர்களில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட வேண்டிய பைசல் பரீத்தும் ராபின்சும் யுஏஇயில் உள்ளனர்.தங்க கடத்தல் சங்கிலியில் முக்கிய கண்ணியான கே.டி.ரமீஸ் கேரளத்தில் இல்லா நாட்களில் சந்தீப் நாயரிடமிருந்து கடத்தல் தங்கத்தை ஷராபுதீனும் ஷபீக்கும் பெற்று வந்துள்ளனர். சந்தீப்பிடமிருந்து 5 முறை இவர்கள் தங்கம் வாங்கியுள்ளனர். இந்த தங்கத்தை ரமீஸ் கூறும்நபர்களிடம் இவர்கள் இருவரும் அளித்துள்ள னர்.கே.டி.ரமீஸ், ஏ.எம்.ஜலால், பி.டி அப்து, முகமது ஷாபி ஆகியோரும் என்ஐஏ காவலில் மூன்றுநாட்களுக்கு விடப்பட்டனர். அண்மையில் கைது
செய்யப்பட்ட முகமதலி, முகமதலி இப்ராஹிம் ஆகியோரை காவலில் எடுக்க என்ஐஏ சமர்ப்பித்த மனு வியாழனன்று பரிசீலிக்கப்படும். புற்று நோயாளியான அலவி காவலில் எடுக்கப்படவில்லை. பணம் கொடுத்த இவரிடமிருந்து தேவையான தகவல்களைப் பெற்றுள்ளதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்தனர். முவாற்றுப்புழாவைச் சேர்ந்த ராபின்ஸ் ஹமீத், ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கம் வாங்க ஹவாலா பணம் பெற்றிருந்தார்.

சுங்கத்துறையினர் மனு
இந்நிலையில் தங்க கடத்தல் குற்றவாளி களான கே.டி.ரமீஸ், முகம்மது ஷாபி ஆகி யோரது சுங்கத்துறை காவல் முடிவடைந்தது. மேலும் 7 நாட்கள் காவலை நீட்டிக்க பொருளாதார குற்றங்களை விசாரிக்கும் நீதிமன்றத்தில் சுங்கத்துறை மனு தாக்கல் செய்தது. இந்த மனுவியாழனன்று விசாரணைக்கு வர உள்ளது.