கரூர்:
தமிழ்நாடு அரசு ஊழியர்சங்கத்தின் கரூர் மாவட்டத் தலைவர் மு.சுப்பிரமணியன், மாவட்டச் செயலாளர் கே.சக்திவேல் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கரூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் ரோஸி வெண்ணிலாவின் ஊழியர் விரோத மற்றும்சங்க விரோத நடவடிக்கைகள் மேலும் மேலும் அதிகரித்து வருகின்றன. ஏற்கனவே ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக முறையீடு செய்ததற்காக, மருத்துவத்துறை நிர்வாக ஊழியர் சங்கத்தின் மாநிலதுணைத் தலைவர் கண்ணன்தொலைதூர மாறுதல் செய்யப்பட்டு இன்றுவரை பணியில் சேர முடியாத நிலை நீடித்து வருகிறது. மேலும் இவரது ஊழியர் விரோத நடவடிக்கையால் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநில துணைத் தலைவரும், கரூர் மாவட்டத் தலைவருமான எம்.சுப்பிரமணியன் உள்ளிட்ட செவிலியர் சங்கநிர்வாகிகள் நான்கு பேர் உள்ளிட்ட 5 பேரும் கடந்தஜூன் 2019 முதல் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
தொடரும் விசாரணை
பின்பு சங்கத்தின் தொடர்முயற்சியால் பணியிடை நீக்க உத்தரவு ரத்து செய்யப்பட்டு, கடந்த பிப்.4 அன்றுமீண்டும் பணியில் சேர்ந்தனர்.இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகார் மனுக்கள் குறித்துஉரிய விசாரணை அலுவலர் நியமிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைமுதல்வர் ரோஸிவெண்ணிலாவின் ஊழியர் விரோதப் போக்கின் ஒரு பகுதியாக, கடந்த பிப்.20 அன்று திடீரென பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஐந்து பேருக்கும் தொலைதூர மாறுதல் வழங்கி உடனடியாக பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவரும், தமிழ்நாடு அரசுஅனைத்து மருந்தாளுநர் சங்கத்தின் மாநிலத் தலைவருமான மு.சுப்பிரமணியனை தென்காசி மாவட்டத்திற்கும், செவிலியர் சங்க மாநிலதுணைத் தலைவர் நல்லம்மாளை திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறுக்கும், செவிலியர் சங்க மாவட்டத்தலைவர் கார்த்திக்கை ஊட்டிக்கும், மாவட்டச் செயலாளர் செல்வராணியை திருப்பூருக்கும், மாவட்டப் பொருளாளர் தனலட்சுமியை திருவள்ளூருக்கும் பழிவாங்கும் மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டம்
இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கையை தமிழ்நாடுஅரசு ஊழியர் சங்கம் வன்மையாகக் கண்டிப்பதோடு, தொடர்ந்து ஊழியர் விரோதப்போக்குடன் செயல்படும் மருத்துவக் கல்லூரி முதல்வர் ரோஸி வெண்ணிலாவை கண்டித்து, பிப்ரவரி 24 (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு, கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு, மாவட்ட அளவிலான கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படவிருக்கிறது. எனவே தமிழக அரசுஉடனடியாக தலையிட்டு பழிவாங்குதல் உத்தரவுகளை ரத்து செய்து, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்என கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.